“மிகப்பெரிய கடற்படையை கொண்ட சீனாவோ அல்லது பாகிஸ்தானோ கூட தங்கள் கப்பல்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகுவதை விரும்பியிருக்க மாட்டார்கள்”
ஓய்வு பெற்ற இந்திய இராணுவத்தின் அதிகாரியும், முன்னணி இராணுவ ஆய்வாளரும், பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்த பல்கலைக்கழகங்களின் வருகை தரும் சிறப்பு விரிவுரையாளரும்,உலக இராணுவ நகர்வுகள் குறித்து ஆங்கில, தமிழ் ஊடகங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான மேஜர் மதன் குமார் சிறப்பு நேர்காணல்

சீனாவின் உளவுக் கப்பல் அம்பாந்தோட்டைக்கும் பாகிஸ்தான் உலகக் கப்பல் கொழும்புக்கும் வருவதற்கு இலங்கை அரசு அனுமதித்திருக்கிறது இதனை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
முதலாவது சீனாவின் யாங்வாங் உளவுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு முதலில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது பின்னர் வரவேண்டாம் என கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. கப்பல் வருவதாக குறிப்பிட்டிருந்த நாளன்றும் கப்பல் அம்பாந்தோட்டைக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. தற்பொழுது கிடைத்த தகவல்களின்படி அந்த கப்பலானது தனது பயணத் திசையை மாற்றி வேறு திசையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. முதலில் சீனாவுக்கு அனுமதி கொடுத்த இலங்கை அரசாங்கம் பின்னர் இந்தியாவின் கடுமையான அழுத்தத்தினால்தான் பின்வாங்கிக்கொண்டதாக நாம் பார்க்கவேண்டும். இரண்டாவது பாகிஸ்தானிய போர்க்கப்பல். பாகிஸ்தான் சீனாவிடமிருந்து வாங்கிய போர்க்கப்பல் சீனாவின் துறைமுகத்தில் கட்டமைக்கப்பட்டு அது பாகிஸ்தான் நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது எரிபொருள் உள்ளிட்ட தேவைகளுக்காக இலங்கைக்கு வருவதாக கூறப்பட்டது. இதனைப் போர்க்கால் என்று கூறுவார்கள். அவர்கள் பங்களாதேசிடமும் போர்க்கால் கேட்டிருக்கிறார்கள். பங்களாதேஸ் அரசு அதற்கான அனுமதியை வழங்காது மறுத்துவிட்டது. ஆனால் இலங்கை அரசாங்கம் இதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றது. இதற்கு முன்பு பல நாட்டு போர்க்கப்பல்கள் தனது எதிரி நாடு அல்லாத நாடுகளிடம் இவ்வாறு கேட்டு துறைமுகங்களுக்கு வருவது வழக்கமான ஒரு நிகழ்வாக இருந்தாலும் இந்தியாவின் நேரடி எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் எப்பொழுதுமே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது இந்தியாவுடன் நான்கு யுத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தானின் கப்பலுக்கு இலங்கை அனுமதி கொடுத்ததை இந்தியா நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது.
சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியா உள்ளிட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படும் ?
