சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / 83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்

83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்

இலங்கையில் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா அரசின் அநீதிப் பட்டியலில் முதல் இடமாக மலையகத்தில் வாழும் மக்கள் மீது நடாத்திய வன்முறைகளையே குறிப்பிட முடியும். வரலாற்றின் வரலாற்றிலிருந்தே ஆரம்பமான இந்த கொடுமைகள் இன்று வரை நீதி கிடைக்காத போராட்டங்களாவே காணப்படுகிறன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த முதல் இனக் கலவரமே மலையகத்திலிருந்து தான் ஆரம்பமானது (சரவணன்.என், 2019). ஜீ.ஜீ. பொன்னம்பலம் 1939 யில் நாவலப்பிட்டியில் மகாவம்சத்தை விமர்சித்ததிலிருந்தே துவேஷத்தை பரப்பி, இனவாத தரப்பினர் பெரும் கலவரத்தையே உண்டுபண்ணியதாக என். சரவணன் 2019 யில் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்தியாவிலிருந்து சுமைகளாக வீசப்பட்ட மக்கள் இலங்கைக்கு வந்தது இலங்கை பொருளாதாரத்தின் சுமையை தங்கள் தலையில் சுமப்பதற்காக. இருப்பினும் இலங்கையிலும் இந்த மக்களை சுமைகளாக எண்ணிய தேசியவாதத்தின் பிடியில் இந்த மக்கள் சிக்கிக்கொண்டு அலைமோதினார்கள்.
18 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் பிரிட்டிச்சாரின் நிலவரிச் சீர்திருத்தம் கிராமப் பொருளாதாரத்தை சிதறடித்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் இலட்சக்கணக்கானோரை சாவு கொண்டது. இந்தக் காலப்பகுதியில் பல நாடுகளை தனது கை நுனியில் வைத்திருந்த பிரிட்டிச் அரசு ஒவ்வொரு நாடுகளுக்குமென மக்களை புலம்பெயர வைத்தனர். இலங்கையையும் கைப்பற்றிருந்த பிரிட்டிச் அரசு பெருந்தோட்ட உற்பத்திக்காக தமிழகத்திலிருந்து மக்களை அழைத்து வந்தார்கள். பஞ்ச பசியினால் துடித்துக்கொண்டிருந்த மக்களை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களின் இரத்தத்தை உறிஞ்ச தொடங்கினார்கள். மிலேச்சத்தனங்களையும் ஒடுக்குமுறைகளையும் அந்த மக்கள் மீது செலுத்தினார்கள். இருப்பினும் இந்த மலையக மக்களின் இரத்தத்தினால் இலங்கை பொருளாதாரம் உயிர் பெற்றது. அவர்களினால் பெற்றுத்தந்த இலாபத்திலிருந்து 5% அளவுக்குக்கூட அந்த மக்களின் நலனுக்காக ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் மாற்றமென்பது 2020 வரையும் அதே நிலையிலையே காணப்படுகிறது. பிரிட்டிஷாரின் கோரப்பிடியிலிருந்து சுதந்திரம் என்ற பெயரில் தப்பித்த மலையக மக்கள் இன்னுமொரு அரக்கனிடம் சிக்கிக்கொண்ட வரலாறு இன்று வரை தொடர்கிறது. முதலில் இவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை வழங்காமல் கொடுமைப்படுத்தினார்கள். கொத்தடிமைகளாக சுரண்டப்பட்ட இம் மக்களின் வியர்வைகான மதிப்பின்றி சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் ஒரு காலக்கட்டத்தில் பலமுறை இந்த மக்களை இந்தியாவுக்கே விரட்டியடிக்க முயன்ற வரலாறு மிக மிலேச்சத்தனமானதும் கூட.
