சற்று முன்
Home / செய்திகள் / ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடக மாணவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு கிருஷ்ணராஜா செல்விக்கு

ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடக மாணவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு கிருஷ்ணராஜா செல்விக்கு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும், யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு செல்வி கிருஷ்ணராஜா செல்வி வழங்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா 14.03.2024, 15.03.2024 மற்றும் 16.03.2024 ஆகிய தினங்களில் நடைபெறுகின்றது.

14.03.2024 அன்று நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான இரத்தினபுரி மாவட்டத்தில் கொழும்புகாமம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த செல்வி கிருஷ்ணராஜா செல்விக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இலங்கை இராணுவ ஊரடங்கு வேளையில் அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கும்வகையில், தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது. இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை என்னும் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்பட்டது. முன்னைய ஆண்டு மொனராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு ஏகாந்த நிலையில் வழகப்பட்டது.
அதற்கு முன்னய ஆண்டுகளில் மாத்தளை மாவட்டத்தில் சுதுகங்கை என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி முனியப்பன் துலாபரணி, யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமார், யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த தினேஸ் விஜயதர்சினி ஆகியோர் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொள்ளும் செல்வி கிருஷ்ணராஜா செல்வியினது கருத்துப் பகிர்வு வருமாறு,

எனது பெயர் கிருஷ்ணராஜா செல்வி. நான் இரத்தினபுரி மாவட்டத்தில் கொழும்புகாமம் என்னும் கிராமத்தை பிறப்படமாகக் கொண்டுள்ளேன். எனது தந்தை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் கூலித்தொழிலாளி. நான் எனது ஆரம்பக் கல்வியை இ/ நிவி/தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஆறு வரை பயின்றேன். பின் தரம் ஆறு தொடக்கம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை இ/ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை இ/இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றேன் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த பின் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. எனக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் ஊடகக் கற்கைகள் மற்றும் சமூகவியல் பாடங்களைத் தெரிவு செய்து பயின்று வந்தேன் இரண்டாம் வருடத்தில் இருந்து ஊடகக் கற்கைகள் துறையை சிறப்பு கற்கைகள்துறையாக தெரிவு செய்தேன்.

ஊடகக் கற்கைகள் துறையை சிறப்பு கலையாக தெரிவு செய்யும் போது இதுவரை அறிமுகமே இல்லாத ஒரு துறையினை தெரிவு செய்கிறோமே என சிறு அச்சம் என்னில் ஏற்பட்டது . பின் விரிவுரையாளர்களின் கற்பித்தல் நுட்பங்களும், எமக்கான வழிகாட்டல்கள் மற்றும் அறிவுரைகளும் எனது அச்சத்தினை போக்கி ஆர்வத்தினை என்னுள் அதிகரித்தன.

ஊடகக் கற்கள் துறையில் பாடவிதானத்தோடு செயல்முறை ரீதியான கற்கைகளும் இரண்டாம் வருடம் தொடக்கமே ஆரம்பமாகின. கெமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தல் ,சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதுதல் ,பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கான பக்கவடிவமைப்பு செய்தல், ஆவணப்படம் தயாரித்தல் ,பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுதல் போன்றவற்றை அனுபவரீதியாக செயல்படுத்துவதற்கான தளத்தை ஊடகக் கற்கைகள் துறையால் பெற்றுக் கொண்டேன் . அத்தோடு இறுதியாண்டில் தொழில்துறை சார்ந்த பயிற்சியினை அரச நிறுவனமொன்றில் பெற்றுக் கொண்டதும் அதன் மூலம் ஒரு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையும் மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம்.
விரிவுரைகளுக்கு அப்பால் ஊடகத்துறை சார்ந்தவர்களின், துறைசார் நிபுணர்களின் அனுபவப்பகிர்வுகள் மற்றும் ஊடகப் பயிற்சி கருத்தரங்குகளில் பங்கு பற்றியமை போன்றனவும் எமக்கான மேலதிக அறிவையும் அனுபவத்தையும் பெற்று தந்தது. மும்மொழி புலமை,பால்நிலை அடிப்படையில் நடுநிலையான அறிவு கற்கும் போதே தொழில் அடிப்படையிலான பிரயோக அறிவு என்பன ஊடக கற்கைகள் துறையின் மூலம் எமக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களாகும் .

தற்போது ஊடகக் கற்கைகள் துறையை சிறப்புக் கலையாகக் கொண்ட எமது சகோதரர்கள் பலர் இன்றும் பல்வேறான ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . இதே போல் நானும் ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருக்கின்றது . அந்த ஆர்வத்தின் ஒரு ஆரம்பமாக ஊடக கற்கைகள் துறையினால் ஏற்படுத்தி தரப்பட்ட ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி இலங்கை பாராளுமன்றத்தில் தற்காலிக பணியாளராக சட்டமூல அலுவலகத்தில் தற்சமயம் பணியாற்றி வருகின்றேன். எதிர்காலத்தில் ஊடக ஒழுக்கநெறிகளுடன் கூடிய ஒரு சிறந்த ஊடகவியலாளராக எம் சமூகத்திற்காக எவ்வித பாகுபாடுகளுமின்றி பணியாற்றுவதே என் இலட்சியமாகும்.

அந்தவகையில் எமக்கான வழிகாட்டிகளாக நின்ற ஊடகக் கற்கைகள் துறையின் துறையின் முன்நாள் தலைவரும் கலைப்பீட த்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் அவர்களுக்கும் ஊடக கற்கைகள் துறையின் தலைவர் திருமதி. பூங்குழலி சிறீ சங்கீரத்தனன் அவர்களுக்கும், விரிவுரையாளர்களான திரு.யூட் தினேஸ் கொடுதோர் மற்றும் திருமதி அனுதர்ஷி கபிலன் ஆகியோருக்கும் எனக்கு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவியாய் இருந்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன்.

அத்தோடு அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்து கௌரவிக்கும் நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். – என்றுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வேல் சாரங்கனின் வாழ்க்கை கவிதை நூல் PDF

DOC-20230621-WA0042.Download வைத்திய கலாநிதி அமரர் வேல் சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை நூல் 24.06.2023 அன்று வெளியீடு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com