சற்று முன்
Home / சிறப்புக் கட்டுரைகள் / குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் காணப்படும் கழிவுகளினால் சுற்றுச்சூழல் மாசடையும் அபாய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

குறித்த திண்மக்கழிவு தரம்பிரித்தல் நிலையத்தில் கழிவுகள் மலைபோல் தொடர்ச்சியாக குவிக்கப்பட்டுவருவதால் அருகில் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயக் கிணறுகள் பாதிக்கப்படுவதோடு அருகில் வாழும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதனால் அப்பிரதேசத்தில் சுகாதார சீர்கேடுகளையும் மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட முதலாம் வட்டாரமான காரைக்கால் வட்டாரத்தின் காரைக்கால் பகுதியில் நல்லூர் பிரதேச சபையின் திண்மக்கழிவகற்றல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் பிரதேசம் வரலாற்றால் முற்பட்ட ஒரு புனித பிரதோசமாகும் கோண்டாவில், இணுவில், உரும்பிராய் கிராமங்களை இணைக்கும் எல்லைப் பிரதேசமாக காரைக்கால் காணப்படுகின்றது. அங்கு சோழர்காலத்திற்கு முற்பட்ட பழமை வாய்ந்த சிவாலயம் உண்டு. பலநூறு ஆண்டுகளாய் சித்தர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் உண்டு. அண்மையில் காரைக்கால் சிவாலயத்தில் தீர்த்தக்கேணி வெட்டுவதற்காக நிலம் அகழப்பட்டபோது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலத்திற்குரிய தொல்பொருள் சான்றுகள் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியரால் மீட்கப்பட்டுள்ளன. அத்தனை சிறப்புமிக்க ஆலயத்தை ஒரு எல்லையாகவும் இந்துக்களின் புனித மயாணமான காரைக்கால் இந்துமயாணத்தை இன்னோர் எல்லையாகவும் கொண்டே நல்லூர் பிரதேச சபையின் திண்மக்கழிவு தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த திண்மக்கழிவு தரம்பிரிக்கும் நிலையத்தின் ஊடாக திண்மக்கழிவு தரம்பிரித்தல் சீரான முறையில் நடைபெற்றால் அப்பகுதி மக்களுக்கோ விவசாய நிலையங்களுக்கோ பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

எனினும் குறித்த நிலையத்தில் நீண்ட வருடக்கணக்காக கழிவுகள் தரம்பிரிக்கப்படாமல் தேங்கிக் காணப்படுவதால் பலதரப்புக்களும் அசொகரியங்களை சந்திக்க நேர்ந்துவருகின்றது.

திண்மக்கழிவு தரம்பிரிக்கும் நிலையத்தில் கொட்டப்பட்டுவரும் கழிவுகள் நிலைய சுற்றுவேலிக்கு மேலாக எழுந்து பெரும் மலைபோல காட்சியளிப்பதால் அவை காற்றில் பறந்தும் பறவைகள், நாய்கள் உள்ளிட்டவற்றால் இழுத்துச் செல்லப்பட்டும் சுற்றுச் சூழலில் உள்ள விவசாய நிலங்களில் வீசப்படுவதோடு விவசாயக் கிணறுகளிலும் வீசப்பட்டுவருகின்றன. இதனால் விவசாய நடவடிக்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக திண்மக்கழிவகற்றல் நிலையம் மாறியிருக்கின்றது.

தற்போதும் அதிகளவான கழிவுகள் அங்கு கொண்டுவரப்படுவதனால் தரம் பிரிப்பதில் ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு 6 – 8 உழவு இயந்திர கழிவுகள் கொண்டு வரப்பட்டால் , அவை தரம் பிரிக்கப்பட்டு 3 – 4 உழவு இயந்திர கழிவுகளே மீள கொண்டு செல்லப்படுகின்றன. ஏனையவை அங்கேயே தேக்கப்படுகின்றது. இதனால் அங்கு கழிவுகள் அதிகமாக காணப்படுவதனால் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் பாதிப்புகளை எதிர்கொள்வதோடு அருகிலுள்ள விவசாய நிலங்கள் நன்நீர்க்கிணறுகள் என்பனவும் பாதிப்படைகின்றன. அதனால் அங்கு சூழல் மாசடைந்துவருகின்றது.

கடந்த வருடம் ஆடி மாதம் குறித்த திண்மக்கழிவு தரம்பிரித்தல் நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. குறித்த திண்மக் கழிவகற்றல் பகுதியில் சேகரித்து வைக்கபட்ட மருத்துவ கழிவுகள் பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் உடைகள் உட்பட்ட கழிவுப் பொருட்கள் இருந்த இடத்திலேயே தீவிபத்து இடம்பெற்றிருந்தது.

அத் தீயினால் ஏற்பட்ட பெரும் புகைமூட்டத்தினால் அப்பிரதேசத்தை அண்டிய கிரம மக்கள் சுவாசம் உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொண்டனர். குறித்த தீயினை அணைப்பதற்கு யாழ் மாவட்டத்திலுள்ள சுமார் ஐந்துக்கு மேற்பட்ட பிரதேச சபைகள் மற்றும் யாழ் மாநகரசபையின் உதவி பெறப்பட்டு பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே தீ பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அப் பிரதேசத்தில் மிகப்பெரும் சுற்றாடல் மாசு ஏற்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் உக்க கூடிய கழிவுகளை தரம் பிரித்து பசளையாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது நிலையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவுகள் அதிகரித்துள்ளமையால் , பசளையாக்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.குறித்த நிலையத்தை மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து நீக்கி வேறொரு இடத்தில் நிறுவுமாறு கடந்த இரண்டு வருட காலமாக சபை அமர்வுகளில் அப்பிரதேச பிரதேச சபை உறுப்பினர் குரல்கொடுத்துவந்துள்ளார்.

ஆனால் அவரது குரலுக்கு சபை மதிப்பளித்திருக்கவில்லை. கடந்த பாதீட்டில் திண்ம கழிவகற்றலுக்கு என 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் திண்மக் கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தை பிறிதொரு இடத்தில் அமைக்க காணி கொள்வனவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டபோதும் அதனையும் சபை கவனத்தில் எடுக்கவில்லை.

தற்போது தின்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையம் அமைந்துள்ள பகுதி பிறிதொரு இடத்திற்கு மாற்றப்பட்டு அப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மக்களின் சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களினதும் அப்பிரதேச விவசாயிகளினதும் கோரிக்கையாக இருக்கிறது.

இது நல்லூர் பிரதேச சபையின் கவனத்திற்கு

  • யசீகரன்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வேல் சாரங்கனின் வாழ்க்கை கவிதை நூல் PDF

DOC-20230621-WA0042.Download வைத்திய கலாநிதி அமரர் வேல் சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை நூல் 24.06.2023 அன்று வெளியீடு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com