இருபத்து ஓராம் நூற்றாண்டின் மிகக் கோரமான தமிழின அழிப்பின் நினைவுச்சின்னமாக “வட்டுவாகல் பாலம்” பாதுகாக்கப்பட் வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியிருக்கும் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் வட்டுவாகல் பாலத்தை அழித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் சிறிலங்கா அரசின் முயற்சியையும் அதற்கு துணைபோகும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
வாரந்தோறும் தனது அவதானிப்பு அறிக்கையினை வெளியிட்டுவரும் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் இந்த வாரம் (23.02.2025) வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது. இது தொடர்பில் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள இந்த வார அறிக்கை வருமாறு,
வட்டுவாகல் பாலம், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ளது, இது முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளை இணைக்கும் முக்கியப் பாலமாகும்.
2009 ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், வட்டுவாகல் பாலம் சுமார் இரண்ரரை இலட்சம் தமிழ் மக்கள் தங்கள் வலிகளையும் துயரங்களையும் சுமந்துகொண்டு தங்கள் நம்பிக்கைகளைத் தொலைத்துவிட்டு நடைபிணங்களாக சிறிலங்கா இராணுவத்திடம் சரணடையுமிடமாக அமைந்தது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தமிழர்கள் தங்கள் இன விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்களை மௌனித்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டபோதும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தழும்பாகவும், நினைவாகவும் உள்ளது. ஆனால், தமிழர்களால் தமிழின துரோகக் கட்சியாகப் பார்க்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சியின் துணையோடு தற்போது இலங்கை அரசு இந்த பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தமிழின அழிப்பின் சாட்சியமாக இருக்கும் அந்த வரலாற்றுச் சின்னத்தை அழித்து, அதன் நினைவுகளைப் போக்க அரசாங்கம் முயற்சி செய்யும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனை தடுக்க ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
ஏன் வட்டுவாகல் பாலம் பாதுகாக்கப்பட வேண்டும்
வட்டுவாகல் பாலத்தைப் பாதுகாப்பது என்பது தமிழினத்தைக் கொன்றழித்தபின் எஞ்சிய மக்கள் உயிர்களைக் பிடித்துக்கொண்டு அந்த குறுகிய பாலத்திநூடாக நடைபிணங்களாக கடந்துவந்த நினைவுகளைச் சுமப்பது மட்டுமல்ல அது உலக அரங்கில் தமிழர்களின் உண்மைச் சரித்திரத்தை பதிவு செய்யவும் சர்வதேச பார்வையை ஈர்த்து, நீதிக்கான போராட்டத்தில் முக்கியமான அடையாளமாக உருவாக்கும். வட்டுவாகல் பாலம் என்பது யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகவும், அந்த துயரங்களைப் பதிவு செய்யும் இடமாகவும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. உலகில் பல இடங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அந்த வரிசையில் வட்டுவாகல் பாலமும் அத்தகைய நினைவிடமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்படும் யுத்த நினைவுச்சின்னங்கள்
இன்றுவரை யுத்தங்களின் கோரங்களை வெளிக்காட்டும்வகையில் சர்வதேச ரீதியில் இன அழிப்புக்கள் நடைபெற்ற இடங்கள் யுத்த நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் ஹிரோஷிமா அமைதிக் கோபுரம் (Hiroshima Peace Memorial), ஜப்பான் – 1945 ஆம் ஆண்டு அணு வெடிப்பால் அழிவடைந்த இடமாக, நினைவு சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.பெர்லின் சுவர் (Berlin Wall), ஜெர்மனி – கிழக்கு-மேற்கு பிரிவினையின் அடையாளமாக இருந்த இது, இன்று ஒரு முக்கியமான வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அவுச்விட்ஸ் நினைவகம் (Auschwitz Memorial), போலந்து – இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளால் நடத்தப்பட்ட அழிப்புக் குழுக்களின் சாட்சியமாக நின்று கொண்டிருக்கும் நினைவுச்சின்னமாக பாதுக்கப்படுகின்றது.நங்கிங்க் படுகொலை நினைவகம் (Nanjing Massacre Memorial), சீனா – ஜப்பானிய படைகள் நடத்திய படுகொலைகளின் நினைவாக பாதுகாக்கப்பட்டுள்ள முக்கியமான தளமாகும். இவற்றைப் போலவே, வட்டுவாகல் பாலத்தையும் தமிழின அழிப்பின் கோரத்தை வெளிப்படுத்தும் வகையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவாக பாதுகாக்க வேண்டும்.
இலங்கை அரசு எதற்காக இந்த பாலத்தை இடிக்க விரும்புகிறது?
இலங்கை அரசாங்கம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முக்கியமான நினைவுச் சின்னங்களை அழித்து, அதன் அடையாளங்களை மூடிமறைக்க முயற்சி செய்கிறது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டபோதும், அதை அப்படியே பாதுகாக்காமல், அதன் அழிவை மறைக்கப் புதுப்பித்தது, ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ் நூலகம் இன்றுவரை யுத்தத்தின் தழும்புகளுடன் பாதுகாக்கப்பட்டிருந்தால் அது சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றிருக்கும். யாழ் நூலகத்திற்கு அருகில் சர்வதேச தரத்தில் புதிதாக ஒரு நூலகத்தை அமைத்து அதனைப் பேணியிருக்கலாம்.
