சற்று முன்
Home / செய்திகள் / தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள் – உண்மைகளை உடைக்கிறார் தமிழக சட்டத்தரணி ஜான்சன்

தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள் – உண்மைகளை உடைக்கிறார் தமிழக சட்டத்தரணி ஜான்சன்

தமிழக அகதிகள் முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் ஈழத்தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழ்கள் 21 பேர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் தீக்குளித்த நிலையில், அவருக்கு திருச்சி அரச வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் 30 பேர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 30 பேரையும் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திருச்சி அகதிகள் முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஈழத் தமிழர் நலன்கள் தொடர்பில்தமிழகத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் சட்டத்தரணி ஜான்சன் நேர்காணல் ஒன்றினை வழங்கியுள்ளார். அவரது நேர்காணல் வருமாறு,

  1. திருச்சி சிறப்பு முகாமில் கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த அவல நிலை பற்றி தங்களின் அவதானிப்பு என்ன?

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அயல்நாட்டவரை அடைத்து வைப்பதற்கான சிறப்பு முகாமில் தற்பொழுது 104 ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த 20.05.2022 முதல் தொடர்சியான பல்வேறு கட்ட பட்டினிப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அயல்நாட்டினர் சட்டம் 1946 பிரிவு 3 (2) இன் படி, குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஈழத்தமிழர்கள் சிறையிலிருந்து வெளிவரும் மறுகணமே, தமிழக அரசின் கியூ பிரிவு காவல்துறையின் பரிந்துரையின் பேரில் சிறப்பு முகாமில் சிறை வைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1990 இல் போராளி இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வேலூர் கோட்டையில் சிறப்பு முகாம் உருவாகி, பின்னர் செங்கல்பட்டு, மதுரை மேலூர், திருச்சி துறையூர், திருவையாறு, பழனி, பூந்தமல்லி, செய்யாறு, திருச்சி போன்ற இடங்களில் ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகள் சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். கடந்த 2009 இல் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் முற்றும் முழுக்க இந்தியாவில் இல்லாத நிலையில் இன்றளவும் ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்படுவது சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரானதாகும். தற்பொழுது திருச்சி சிறப்பு முகாமில் மூன்று அடுக்கு பாதுகாப்பில், 250 இற்கும் மேற்பட்ட ஆயுதந்தாங்கிய காவலர்கள் நியமிக்கப்பட்டு, மின்சார கம்பி வேலிகளும், கண்காணிப்பு கருவிகளும், கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வெளிப்பதிவு, முகாம்பதிவு என்ற இருவிதங்களில் அகதிகளாக தங்கள் இருப்பை பதிவு செய்து வாழ்ந்து வருகின்றனர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் சிறுவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டாலோ, பிணையில் விடுவிக்கப்படாமல் சிறையிலிருந்து வழக்கை நடத்தி நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப் பட்டாலோ, அல்லது ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து வெளிவரும் பொழுதோ ஈழத்தமிழர்கள் சிறைவாயிலில் மீண்டும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்படும் நிகழ்வுகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெறுவது வேதனையான செய்தியாகும். குற்ற வழக்குகளே இல்லாவிடினும் சிறப்பு முகாமில் அடைக்கப்படும் நிகழ்வுகளும் உள்ளன. கடவுச்சீட்டு வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறப்பு முகாமில் உள்ள பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இது நாள்வரை குற்றப்பத்திரிக்கை வழங்கப்படவில்லை. ஒராண்டு, இரண்டாண்டுகள் தண்டனை வழங்கப்படக்கூடிய வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலர் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனைக்காலம் முடித்தவர்கள். மீதமுள்ள அனைவருமே குற்றவாளி என தீர்மானிக்கப்படாத விசாரணை நிலையில் உள்ளனர். அதோடு நீதிமன்றத்தால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டவர்களும் சிறப்பு முகாமில் உள்ளனர்.

  1. சிறப்பு முகாமில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்களை கருணைக் கொலை செய்து விட கூறும் அளவிற்கு தமிழீழ அகதிகள் விடயத்தில் தமிழக மற்றும் இந்திய அரசின் அணுகுமுறைகள் பற்றி ஒரு வழக்கறிஞராக தங்களின் பார்வை என்ன?

