சமூக பொருளாதார ஆய்வாளரும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணல்- பகுதி 03 (நிறைவுப் பகுதி)

உடனடி ஆட்சி மாற்றம் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா ?
ஆட்சியாளர்களை மாற்றினால் எல்லாம் முடிந்துவிட்டது அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரே இரவுக்குள் எல்லாவற்றையும் சீர்செய்துவிடுவார்கள் என எவரும் நடந்துகொள்ள முடியாது. இங்கு வெறும் ஆட்சிமாற்றம் என்பது மட்டும் தீர்வாக மாறாது. சில வெளிநாடுகளில் இராணுவப் புரட்சிகள் கூட ஏற்பட்டிருக்கின்றன. அங்கு இராணுவம் நிர்வாகத்தைக் கைப்பற்றி நாட்டை தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியின்றி முன்நகர்த்திச் சென்றிருக்கிறது. ஆனால் இங்கு நிலமை அப்படியல்ல. இங்கு பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. மீள முடியாத கடனில் சிக்கியிருக்கிறது. இலங்கை மீள தன்னை நிமிர்த்தி எடுத்துக்கொண்டு வருவதானால் குறைந்தது 10 பன்னிரண்டு வருடங்கள் எடுக்கும். நிலமை இவ்வாறிருக்க உடனடி ஆட்சிமாற்றம் என்பது உடனடி பலன் எதனையும் தரப்போவதில்ல. ஆனால் மக்கள் தங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தவர்களை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என போராடுவதும் நியாயமானதுதான்.
பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் முக்கியஸ்தராக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள தமிழ் மக்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்னவாக இருக்கும் ?
உணவு மருந்து பால்மா போன்ற விடயங்களில் எங்களுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. எங்களுக்கு என உணவுப் பாரம்பரியம் இருக்கின்றது. எங்களுக்கென்று ஒரு மருத்துவப் பாரம்பரியம் இருக்கின்றது. அதேபோல எங்களுக்கென்று ஒரு உற்பத்திப் பொறிமுறை இருக்கின்றது. உண்மையில் நாங்கள் பால்மாவிற்காக வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. எங்களுடைய பாரிய வடக்கு கிழக்கு நிலப்பரப்பு கால்நடைப் பொருளாதாரத்திற்கான மிகவும் அனுகூலமானது. கணிசமானளவு கால்நடைகள் யுத்தத்திற்கு முன்பே இருந்தன. எனவே இப்பொழுதும் கணிசமான அளவு கால்நடைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றினுடைய தரங்கள் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இப்பொழுதும் கூட வன்னியில் இருந்தும், மட்டக்களப்பின் படுவான்கரையில் இருந்தும் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்தேசியக் கம்பெனிகளுக்கு நாளாந்தம் பல இலட்சம் லீற்றர் பால் கொண்டுசெல்லப்படுகின்றது. நாங்கள் அவைகளை எல்லாம் வடக்கு, கிழக்கு மக்களின் நாளாந்த நுகர்வாக மாற்றுவோமாக இருந்தால் அதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கி அந்தப் பால்களை நாளாந்தம் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய வகையில் பொதியிட்டு பதனிட்டு மக்களுக்கு வழங்குகின்ற பொறிமுறையைக் கொண்டுவருவோமாக இருந்தால் எங்களுக்கு பால்மாவில் தங்கியிருக்கவேண்டிய தேவை எழாது. இரண்டாவது எங்களுடைய பாரம்பரிய மருத்துவம். அத்தியவசிய