சற்று முன்
Home / செய்திகள் / போதைப் பொருள் விற்பனையில் பொலிசாருக்கும் தொடர்பு – சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

போதைப் பொருள் விற்பனையில் பொலிசாருக்கும் தொடர்பு – சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறைகளை இங்கு வாழ்கின்ற தமிழ் மகன்தான் செய்துகொண்டிருக்கிறான். உள்ளே இருக்கும் சவாலை – ஆபத்தை நாம் கண்டுகொள்ளாவிட்டால், நாம் உள்ளேயிருந்தே சீரழிந்துவிடுவோம்”

இவ்வாறு தெரிவித்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போதைப்பொருள்கள் விற்பனையில் பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் எனவும்  குறிப்பிட்டிருக்கிறார்.

யாழ்ப்பாண நகரில் இன்று (06) ஆரம்பித்துவைக்கப்பட்ட ‘வன்முறையைத் தவிர்ப்போம் – போதையை ஒழிப்போம்’ என்ற கருப்பொருளிளான வடகிழக்கு சமூக நல்லிணக்கத்துக்கான அமைப்பின் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது இனத்துக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கு பலர் முன்வந்தார். அவர்கள் தமது வாழ்க்கையை மாய்த்துக்கொண்டார்கள். வெளியே இருந்து எமக்கு ஆபத்து வரும் போது, எமது இளைஞர்கள் அதனை துணிந்து தடுத்தார்கள்.

போருக்குப் பின்னரான காலத்தில்கூட கிறிஸ்பூதம் வந்த போது, அது யாரால் செய்யப்படுகிறது என்று தெரிந்திருந்தும்கூட எங்களுடைய இளைஞர்கள் அவர்களைத் துரத்திப் பிடிக்கவும் போராடவும் பயப்பிடவில்லை.

நாவாந்துறையிலே அவ்வாறு செயற்பட்டதனால் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 52 பேருக்கு எதிரான வழக்கில் நான் தற்போதும் முன்னிலையாகிக் கொண்டிருக்கின்றேன்.
வெளியே இருந்து ஆபத்து – சவால் வருகிற போது, நாங்கள் கொதித்தெழுகிறோம்.
ஆனால் இன்று நடைபெறும் வன்முறைகளை செய்பவர்கள் யார்? தமிழ் ஆண் மக்கள் – தமிழ் இளைஞர்கள்.

வாள்களோடு வீதி வீதியாகச் சென்று வீடுகளுக்குள் புகுந்து பெண்களை வாள்களால் வெட்டுபவர்களும் யார்? வெளியிருந்து வந்தவர்கள் இல்லை – வேறு மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் இல்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழ் மகன்தான் அந்த வன்முறையை செய்துகொண்டிருக்கிறான்.

உள்ளே இருக்கும் சவாலை – ஆபத்தை நாம் கண்டுகொள்ளாவிட்டால், நாம் உள்ளேயிருந்தே சீரழிந்துவிடுவோம். ஆகவே இதற்கு எதிரான விழிப்புணர்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது நல்ல விடயம். அரசியல்வாதிகளான நாங்கள் எம்மால் இயன்றதைச் செய்வோம்.

எங்கயாவது போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றது என உங்களுக்கு தகவல் கிடைக்கிறதா – அதனை பொலிஸாரிடம் சென்று சொல்ல அச்சமாகவிருக்கிறதா? இந்த அமைப்பில் உள்ள ஒருவருடன் தொடர்புகொள்ளுங்கள். அதனை முறியடிப்பதற்கு நாம் முயற்சி எடுக்கிறோம்.

பொலிஸாரும் இந்தச் செயற்பாடுகளிலே உடந்தையாக உள்ளனர் என்பது எமக்கு நன்கு தெரிந்த விடயம்.

வாள்வெட்ட யாராவது வருகிறார்களா? அவர்களைத் துரத்திப்பிடியுங்கள். வீரம் செறிந்த மண் இது. அதனால் அவர்களைத் துரத்திப் பிடியுங்கள். ஆனால் ஆயுதம் எடுத்து வன்முறை செய்யாதீர்கள். 10 பேர் சேர்ந்தால் இருவர் கத்தியுடன் ஒன்றும் செய்யமுடியாது.

எங்களுடைய வீரம் இப்போது அப்படியாக எழவேண்டும். எமது தமிழ் இளைஞர்களிடத்திலிருந்தே மக்களைப் பாதுகாக்கவேண்டிய தருணம் எமக்கு வந்துள்ளது. துரதிஸ்டவசமான தருணம் தற்போது வந்துள்ளது. எனினும் நாம் அதனைச் செய்தாகவேண்டும்.

தற்போது உள்ளூராட்சி உறுப்பினர்கள் உள்ளனர். உங்களுடைய பிரதேசத்தில் ஒரு பொறிமுறையை உருவாக்குங்கள். யாராவது வாளுடன் கண்டுகொண்டால், உடனடியாகவே 10 இளைஞர்களை ஒன்றுதிரட்டுவதற்கான ஒரு பொறிமுறையை ஏற்படுத்துங்கள். தேவையானவற்றை நாங்கள் செய்கின்றோம்.

இன்றிலிருந்து – இதற்குப் பிறகு யாழ்ப்பாணத்திலே வாள்வெட்டு நடக்கக் கூடாது. அவ்வாறான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ஒரு குடும்பத்திலே கண்வன், மனைவியைத் தாக்கியதாக செய்தி வரக்கூடாது. ஒரு வீட்டுக்குள்ளே சத்தம் கேட்டால், அது உள்வீட்டுப் பிரச்சினை என்று பேசாமல் இருக்கவேண்டாம். தாக்கப்படுவது எங்களுடைய சகோதரி. அது கடவுளாக இருந்தாலும் சரி பரவாயில்லை – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com