83 கலவரம் என்றாலே தமிழ் – சிங்கள மக்களிடையில் ஏற்பட்டது என அறியப்பட்டாலும் அது வட கிழக்கில் வாழ்ந்த மக்கள் மற்றும் , தெற்கில் வாழ்ந்த சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் என இலங்கை சுத்தமான வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வரலாற்றின் வரலாற்றை எவர் தான் அறிவார்? எப்பொழுதுமே இரண்டு தரப்பினரிடையில் நடக்கும் வன்முறைகளில் மூன்றாவது தரப்பினர் பாதிக்கப்படுவது யதார்தமானதாக இருந்தாலும் அந்த யதார்த்தத்தின் உச்ச கட்டத்தைப் பற்றி அறிய சிறந்த உதாரணமாக 83 இல் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தையே குறிப்பிடலாம். வடக்கிற்கும் தெற்கிற்கும் நடுவில் கொழுந்து எறியப்பட்ட தீயினால் எரிந்தது மலையக மக்களின் தேகங்களே. 1983 ஜூலை 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி பலாலி சாலையில் விடுதலைப்புலிகளின் கண்ணி வெடி தாக்குதலில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். இதைத்தொடர்ந்து 1983 ஜூலை 25 ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர், அவரது அமைச்சர்கள், காவல் துறை,இராணுவம் மற்றும் ஏனைய அரச துறைகளை சார்ந்தவர்களும் இணைந்து முன்னின்று நடத்திய வன்முறையில், கொழும்பு நகரத்திலும், ஏனைய சிங்கள பிரதேசங்களிலேயும் வாழ்ந்த தமிழர்கள் தாக்குதல்களுக்குள்ளாகினர்.
கொழும்பை சுற்றி உள்ள தமிழர்களின் வணிக நிறுவனங்களும் வீடுகளும் முழுமையாக எரிக்கப்பட்டன (கந்தையா சீ, 2015).
கொழும்பு நகரத்தில் ஆரம்பித்த இந்த கொடுமைகள் கண்டி, மாத்தளை, கம்பொல, நாவலப்பிட்டி, கினிகஸ்தேன, நுவரெலியா, பதுளை, பண்டாரவளை என மலையக நகரங்களில் தமிழர்களுக்கு சொந்தமான அனைத்து உடைமைகளையும் நிர்மூலமாக்கினார்கள் (கந்தையா சீ, 2015).
நுவரெலியா நகரின் தமிழர்களின் உடைமைகளை நிர்மூகமாக்கியவர்கள் அதை சுற்றியுள்ள இடங்களையும் விட்டு வைக்க வில்லை. பதுளை நகரத்தில் 60% இராணுவத் தாக்குதலின் விளைவாகச் சின்னா பின்னமானது. இறுதியாக வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் போராளிகளை படுகொலை செய்து தங்களின் இனப்பசியை தற்காலிகமாக தீர்த்துக்கொண்டார்கள்.
கொழும்பு நகரில் வன்முறை தொடங்கி இருபத்து நான்கு மணித்தியாலங்கள் கடந்த பின்பு தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்கள். இருந்தபோதிலும் ஊரடங்கு உத்தரவுக்கு பின்பு நடந்த வன்முறைகளையும் விட குறைந்தளவே வன்முறைகள் ஊரடங்கு உத்தரவுக்கு முன் நடந்தது என குறிப்பிடலாம். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தாலும் இனவாத வெறித்தனத்தை அந்த உத்தரவினால் அடக்க முடியவில்லை. இல்லை… வெறித்தனத்தை அடக்க அரசு முயற்சிக்கவில்லை. ஆகையால் மதம் பிடித்த யானைகள் போல, மனிதர்களும் இனவெறியால் துடித்தார்கள். இதன் விளைவே, சிறுபான்மை தமிழர்களின் ஆடைகளை அகற்றி கேலி செய்து மகிழ்ந்தது இந்த மிலேச்சத்தனம்.
“இந்தக் கலவரத்தினை தமிழ் பயங்கரவாத வன்முறைக்கு எதிரான சிங்களவர்களின் பதிலடி…. சிங்கள மக்களின் தேசிய உணர்வின் விளைவு தான் இது. அவர்களின் தேசிய உணர்வை பதிக்கிறேன்” (அன்றைய ஜனாதிபதி, ஜே.ஆர். ஜயவர்தன- 28.07.1983 இல் இலங்கை வானொலியில் நிகழ்த்திய உரையில்)
1983 வன்முறையின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 2000 எட்டியிருந்தது (ராஜன் ஹீல் அவர்களினால் வெளியிட்ட அறிக்கை). காயமடைந்தோர் 3769. கொள்ளை சம்பவங்கள் 3735 வும், தமிழர்களின் கடைகள் 3200 நாசமாக்கப்பட்டதும் இதற்கு அப்பால் வீடுகள் தீயினால் எரியப்பட்டன.
‘மலையகத் தமிழர் படுகொலை என்கிற நூலை எழுதிய ஆ.அ. அஜந்தா இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“83 ஜூலை கலவரத்தின் போது மலையகத்தில் பாதிக்கப்படாத ஒரு குடும்பமும் கிடயாது. சுமார் 2000 பேர் கொல்லப்பட்டார்கள். சுமார் ஒன்றரை இலட்சம் பேர் அகதிகளாகினார்கள்.