இக் கப்பல்களை நாங்கள் இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்றும் பொதுமக்களுக்கான போக்குவரத்துக் கப்பல்கள் மற்றயவை இராணுவக் கப்பல்கள். சீனாவின் கப்பலானது ராணுவ தரவரிசைக்குள் இல்லாவிட்டாலும் இக்கப்பலில் உபயோகிக்கப்படும் அன்ரனாக்கள், மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் இவை எல்லாமே மிசைல் என்ற ஏவுகணை மற்றும் ரொக்கட்டுக்களை ராக் செய்து கண்காணிப்பதற்கான ஒரு துணை அமைப்பாகத்தான் நாம் பார்க்க முடியும். இக் கப்பலினுடைய கண்காணிக்கும் தூரம் என்பது 250 கிலோமீற்றர் ஆகக் காணப்படுகின்றது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்பவே சீனாவின் கப்பல் வருவதாக சீனா கூறியிருக்கிறது. இலங்கை ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையில் சிக்கித்தவிப்பதை நாங்கள் எல்லோரும் நன்கறிவோம். ஏற்கனவே இலங்கை நெருக்கடியில் இருக்கும்பொழுது அதன் துறைமுகத்திற்கு நாங்கள் எரிபொருள் நிரப்ப செல்கின்றோம் என்ற கூற்று உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பார்க்கின்றபொழுது அம்பாந்தோட்டையிலிருந்து 200 மைல் தூரத்தில் இருக்கக்கூடிய தென்னிந்தியாவின் மிக முக்கியமான பகுதிகளான சட்டஸ்ரிக் அசற்ஸ் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான தளபாடங்கள், கூடங்குளம் அணு மின் நிலையம், கால்ப்பாக்கம் அணு மின் நிலயம் மற்றும் மேற்குப் பக்கமாக இருக்கக்கூடிய கொச்சி கொமாண்டோஸ் தலமையகம், இந்திய கப்பல் படையின் தலமையகம், மற்றும் ஆறு முக்கிய துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விமானம், ராக்கெற் மற்றும் ஏவுகணை இதனை விட முக்கியமாக சிறிகரிக் கோட்டா விண்வெளி மையம் இவை அனைத்தையும் இலங்கையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இருந்தபடி நாளை ஏற்படப்போகும் யுத்தம் ஒன்றிற்கு தயாராகக் கூடிய மிக முக்கியமான தகவல்களை இக்கப்பல் மூலம் நிச்சயமாக பெற முடியும்.
2009 ஆம் ஆண்டுக்கு முன் விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறு சீன பாகிஸ்தான் கப்பல்கள் இலங்கைக்கு வந்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா?
2009 என்பதைவிட 2008 க்கு முன் என பார்ப்போமேயானால் இதில் 3 முக்கியமான ஸ்ரேகோலர்கள் இருக்கிறார்கள். இன்று இலங்கை அரசு இந்திய அரசு சீனா என 3 பிரதான மையங்கள் இருந்தன. ஆனால் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு பகுதியில் மிக வலுவான நிலையில் இருந்தார்கள் இப்படி ஒரு துறைமுகத்தை நோக்கி அந்நிய நாட்டு கப்பல் ஒன்று வருகிறது என்றால் விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் உள் நுழைய முடியாது. விடுதலைப்புலிகளின் ஆயுத போக்குவரத்துடன் தொடர்புபட்ட கப்பல்கள் தொடர்பான உளவுத் தகவல்களை சீனாதான் இலங்கை அரசுக்கு பரிமாறிக்கொண்டிருந்தது. அவ்வாறான சூழலில் சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை விடுதலைப்புலிகள் அன்றைய காலகட்டங்களில் அனுமதித்ததே இல்லை. இராணுவ கப்பல் இல்லாது தற்போது அம்பாந்தோட்டை வர முனையும் உளவுக் கப்பல்களைக் கூட அவர்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள் நிச்சயமாக அந்த கப்பல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம் இருந்திருக்கின்றன. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை எந்த ஒரு நாடும் விரும்பியிருக்கவும் மாட்டாது. மிகப்பெரிய கடற்படையை கொண்ட சீனாவோ அல்லது பாகிஸ்தானோ கூட தங்கள் கப்பல்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகுவதை விரும்பியிருக்க மாட்டார்கள். இந்த எதிர்ப்புகளை கருத்தில் கொண்டுதான் அவர்களுடைய இராஜாங்க நடவடிக்கைகள் அமைந்திருக்கும்.
சீனா – அமெரிக்கா – இந்தியா என நகரும் சிறிலங்காவின் அரசியல் போக்கினை இந்தியா எவ்வாறு சதகமாக கையாளும் ?