தொடரும் தமிழினத் துரோகங்கள்
ஆனால் தமிழர்களே குறிப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு தமிழினத்தை காட்டிக்கொடுத்து விற்றுப் பிழைப்பு நடத்தும் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளே தமினத்தின் யுத்த அடையாளங்களை மூடி மறைத்து அவற்றிற்கு வெள்ளையடித்து இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்து வருகின்றது. யாழ் பொது நூலகம் தமிழர் விடுலைக் கூட்டணியாலேயே புனரமைக்கப்பட்டு யுத்தத்தின் தழும்புகள் மறைத்து வெள்ளையடிக்கப்பட்டது. இன்று வட்டுவாகல் பாலத்தை இடித்தழித்து புதிய பாலம் கட்டுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனே இலங்கை அரசாங்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கிறார். அவரின் ஏற்பாட்டில்தான் இலங்கை அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் வட்டுவாகல் பாலத்தை இடித்தழித்து புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
வட்டுவாகல் பாலத்தை புதுப்பித்து அதன் உண்மையான வரலாற்றை அழிக்க இலங்கை அரசு திட்டமிடுகிறது. இது தமிழர்களின் நினைவுச் சின்னங்களை அழிக்கும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
வட்டுவாகல் பாலத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்
யுனெஸ்கோவின் துணை அமைப்புக்களாகச் செயற்பட்டுவரும், ICCROM, ICOMOS ஆகிய அமைப்புகளை நாடி அவற்றின் உதவியினைக் கோருவதன் மூலம் வட்டுவாகல் பாலத்தினைப் பாதுகாக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கலாம். ICOMOS என்பது வரலாற்று நினைவுச்சின்னங்களை பாதுகாக்கும், மறுசீரமைக்கும் உலகளாவிய முக்கிய அமைப்பாக செயல்படுகிறது. இது யுனெஸ்கோவின் முக்கிய ஆலோசனை அமைப்பாக இருப்பதால், உலக பாரம்பரிய தளங்களை பாதுகாக்க இதில் முக்கிய பங்கு உண்டு. அது போலவே ICCROM உலகளவில் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரியக் கலாச்சாரங்களை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பாகும். இது யுத்தத்தால் சேதமடைந்த இடங்களை மறுசீரமைக்கவும், வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும் உலகளாவிய ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் இந்த அமைப்புக்களை நோக்கி கோரிக்கைவிடவேண்டும்.
இன்று ஈழத்தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்ந்துவரும் நிலையில் வட்டுவாகல் பாலத்தை ஒரு வரலாற்று பாரம்பரிய தளமாக அறிவிக்க UNESCO விடம் கோரிக்கை விடுக்கலாம். அவ்வாறே ICCROM இடம் வட்டுவாகல் பாலத்தை பாதுகாக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறலாம். ICOMOS இடம் இந்த இடத்தை "Heritage at Risk" பட்டியலில் சேர்ப்பதற்கு முயற்சி செய்யலாம். அவ்வாறே மக்கள் ஆதரவு பெறுவதற்கு Change.org மற்றும் Avaaz.org போன்ற தளங்களில் மனுக்களை உருவாக்கலாம்.
ICCROM அமைப்பானது சிரியாவில் யுத்தத்தால் சேதமடைந்த பாறை கோயில்களின் (Palmyra, Aleppo Citadel) மறுசீரமைப்பு, இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த பாரம்பரிய கட்டிடங்கள் பாதுகாத்தல், இராக்கில் ISIS தாக்குதலில் அழிக்கப்பட்ட கலாச்சாரச் சொத்துக்களை மீட்டெடுத்தல் போன்ற சர்வதேச ரீதியிலான பணிகளில் பங்காற்றியிருக்கிறது. இவற்றின் உதவிகளைக் கோருவதன் மூலம் பாலத்தின் தற்போதைய அமைப்பை சேதமடையாமல் அப்படியே பாதுகாப்பதோடு பாலம் அருகே நினைவுத்தூபி அல்லது அருங்காட்சியகம் (War Memorial & Museum) ஒன்றை அமைத்து தமிழின அழிப்பின் சாட்சியங்களை பதிவுசெய்ய முடியும்.
தமிழ்த்தேசிய அவதானிப்பு மையத்தின் தயவான வேண்டுகோள்
அனைத்து தமிழ் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழ் சமூகங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் நீதி உணர்வுள்ள அனைவரும் இணைந்து, வட்டுவாகல் பாலத்தை யுத்த நினைவுச் சின்னமாக பாதுகாக்கும் முயற்சியில் இணைந்து போராட வேண்டும். தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை அழிக்க இடமளிக்கக் கூடாது. வரலாற்றை மறைக்க நினைப்பவர்களை எதிர்த்துப் போராடுவோம்! வட்டுவாகல் பாலத்தை இடிக்காமல், அதை சர்வதேச அளவில் நினைவுச்சின்னமாக பாதுகாக்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!
என தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நன்றி உரிமை மின்னிதழ்
Post a Comment