ஆனால் மலையக மக்கள் வெளிப்படையாக ஒருபோதும் தமிழீழத்தை ஆதரித்தவர்களாகக்கூட இருக்க வில்லை (சரவணன் என், 2019). மலையக மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. ஆனால் அவர்களை துன்புறுத்துவதன் மூலம் தமிழீழத்தில் உயிர்பெற்றிருந்த ஆசாரியலை மீட்டலாம் என்பதுவே அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக இருந்தது.
வீ சூரியநாராயணன் கூறுவது போல “இலங்கையில் வேண்டப்பணத்தவர்களாவும், இந்தியாவில் வரவேற்கப்படாதவர்களாவும் இருந்த அபாக்கியசாலிகள்” இறுதியில் உயிரை மட்டும் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கே திரும்பினார்கள்.

1983 யில் நடந்த வன்முறைக்குப் பிறகு மலையகத் தமிழர்கள் ஆயிரக் கணக்கானோர் மீண்டும் தமிழகத்துக்கு அகதிகளாக போனார்கள். மற்றையவர்களின் ஆயிரக்கணக்கானோர் வடப்பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால் வடக்கு மண் மலையக மக்களுக்கு வழங்கிய நீதி சிங்கள பேரினவாத அரசின் அநீதிக்கு மிக நிகரானதுவே. வடக்கு (குறிப்பாக வன்னி) மக்கள் மலையக மக்களை வடப்பகுதிகளில் குடியேற்றம் செய்வதை எதிர்த்து நின்றனர். சிங்கள இனவாதிகளினால் விரட்டியடிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிம்மதியாக தலை வைத்து உறங்க இடமொன்று கிடைக்க வில்லை. வடக்கு மண்ணில் வாழும் மக்களினால் பேரினவாத சக்திகளுக்குள் சிக்கி உயிரை விட்ட மலையக மக்களை வடக்கு மண்ணும் ஏறுக்கொள்ளாத நிலையே காணப்பட்டது. இருப்பினும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக தமிழீழத்தில் நடாத்திய போராட்டத்தின்போது மலையக மக்களின் நேர்மறையான பங்களிப்பும், மறைமுகமான பங்களிப்பும் தமிழீழ போராட்டத்திற்கு கிடைப்பதை தடுக்க எவராலும் முடியவில்லை. ஆனால் அப்பேர்பற்றோரை இதுவரை காலமும் வடக்கு மண் (வன்னி மண் குறிப்பாக) ஏற்றுக்கொள்ள தயங்குவது ஏன்? இப்பொழுதும் நடாத்தப்படும் பிரிவினைகள் ஏராளம் என அம் மக்கள் கூறுகிறார்கள். சாதி வெறியினாலும் , பிரதேச வாதத்தினாலும் குளிர்கொண்ட நம் மக்கள் பேரினவாத கொடுமைகளை மட்டும் எதிர்ப்பதில் உள்ள நியாயம் என்ன?

#அனுஷா சிவலிங்கம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com