சற்று முன்
Home / செய்திகள் / கொழும்பில் தமிழ் மக்களை குறிவைத்து பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கை: மனோகணேசன்

கொழும்பில் தமிழ் மக்களை குறிவைத்து பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கை: மனோகணேசன்

கொழும்பில் வாழும் தமிழ் மக்களை குறிவைத்து பொலிஸார் மேற்கொள்ளும் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களை குறிவைத்து பொலிஸ் பதிவு 
கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுகின்றது. எனது மக்கள் என்னிடம் முறைப்பாடு செய்கின்றார்கள். அவர்கள் என்னிடம் தான் கூறுவார்கள். நான் தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை நாடாளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல! என்பதை புரிந்து கொள்ளுங்கள்..”

கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, பொலிஸார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கின்றார்கள். இதுபற்றி ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன். துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளேன். பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன். அவர் இன்று இருக்கின்றாரோ தெரியவில்லை அல்லது யாரையாவது வரவேற்க விமான நிலையத்துக்கு சென்று விட்டாரோ தெரியவில்லை.

கீழ் மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், “மேலிடம் கூறிதான் செய்கின்றோம் சார்”, என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள். யார் அந்த மேலிடம்? யுத்த காலத்தில் ஏதோ ஒரு நியாயம் இருந்தது. இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம்.இன்று யுத்தம் இல்லை.பயங்கரவாதம் இல்லை. அரச பயங்கரவாதம் இல்லை. ஆகவே எதற்காக வீடு வீடாக போகின்றீர்கள்? கதவு கதவாக போகின்றீர்கள்? கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த நாடாளுமன்றத்தில் இல்லையா?

கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு உள்ளவர்கள் இங்கே இல்லையா? இருக்கிறார்கள். அதுபோல் பொலிஸிலும் உள்ளார்கள். பொலிஸ் தரும் தகவல்கள் கிரிமினல்கள், பாதாள உலகத்தினர் கைகளுக்கு போயுள்ளன. கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன.

அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன். இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதை தான் நான் கூறுகிறேன். இங்கே குறிப்பாக கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இவை நடைபெறுகின்றன. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

தவறாக திசை திருப்பல்
இவ்விடத்தில் இடைமறித்த சபையில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பதிலளிக்கையில்,

கொழும்பு பிரதேசத்தில் பதிவு செய்வது தொடர்பாக என்னுடன் நீங்கள் கதைத்தீர்கள். அதுதொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக நான் தெரிவித்தேன். வெளியில் இருந்து வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் பதிவு செய்யும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது யுத்தத்துக்கு முன்பிருந்து இடம்பெறும் நடவடிக்கையாகும். இதன் மூலம் வெளிப்பிரதேசத்தில் குற்றம் ஒன்றை செய்து, கொழும்பில் தங்கி இருக்கின்றார்களா என கண்டுபிடிக்கவே மேற்கொள்கின்றோம்.

அத்துடன் பொலிஸ் பதிவு செய்யும் நடவடிக்கை கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றதொன்று அல்ல. அதேபோன்று தமிழ் மக்களின் வீடுகளை மாத்திரம் தெரிவுசெய்து மேற்கொள்வதல்ல.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழ், சிங்கள முஸ்லிம் என அனைத்து வீடுகளில் உள்ளவர்களும் பதிவு செய்யப்படுகின்றார்கள். இது சாதாரண விடயமாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

இதனை தவறாக திசைதிருப்பவேண்டாம். என்றாலும் இதில் ஏதாவது தவறு இடம்பெறுவதாக நீங்கள் தெரிவிப்பதாக இருந்தால், அதுதொடர்பாகவும் நான் மீண்டும் தேடிப்பார்த்து, உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com