சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / முககவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள்!

முககவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள்!

“வடமாகாணத்தில் கோரோனா பரம்பல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் கோரோனா தொற்றுடைய ஒருவர் வடமாகாணத்துக்கு வருகை தந்தால் அவரிலிருந்து இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன” எனவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

நாட்டில் தற்போது நிலவுகின்ற கொரோனா பரம்பல் சூழலில் நிலமையைத் தெளிவுபடுத்தவும் வட மாகாணத்தில் உள்ள மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பற்றியும் வடமாகாண ஆளுநரின் ஆலோசனையின் பிரகாரம் இச்செய்திக்குறிப்பு வெளியிடப்படுகிறது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தை சார்ந்த 2 பேரை கடந்த ஜூலை மாதம் 4ம் திகதி சந்திப்பதற்காக 3 குடும்பங்களைச் சார்ந்த உறவினர்கள் கந்தக்காடு முகாமிற்கு சென்றிருந்தனர்.

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் பலருக்கு கோரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் இந்த 3 குடும்பங்களையும் சேர்ந்த 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்களில் 9 மாத குழந்தை ஒன்றிற்கு காய்ச்சல் ,இருமல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டதனால் அந்தக் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்தக் குழந்தைக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் பணிபுரியும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவரது வீட்டுச் சுற்றாடலில் 4 வீடுகளைச் சேர்ந்தவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நெடுந்தீவில் கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி தரையிறங்கிய அகதி ஒருவர் தற்போது கட்டாய தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர் வருகை தந்ததிலிருந்து 2ம் ,9ம் நாள்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக காங்கேசன்துறையில்; கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி வருகைதந்த 4 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இவர்களில் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனையவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாயைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வந்திருந்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் சில கைதிகளுக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனால் அவர் மீண்டும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கே தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவரது குடும்பத்தைச்சேர்ந்த 7பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்திருந்தார். அவரும் வெலிக்கடைச்சிறைச்சாலைக்கு மீள அழைத்துச் செல்லப்பட்டதுடன் அவருடன் தொடர்பில் இருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வடமாகாணத்தில் கோரோனா பரம்பல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் கோரோனா தொற்றுடைய ஒருவர் வடமாகாணத்துக்கு வருகை தந்தால் அவரிலிருந்து இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே நாம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற கொரோனா பரம்பல் சூழலில் வட மாகாணத்தில் உள்ள மக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும்.

அவசியமின்றி பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளவும்.

அவசியமற்ற பொது நிகழ்வுகள், விளையாட்டுப்போட்டிகள் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும்

தற்போது நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ளவேண்டும். முகக்கவசம் மூக்கு , வாய் என்பவற்றை மூடிக்கொள்ளுமாறு அணிந்திருத்தல் அவசியம்.

முககவசம் அணியாதவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பொது இடங்களில் பொது மக்கள் ஒன்று கூடும்போது 2 பேருக்கு இடையில் ஆகக்குறைந்நது ஒரு மீட்டர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.

எந்த நிறுவனங்களுக்கும் உட்செல்ல முன்னர் சவர்க்காரமிட்டு கை கழுவ வேண்டும். அதே போன்று வெளியே சென்று வீட்டுக்குத்திரும்பியவுடனும் சவர்க்காரமிட்டு கை கழுவ வேண்டும்.

தற்போது இந்தியாவில் கோரோனோ பரம்பல் தீவிரமாக இருப்பதனால் பலர் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வர முயற்சிக்கின்றனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சிலர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே வட மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இந்தியாவிலிருந்து உங்கள் பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக யாராவது வருகை தந்தால் உடனடியாக உங்கள் பிரதேசத்திற்குரிய பொதுச்சுகாதார பரிசோதகர், சுகாதார மருத்துவ அதிகாரி, கிராம சேவையாளர் அல்லது பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோருக்கு தகவல்களை வழங்கி கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com