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் திருச்சி சிறப்பு முகாம் ஈழத்தமிழர்கள் தங்களை விடுவிக்கக்கோரி கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி முறையீடுகளை அளித்து வந்தனர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 07.06.2021 முதல் 27.06.2021 வரை உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தனர். சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சூழ்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி என்ற சிறப்பு முகாம்வாசி 24.06.2021 அன்று உடல்நலம் குன்றி இறந்து போனார். தொடர் போராட்டங்களின் விளைவாக 27.06.2021 அன்று தமிழக மறுவாழ்வுத்துறை ஆணையர் திருமதி. ஜெசிந்தா லாசரஸ் திருச்சி சிறப்பு முகாம் சென்று மூன்று வாரங்களுக்குள் தமிழக அரசால் குறிப்பிட்ட அளவு ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தார். அதற்கடுத்த நாள் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமுக்குச் சென்ற தமிழக மறுவாழ்வுத்துறை அமைச்சர் திரு. மஸ்தான், புலம்பெயர் ஈழத்தமிழர்கள் யாரையும் வற்புறுத்தி இலங்கைக்கு அனுப்பமாட்டோம், ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம் என உறுதியளித்தார். அதற்கடுத்து 15.07.2021 அன்று பத்து ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. உண்மையில் இலங்கையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க வந்து கைது செய்யப்பட்ட எட்டு ஈழத்தமிழர்களும், வழக்குகளை முடித்து நாட்டுக்கு திரும்ப காத்திருந்த இரண்டு ஈழத்தமிழர்களும் என மொத்தம் பத்து புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மற்றபடி திருச்சி சிறப்பு முகாமில் அடைபட்டுள்ள ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் இதுநாள் வரையில் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி அவர்கள் சிறப்பு முகாம் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இதனால் தங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்ற விரக்தியிலும், வேதனையிலும், இரண்டு ஈழத்தமிழர்கள் பத்து நாட்கள் பட்டினிப்போராட்டத்தை நடத்தினர். அரசு அதிகாரிகள் அந்த இருவரின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத நிலையில் 18.08.2021 அன்று அவர்கள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு சக முகாம்வாசிகளில் 15 பேர் மிகுந்த விரத்தியிலும், வேதனையிலும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். ஒருவர் கத்தியால் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டார். மூன்று பேர் மரத்தில் ஏறி தூக்கில் தொங்கியும், மூன்று பேர் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டும் தற்கொலைக்கு முயன்றனர். அதற்கடுத்து 20.08.2021 அன்று எழுபத்தைந்து வயது முதியவர் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டும், இன்னும் எட்டு பேர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றனர். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களும், காயம்பட்டவர்களும் சிகிச்சை பெற்று திரும்பினர்.
இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசால் கடந்த 06.10.2021 அன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியிருப்பு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி தொடர்பான விடயங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு ‘இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்’ என்ற பெயர் ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே நாளில் சிறப்பு முகாம் குறித்த கேள்விக்கு சிறப்பு முகாமிலுள்ள நபர்களின் வழக்குகளை முடித்து அவர்களது தாய் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற அறிவிப்பைக் கேட்டு சிறப்பு முகாம் வாழ் ஈழத்தமிழர்கள் மிகவும் வேதனை அடைந்தனர். காரணம் அகதிகளாக பதிவு செய்து கொண்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நபர்களை வழக்குகளை முடித்து அவர்களைக் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்காமல் அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புவோம் என்பது ஏற்புடைய கருத்தல்ல. கடந்த 10.09.2021 அன்று தமிழக முதல்வரை சந்தித்து தங்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து நன்றி தெரிவித்த தமிழகம் வாழ் ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம் விடயத்தில் விரைவான முடிவெடுக்கக் கோரி முதல்வரிடம் கோரிக்கை வைத்த பின்னரும் இது நாள் வரையில் எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் சிறப்பு முகாம் விடயத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் 17.10.2021 அன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ‘ஆபத்து நிறைந்தவர்களும், கடவுச்சீட்டு இல்லாதவர்களும்’ மட்டுமே சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அகதிகளுக்கு எதிரான உண்மைக்கு மாறான கருத்தைக் கூறியுள்ளார். மேற்கண்ட அம்சங்களின் அடிப்படையில் கூர்ந்து நோக்கும் போது சிறப்பு முகாம் விடயத்தில் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் உளவுத்துறையின் கருத்தை மட்டுமே பிரதிபலித்து வருவதை அறிய முடிகிறது. நீதிமன்ற நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு அயல்நாட்டினர் சட்டம் என்ற பெயரில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு எதிராக சிறப்பு முகாம் என்ற பெயரில் நெடுங்காலம் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தெளிவான தீர்க்கமான பார்வை ஆட்சியிலுள்ளோருக்கு இல்லை என்பதையே உணர முடிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் திருச்சி சிறப்பு முகாமில் கடந்த 20.05.2022 முதல் மீண்டும் போராட்டக்களம் சூடு பிடித்துள்ளது.

