சற்று முன்
Home / செய்திகள் / 500 நாட்களை நோக்கி !! காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் போராட்டம் – ஒன்டாரியோவில் கவனயீர்ப்பு

500 நாட்களை நோக்கி !! காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் போராட்டம் – ஒன்டாரியோவில் கவனயீர்ப்பு

இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களை கண்டுபிடித்தல் மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி அவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் 500 நாட்களை எட்டவுள்ளது.

இதனை முன்னிட்டான மக்கள் போராட்டங்களுக்கு புலம்பெயர் மக்களால் அழைப்பு விடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு,

ஊடக வெளியீடு
புதன்கிழமை, ஆனி 20, 2018

புலம்பெயர்ந்த அனைத்துத் தமிழ் உறவுகளையும் ஏனைய நண்பர்களையும் காணாமலாக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் போராட்டத்துக்குத் தோள் கொடுக்கும் பேரணிக்கு அழைத்து நிற்கிறோம். இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து போராடி வரும் குடும்பங்கள் வரும் ஆடி மாதம், 2018 முற்பகுதியில் 500 நாட்களை பூர்த்தி செய்யவுள்ளனர்.

இத் தோழமைப் பேரணியானது தமிழ்க் கனேடிய செயல்வாதிகளை உள்ளடக்கிய சுயாதீனக் குழு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், இதன் நோக்கங்களாக

(1) காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் அவலநிலை தொடர்பான விழிப்புணர்வை தமிழ் சமூகத்தினரிடமும் பரந்த கனேடிய சமூகத்தினரிடமும் ஏற்படுத்தல்
(2) கிளிநொச்சி மாவட்டத்திலும் மற்றும் வடக்கு கிழக்கெங்கிலும், வரும் ஆடி மாதம் 2ம் திகதி 500 ஆவது நாளைப் பூர்த்தி செய்யவிருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுடன் தோள்கொடுத்து நிற்றல்
(3) காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்தல், குறிப்பாக சரணடைந்தவர்களதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரினதும் பெயர்ப்பட்டியலையும், கடந்த காலத்தில் இருந்ததும் தற்போதுமுள்ள எல்லா ரகசிய முகாம்களினது பட்டியலையும் வெளியிட அழுத்தம் வழங்குதல்.

நம்பமுடியாத வலுவும் துணிச்சலும்மிக்க இத்தமிழ்க் குடும்பங்கள் விடைகள் கிடைக்க வேண்டியவர்கள், இவர்கள் ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்து விட்டார்கள்.

திகதி: சனிக்கிழமை, ஆனி 30, 2018
நேரம் : மாலை 1 மணி
இடம்: நாதன் பிலிப்ஸ் சதுக்கம், டொரோண்டோ, ஒன்டாரியோ

காணாமலாக்கப்பட்டோரது குடும்பங்களின் போராட்டத்தைப் பற்றி

மாசி 19, 2017, போர் நிறைவுற்று 9 வருடங்களின் பின்பு, காணாமற்போனோர் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில், விரக்தியடைந்த காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் பெரும்பாலும் பெண்களைக் கொண்ட குழு ஒன்றுடன் கிளிநொச்சி பிரதான சாலை ஓரத்தில் இருந்துகொண்டு தொடர்ச்சியான சாலையோரப் போராட்டமொன்றை முன்னேடுக்கத்தொடங்கினர். இப்போராட்டம் இதேபோன்ற போராட்டங்களை முன்னெடுப்பதற்குரிய அதிர்வலைகளை வடக்கு-கிழக்கில் ஏற்படுத்தியதுடன் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மற்றும் முல்லைத்தீவிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பமாகின.

இப்போது, இக்குடும்பங்களின் போராட்டங்கள் இரவு பகலாக பெரும் பருவமழைக் காலங்களிலும், எரிக்கும் வெய்யிலிலும், நுளம்புக்கடி மற்றும் தூசி அனைத்தையும் எதிர்கொண்டு சாலையோரத்தில் 500 நாட்களை எட்டவுள்ளபோதும், இன்னும் இவர்கள் விடைகளின்றித் தவிப்பதுடன், இலங்கை அரசாங்கத்தால் உதாசீனம் செய்யப்படுவதுடன், ஜனாதிபதி சிறிசேன ஆரம்பத்தில் இக்குடும்பங்களுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றத் தவறியுள்ளார்.

தமது அன்புக்குரியவர்களோடு மீண்டும் இணைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இக்குடும்பங்கள், இலங்கை அரசிடம் இக்கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
• இறுதிக்கட்டப் போரில் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடல்
• 1978 முதல் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர்ப்பட்டியலை ஆண்டுரீதியாக வெளியிடல்
• பழைய மற்றும் புதிய ரகசியத் தடுப்பு முகாம்களை விசாரணை செய்து அவற்றின் பெயர்ப் பட்டியலை வெளியிடல்

காணாமலாக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் போராட்டத்துக்குத் தோள் கொடுக்கும் பேரணி ஏற்பாட்டுக் குழு வரும் ஆனி 30, 2018 அன்று மிகுந்த துணிவும் ஓர்மமும் மிக்க இக்குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கவும், இவர்களது குரல்கள் இப்போதாவது கேட்கப்படவும், தம்முடன் இப்பேரணியில் இணைந்து கொள்ளுமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் கனேடியர்களையும், ஏனைய சமூகங்களையும் அழைத்து நிற்கிறது.

மேலதிக விபரங்களுக்காகவும் ஊடகம் தொடர்பான கோரிக்கைகளுக்கும்: SolidarityProtest.TamilFoD@gmail.com
*இப்பேரணி சிறுவர்களுக்கு ஏற்றதானதும், பெண்களை மையப்படுத்தியதும் அணுகக்கூடியதுமாகும். உதவிக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com