உயிர்காக்கும் மருந்துக்கள் சிலவற்றிற்கான பிரச்சனை எங்களுக்கு உண்டு. அப்படியான மருந்துகள் வெளியில் இருந்து வரவில்லை என்றால் எங்களுடைய நோயாளிகளுக்கு உடனடியாக பிரச்சனை உள்ளது. ஆனாலும் எங்களுடைய சித்தவைத்திய பாரம்பரியம், நாடடுவைத்திய பாரம்பரியம் ஆயுர்வேத வைத்திய பாரம்பரியம் இவ்வாறான விடயங்கள் எங்களுடைய சமூகத்தின் மிக ஆளமான பண்பாட்டுக் கூறுகள். அதன்படி நாங்கள் இந்த மூலிகைகள், பல்வேறு இலைகள் மரக்கறிகள், குளைகள் சாப்பாட்டு முறைகளைக் கையாண்டால் நாங்கள் எத்தனையோ நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்த வைத்திய பரம்பரையும் முன்பு எங்கள் சமூகத்தில் பலமாக இருந்தது. இப்பொழுது அது அழிந்து போனாலும் கூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சித்தமருத்துவ பீடம் என்று ஒரு தனிப் பீடமே இருந்து வைத்தியர்களைப் பயிற்றுவிக்கின்றார்கள். எனவே தரமான வைத்தியர்கள் உருவாகிவருகின்றார்கள். இவ்வாறு தரமான வைத்திய முறையும் வைத்திய மரபும் வைத்தியர்களும் இருக்கின்றபோது நாங்கள் சித்தவைத்தியத்தை மீளவும் கையில் எடுப்பதன் மூலம் இறக்குமதி மருந்துகளில் தங்கியிருக்கின்ற நிலையிலிருந்து நாங்கள் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
அடுத்தது உணவு. எங்களுடைய வடக்குக் கிழக்குப் பிரதேசம் மிகவும் வளங்கூடிய உணவு உற்பத்திப் பிரதேசம். எங்களுடைய பொருளாதாரமே விவசாயமும் கால்நடையும், மீன்பிடியும் தான். எனவே இந்த மூன்றுமே உணவு சார்ந்தவை. எனவே நாங்கள் தற்பொழுது என்னசெய்யவேண்டும் என்றால் நாங்கள் ஏற்கனவே காடுமையான பாதைகளைக் கடந்துவந்தவர்கள். 1990 களில் இருந்து 2009 ஆம் ஆண்டுவரை மிகப்பெரிய பொருளாதாரத் தடை இடப்பெயர்வு, யுத்த நெருக்கடி என எல்லாம் எம்மைச் சூழ்ந்தபோதும் நாங்கள் எங்களுக்கான உணவை நாங்களே உற்பத்தி செய்து பாதுகாத்து சேமித்து, விநியோகிக்கின்ற – பங்கிடுகின்ற முறைமையினை நாங்கள் உருவாக்கியிருந்தோம். எங்களுடைய கூட்டுறவு இயக்கம் மிகப் பலமானது. எங்களுடைய விவசாயிகள் சிறு விவசாயிகளாக இருந்தும் அவர்களுடை உற்பத்தி ஆற்றல் மிகச் சிறப்பானது. எனவே நாங்கள் உள்ளூர் விவசாய உற்பத்திக்கு உடனடியாக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியிருக்கின்றது. அது விவசாய நிலமாகவும் இருக்கலாம் அல்லது வீட்டுத்தோட்டமாகவும் இருக்கலாம். எல்லோரும் கட்டாயமாக வீட்டுத்தோட்டமும் விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளிலும் உடனடியாக ஈடுபடவேண்டும். இந்த விடயத்தில் சமூக இயக்கங்கள் முன்வந்து மிகப்பெரிய உணவு உற்பத்திப் போரினை வடக்குக் கிழக்கில் பிரகடனப்படுத்தவேண்டும். மிகப்பெரிய அளவில் எமது உணவுப் பொருட்களைப் பாதுகாத்து – பதனிடுகின்ற கட்டமைப்புப் பொறிறையையும் உருவாக்க முன்வரவேண்டும். எங்கள் அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. எங்கள் சமூகங்களை வளம்படுத்த சமூகக் கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டும். இந்தவிடயத்தில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சமூக இயக்கங்களும் தங்களாலான ஒத்துளைப்பினை வழங்க முன்வரவேண்டும்.
முற்றும்.