Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம் – செல்லத்துரை சுதர்சன்

உயர் பசிலிகாவின் கீழறை உறங்கும்,
முதுபெரும் ரோமின் பேதுருவே!
லத்தீன் சிலுவையுருவப் பேராலயத் திருக்கதவுகள்
இறுக மூடிக்கொண்டன!
ரைபர் ஆறும் ஜனிக்குலம் குன்றும்
மௌனித்துப் போயின…!
அரவணைக்கும் கரம்கொண்ட
நீள் வட்ட வெளி முற்றம் என்னாயிற்று…!
‘என் ஆடுகளை மேய்’ எனும் போதனையும்
எர்மோன் மலையடிவார வாசகமும்
தொலைந்து போயின காண்…!
பேதுருவே தொலைந்து போயின காண்…!

கலைகொழிக்கும் முதுபெருந்தாய் மடியில்
உறங்குவோய் இது கேள்….!
ஐராப்பிய ஒன்றியக் கதிரையிலமர்ந்து
உன் மக்கள் கழுகுக்காய் உயர்த்திய கைகளும்…
பட்டினி விரித்தவை, குருதி பெருக்கியவை,
பிணங்கள் குவித்தவை, நிலங்கள் கவர்ந்தவை,
விடுதலை மலர்களை நிலமிசைப் புதைத்தவைதான்.

இறந்த காலமொன்றில்…
உன் மக்களாகிய ஐரோப்பியர்,
தம் முகத்தின் ஒளியை,
காஸ்ரோவின் கெஞ்சுதலின் பின்னும்,
அவர் தழுவிய மக்கள் கூடாரத்தின்மீது திருப்பாதது ஏன்?
கியூபாவின் செந்நிறப் பூக்களை,
கழுகுநேச மௌனத்திலூறிய உன் மக்கள்,
எப்படிக் கசக்கி வீசினர் என்பதை அறிவாயா…!
என்னருமைக் குட்டிக் கியூபா
சூரியனே எழாது சுருண்டு போயிற்று அன்று.

மத அதிகாரம் நிரம்பிய வைன் கிண்ணத்தைப்
பருகிய உன் பிள்ளைகள்,
சிவப்பு மலர்களால் பூக்கும் தேசங்களில்…
குருதியைப் பரிமாறியது
எவரின் நினைவாக…?.
கழுகளுக்காக எனில்
‘ஆமென்’ என்று உரைப்பாயா..?

இப்போ…?
எல்லாம் முடிந்து போயிற்று…!
தனித்திருத்தப்பட்டது,
உனது மக்களின் நிலம்.
அருவருப்பும் அச்சமும் பின்னி அறைந்து மூடப்பட்டன,
கடலிலும் மண்ணிலும் வானத்திலும் விரிந்த
உன் மக்களுக்கான வழிகள்.
மரணத்திற்காய்த் திறக்கப்பட்டன,
விண்ணேற்றப் பெருங்கதவுகள்.
மைந்தரைப் புதைப்பதற்கும் நிலமற்றுப்போனது,
பெருமுடி சூடிய உன் சாம்ராஜ்யம்.
அன்று, பைபிளும் வைன் கிண்ணமும்
ஆக்கிரமிப்பைப் பரிமாற,
உலகின் சர்க்கரைக் கிண்ண
மருத்துவப் பறவைகள்,
உன் மக்களது மரண நிலத்தில்,
சிறகால் அணைத்துப் பறந்து,
உயிர் பூத்த அன்பை,
இன்று பரிமாறியதை அறிவாயா…?
காஸ்ரோவின் சிவப்புத் தாதிகளும் இல்லையெனில்,
வருங்கால யூபிலிக் கதவு திறந்து அசைவதைக் காண,
எவருமே எஞ்சியிரார் உன் மக்களில்…!

யூரோவிலும் பீசோ பெறுமதியற்றதெனில்,
பைபிளிலும் கரும்பினிமை கீழாமெனில்,
மார்ல்போரோவிலும் சிகார் போதையற்றதெனில்,
மத அதிகாரத்திலும் மனிதம் பொருளற்றதெனில்,
மரணத்தில் உயிரைப் பரிசளிக்கும்
கியூப மீட்புத் தேவதைகளின் கைகளிற்கு
எதைப் பரிசளிப்பர் உன் மக்கள்?

செந்நிறக் கற்பாறையின் ஒற்றைக் கல்லில் ஓங்கிய,
சூரியக் கடிகார ஊசிமுனைத் தூண்,
வானத்தையும் பூமியையும் இணைப்பதை,
உன் மக்களால் கற்பனையாக நம்பமுடிகிறதெனில்…
செந்நிறக் கம்பளப் கியூப ராகத்தில்
விடுதலை மலர்கள் உண்மையில் மலர்வதை
நம்பமுடிவதில்லையே… ஏன்…?

உன் மக்களுக்கு இதனைச் சொல்:
“எகிப்திலிருந்து கொண்டு வா இன்னுமொரு ஊசிமுனைத் தூண்
அதன் உச்சியில் எழுது.
‘மனிதம் வெல்கிறது’
‘மனிதம் ஆள்கிறது’
‘மனிதம் கோலோச்சுகிறது’
‘மனிதம் உள்ளவர் எல்லாத் தீங்கிலிருந்தும்
மக்களைக் காப்பாராக.’

காற்றில் சிறகு விரிக்கும் அந்த வாசகங்களில்
சிவப்புக் கியூபாவின்
புல்வெளிகளும் மலைக் குன்றுகளும்
கரும்பு வயல்களும் கால்நடைகளும்
உன்னை ஆராதிக்கும்.
அப்போது,
உன் நாமத்தைக் ‘கியூப நேசன்’ என மாற்று,
அந்த நாமத்தின் மேல்
உன் மனிதத் திருச்சபையைக் கட்டு,
மண்ணரசின் திறவுகோலை
பொற்காலைப் பொழுதொன்றில் நீ பெறுவாய்.

கொரோனாவுக்காய்,
மூடித் தாழிடப்பட்ட யாழூரின் கூடாரத்தில்,
ஒரு கஞ்சிச் சிரட்டையுடனிருந்து கூறுகிறேன்.
அந்நாளில்…,
பெருங்குரலில் நான் பாடுவேன்,
கழுகும் புறாவும் கைகோர்க்காத
உனது உன்னதப் பாட்டுக்களை.
பாதாளத்தின் வாயில்கள் நடுங்கும்,
அதன் பல்லவியைக் கேட்டு.
மெல்லத் திறபடும் யூபிலிக் கதவு,
எட்டிப் பார்…!
மாண்டு போன உன் மக்கள்
புதிய பியானோக்களுடன் எழுந்து வருவர்.

(கியூபாவின் பிடல் காஸ்ரோ மருத்துவக் குழு இத்தாலியில் மரணமீட்புக்காய்த் தரையிறங்கிய 23.03.2020)
குறிப்பு: இக்கவிதையை எழுதிய கலாநிதி செ. சுதர்சன் இலங்கையின் பேராதனைப் பலகலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கவிஞரும் விமர்சகரும் ஆய்வாளருமாகிய இவர் பல நூல்களின் ஆசிரியர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com