சற்று முன்
Home / செய்திகள் / தமிழர் பிரச்சனைகளை சிங்கள மக்களுக்கு நேரடியாக தெளிவுபடுத்தி தீர்வைப் பெறுவோம் – வடக்கு முதல்வர்

தமிழர் பிரச்சனைகளை சிங்கள மக்களுக்கு நேரடியாக தெளிவுபடுத்தி தீர்வைப் பெறுவோம் – வடக்கு முதல்வர்

CM-1தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறை தீர்வே எமது எதிர்பார்ப்பு. சிங்கள மக்களுடன் பிரச்சினைகளைப் பேசி தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் நேற்றுக் கொழும்பில் தெரிவித்தார்.

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது சிங்கள மக்களோடு எமது பிரச்சினைகளைப் பேசி அதன் மூலம் சிறந்ததொரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென நாம் நம்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் “வடக்கு தெற்கிற்கான உரையாடல்” என்ற தொனிப் பொருளில் செய்தியாளர் மாநாடொன்று நேற்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டதுடன் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்களுக்கு வடக்கு முதலமைச்சர் மூன்று மொழிகளிலும் பதில்களை வழங்கினார்.

வடக்கிலிருந்து நாம் பேசுவது தெற்கில் திரிவுபடுத்தப்பட்டே மக்களிடம் சேர்கிறது

வடக்கிலிருந்து நாம் பேசுவதும் எமது பிரச்சினைகளும் திரிபுபடுத்தப்பட்டே தெற்கு மக்களிடம் போய்ச் சேருகிறது. இதனால் எமது உண்மையான பிரச்சினை என்னவென்று தெற்கு மக்கள் உணர்ந்து கொள்ளாமல் உள்ளனர். நாம் தெற்கின் பல பகுதிகளுக்கும் சென்று அதனை தெளிவுபடுத்துவோம் எமது செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டாலும் நாம் இதனை மேற்கொள்வோம். இரு பகுதி மக்களும் பேசினால் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

‘சமஷ்டி’ என்பதை சிங்கள மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

சமஷ்டி என்பது நாட்டைப் பிரிப்பதல்ல. நாட்டை ஒன்றிணைப்பதே என்பதே அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். புலிகளை வைராக்கியத்துடன் பார்த்த மக்கள் இப்போதும் தமிழ் மக்களின் தேவைகள் எதிர்பார்ப்புகள் பற்றி நாம் பேசும் போது வைராக்கியமாகவும், இனவாதமாகவுமே பார்க்கின்றனர். எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவது எவ்வாறு இனவாதமாகும்?

வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு கோரி வருகின்றீர்களே? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் யுத்தம் முடிவடைந்து 07 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் படையினரின் தேவை அங்கு கிடையாது. பொலிசாரின் சேவை தாராளமாகப் போதும் தேவைப்படின் பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். எவராவது குகைக்குள் இருந்து கிளம்பிவிடுவார் என எதிர்பார்ப்பது மடமையாகும். அப்படி நினைத்துக்கொண்டு இன்னும் நூறு வருடமானாலும் படையினரை அப்படியே வைத்திருப்பது நியாயம் என்று நீங்கள் கூறிகிறீர்களா என அவர் கேள்வி எழுப்பினார்.

படையினருக்கு அங்கிருந்து வெளியேறுவது விருப்பமில்லை. அவர்கள் அங்கு மக்களின் 65,000 ஏக்கர் காணிகளை பிடித்து வைத்துள்ளனர். எமது மக்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர். படையினர் அந்தக் காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதும் வியாபாரம் செய்வது ஹோட்டல் கட்டுவதுமே இடம்பெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மாவீரர் தினம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்;

தமது பிள்ளைகள் அல்லது குடும்பத்தினர் இறந்துவிட்டால் அவர்களுக்காக பிரார்த்திப்பது அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிற்காக சமய வழிபாடுகளை மேற்கொள்வது எவ்வாறு தவறாகும்? சிங்கள மக்களும் இதனைச் செய்வார்களே? அன்று பிரபாகரன் பிறந்த நாளை அதற்காக தேர்ந்தெடுத்ததால் அந்த தினத்திலேயே தொடரந்து இது இடம்பெறுகிறது.

அதற்காக அவரது பிறந்தநாளை வேறு தினத்திற்கு மாற்ற முடியாது? இதன் மூலம் தென்னிலங்கை மக்களுக்கு என்ன பிரச்சினை என்பது தான் புரியாமலுள்ளது. புலிகளைப் பற்றியே பேசுபவர்கள் புலிகள் ஏன் உருவானார்கள் என பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டினால் இந்தப் பிரச்சினைகளே இல்லாமல் போய்விடும்.

நாம் எது செய்தாலும் கேள்வி கேட்பவர்கள் எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒத்துழையுங்கள். எமது பிரச்சினைகளை சரியாக உணர்ந்து அதற்குத் தீர்வு கிடைக்க அரசாங்கத்துக்குத் தெரிவியுங்கள். நாம் அனைத்து மக்களுடனும் ஒற்றுமையாகவே வாழ விரும்புகிறோம். 1948 காலத்தில் நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்ந்தோம் அதை மறக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

‘யுத்த குற்றம்’ தொடர்பில் குறிப்பிட்ட அவர்

சர்வதேச தலையீடு இருந்தால் மட்டுமே அது நீதியானதாக இடம்பெறும் என வலியுறுதிக் கூறினார். அதற்கான காரணங்களையும் அவர் தெளிவுபடுத்தினார்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com