சற்று முன்
Home / செய்திகள் / 15 ஆம் திகதிக்குள் காணிகளிலிருந்து வெளியேறிவிடுங்கள் – செஞ்சாலைப்பிள்ளைகளுக்கு உத்தரவு

15 ஆம் திகதிக்குள் காணிகளிலிருந்து வெளியேறிவிடுங்கள் – செஞ்சாலைப்பிள்ளைகளுக்கு உத்தரவு

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15ஆம் திகதிக்கு முன் காணியைவிட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் தற்காலிக வீடுகளில் ஒட்டியுள்ளனர்.

இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து இந்தக் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்து வளர்ந்த பிள்ளைகள் திருமணம் செய்த நிலையில் இந்தக் காணியில் மீள்குடியமர்ந்தனர்.

இந்தக் காணி செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களுக்காக 2009 க்கு முன் விடுதலைப்புலிகளால் காணி உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது காணி உரிமையாளர்கள் காணி அனுமதி பத்திரம் ஆவணத்தை வைத்துக்கொண்டு, காணி தங்களுடையது எனவும் அதனை தங்களுக்கே மீளவும் வழங்க வேண்டும் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டினை விசாரித்த மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் மற்றும் 2014ஆம் ஆண்டு சுற்றறிக்கை பிரகாரம் காணி அதன் ஆரம்ப உரிமையாளர்களிடமே வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை வழங்கியதன் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளரினால் காணியை வெளியேறுமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் அரச காணியில் அதிகாரமில்லாது ஆட்சி செய்கின்றீர்கள் எனவும் எனவே அந்தக் காணியை விட்டு ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன் வெளியேறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செஞ்சோலை காணிக்கு உரிமை கோருகின்றவர்களுக்கு செஞ்சோலை காணிகளுக்கு பதிலாக மாற்று அரச காணி வழங்கப்பட்டு அரச வீட்டுத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பிரிதொரு காணிச் சட்டத்தின் படி காணியற்ற ஒருவருக்கு இலங்கையில் எப்பகுதிலாவது ஒரு அரச காணி மாத்திரமே வழங்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே செஞ்சோலை காணிகளுக்கு உரிமை கோருகின்றவர்களுக்கு அரச காணி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் செஞ்சோலை காணிகள் வழங்கப்படுவது எந்த வகையில் நியாயம் என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது செஞ்சோலை காணியில் செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லங்களில் இருந்த 54 பேர் குடும்பங்களாக பதிவு செய்துள்ளனர். அவற்றில் பலர் அந்தக் காணியில் தற்காலிக கொட்டகை அமைத்து குடியிருந்தும் வருகின்றனர்.

அத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் பதினொறாம் திகதி அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் செஞ்சோலை காணிகள் செஞ்சோலைப் பிள்ளைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்திருந்தார் ஆனால் அதற்கு பின் எதுவும் நடக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com