இலங்கை ஒரு சிறிய தீவு. இலங்கையின் கடந்த பத்து வருட வரலாற்றை எடுத்துக்கொண்டால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின் முற்றுமுழுதாக சீனா சார்பு நிலைக்கு இலங்கை மாறிவிட்டது. 1970களில் இருந்து இலங்கை ஒரு அந்தப் பக்கமும் சாராமல் எந்தப் பக்கமும் சாராமல் ஒரு நடுநிலை அரசியல் போக்கினையே தனது வெளியுறவுக் கொள்கையாக கொண்டு வந்திருந்தது ஆனால் ராஜபக்சேவின் வருகைக்கு பின் குறிப்பாக ஈழப்போர் முடிவுக்கு வரும்போது இந்தியாவை விட்டு தூர விலகி சீனாவின் சார்பு நிலையை இலங்கை எடுத்துவிட்டது. இதன் தொடக்கம் 2004ல் இருந்து ஆரம்பமாகி 2009 வரை இந்த கட்டமைப்பு மிக வேகமாக வளர்ந்தது. அதன்பிறகு அதன் பிறகு இது பல பரிமாணங்களில் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆக இருக்கட்டும் மத்தள விமான நிலையமாக இருக்கட்டும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் ஆக இருக்கட்டும் இது போன்ற பல விடயங்களை சீன சார்பு நிலையை எடுத்து இலங்கை வெகு வேகமாக வெகு தூரம் சென்றுவிட்டது. இதன்பின்பு உலக அரசியலில் குவாட் அமைப்பு உருவாகியது. குவாட் அமைப்பு ஏற்கனவே இருந்தாலும் குவாட் அமைப்பின் செயல் வடிவம் நரேந்திர மோடி அரசு வந்த பிறகுதான் செயல்வடிவம் பெற்றது. குவாட் அமைப்பில் மிக முக்கியமான நாடாக இருக்கக்கூடிய அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ அவர்கள் டிரம் ஆட்சி முடிவதற்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு வருகை தந்தபோது இலங்கை ஒரு சார்பு நிலை எடுக்க வேண்டும் என்று ராஜபக்ஷக்களுக்கு மிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவ்வாறான சார்பு நிலை என்பது இலங்கை குவாட் அமைப்பில் பங்கேற்க வேண்டும் இந்திய அமெரிக்க நாடுகளின் கரங்களை பலப்படுத்த வேண்டும் அவ்வாறான ஒரு நிர்ப்பந்தம் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இலங்கை குவாட் அமைப்பில் சேர்வதற்கான ஒப்புதலை இந்தியா வழங்கியிருந்தது. பூகோள ரீதியில் குவாட் அமைப்பில் இந்தியா முக்கியமான ஓர் இடத்தில் பசுபிக் பெருங்கடலில் இருக்கிறது. அவ்வாறான ஒரு நிலையில் இந்தியாவும் தனது ஒத்துழைப்பினை வழங்கும் பொழுதும் இலங்கை அப்பொழுதும் அந்த சார்பு நிலையை எடுக்கவில்லை. தனது செயற்பாடு சீனாவை கோபம் ஊட்டிவிடுமோ என்று இலங்கை நினைத்தது. இலங்கை சீனாவுக்கு நெருக்கமாக இருந்ததால் தனக்கான ஆபத்தை உணர தவறிவிட்டது. இன்று சீன சார்பு நாடு என்ற முத்திரை இலங்கை மேல் விழுந்து விட்டது. ஆனால் கோவிட் தொற்றுநோய் வந்த பிறகு இலங்கையில் இன்னுமொரு பாரிய மாற்றம் ஏற்பட்டது. ராஜபக்சக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆட்சி அமைத்தார்கள். எனினும் அவர்களால் கோவிட்டை சமாளிக்க முடியவில்லை. இலங்கையின் பொருளாதாரம் மிக வேகமாக சரிவினைச் சந்தித்தது. நீங்கள் யாருக்கு அருகில் சென்றீர்களோ அவர்களின் உதவியை உங்களால் பெற முடியவில்லை. என்ற நிலையில் சீனாவை தஞ்சம் என்று இருந்த இலங்கைக்கு பெரிய அளவில் சீனாவின் உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்பொழுதும் இந்தியாதான் இலங்கைக்கு துணை நின்றது. இப்பொழுது ஒரு திரிசங்கு நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் சீன சார்பு நிலையில் இலங்கை பயணிக்கும் ஆக இருந்தால் இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றம் ஏற்படுவதை காணக் கூடியதாக இருக்கும்.
நன்றி – உரிமை மின்னிதழ்