  1. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் ஏன் தொடர்ந்து மறுக்கப்படுகிறது?

தமிழ்நாடு மக்கள் என்றுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் உள்ளனர். தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தான் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகளை காப்பதில் தெளிந்த பார்வையில்லாமல் உள்ளனர். குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் தமிழகத்தில் வாழும் ஈழ மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
இந்திய அரசு, அகதிகள் நிலை குறித்து பன்னாட்டு உடன்படிக்கை 1951 மற்றும் நெறிமுறைகள் 1968 ஆகியவற்றில் கையெழுத்திடாவிட்டாலும் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் – 1948, பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கை – 1976, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கை – 1976, குழந்தைகள் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கை – 1989, பெண்களுக்கு எதிரான அனைத்து வகை பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு உடன்படிக்கை – 1979 மற்றும் பல்வேறு உடன்படிக்கைகளை ஏற்று கையெழுத்திட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51, உலகளாவிய சட்டங்களை இந்திய அரசு மதித்து செயலாற்ற வேண்டும் எனச் சொல்கிறது. அத்தோடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு உரிமைகளை இந்திய குடிமக்களைப் போன்று, குடிமக்கள் அல்லாத நபர்களும் பெறுவதற்கு பிரிவுகள் 14, மற்றும் பிரிவுகள் 20 முதல் 28 வரையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புக்களிலும் அகதிகள் உரிமைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட பன்னாட்டு உடன்படிக்கைகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் முன்னோடித் தீர்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மனித உரிமைக் கண்ணோட்டத்தில் திருச்சி சிறப்பு முகாமில் வாடும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு வழிவகை செய்திட சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் சிறை போன்ற அமைப்பில் ஈழத்தமிழர்களை அடைத்து வைத்திருப்பது, நாகரீக சமூகத்தில் சனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

  1. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கனடாவிலோ, லண்டனிலோ தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இந்த அகதி வாழ்க்கை?

இந்திய ஒன்றிய அரசில் தமிழ்நாடு என்பது ஒரு மாநிலமாகும். இந்திய அரசின் அயல்நாட்டு கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் நிலையில் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களோ அரசியல்வாதிகளோ இல்லை. இலங்கைத் தீவில் ஈழ மக்கள் அடிமைகளாய் உரிமைகளற்று வாழும் அதே நிலையில் தான் தமிழ்நாட்டு மக்களும் இறையாண்மை இல்லாமல் ஈழத்தமிழ் உறவுகளை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தமிழக ஆட்சியாளர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே இயங்க முடியும். ஒரு சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்கள் வலிமையை கூடுதலாய் உலகத்தமிழர்களிடம் காட்டி ஏமாற்றி வருகின்றனர் என்பது தான் உண்மை. மற்றபடி உலகளாவிய மனித உரிமைகள் சட்டங்கள், அகதிகள் நிலை குறித்த உடன்படிக்கைகள் அடிப்படையில் தக்க தீர்வுகள் காண இயலும் என நான் நம்புகிறேன். குறிப்பாக பன்னெடுங்காலம் இந்தியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் உறவுகள் அண்மைக்காலமாக குடியுரிமை கோரி வருகின்றனர். அவர்களது கோரிக்கையில் நூறு விழுக்காடு நியாயம் இருக்கிறது. பாக்கிஸ்தான். பங்களாதேஸ், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து அடைக்கலம் தேடி வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாமென்று இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 இல் சொல்லப்பட்டுள்ள நிலையில் ஈழ மக்களை மட்டும் வஞ்சகமாய் புறந்தள்ளியது தற்பொழுது நிகழ்ந்து வரும் சிறப்பு முகாம் கொடுமைகள், ஈழ ஏதிலியர் அவல நிலை போன்றவற்றுக்கு முதன்மைக் காரணம் என்பதையும் நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

நன்றி – உரிமை

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நடராஜர் சிலையை திருடிய இராணுவச் சிப்பாய் கைது…!

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com