சற்று முன்
Home / செய்திகள் / சிறிலங்கா தொடர்பில் இந்தியாவிடம் தீர்க்கமான வெளியுறவுக் கொள்கை இல்லை – புலிகளின் வீழ்ச்சியையும் சீனாவின் அத்துமீறலையும் இந்தியா கணிக்கத் தவறிவிட்டது

சிறிலங்கா தொடர்பில் இந்தியாவிடம் தீர்க்கமான வெளியுறவுக் கொள்கை இல்லை – புலிகளின் வீழ்ச்சியையும் சீனாவின் அத்துமீறலையும் இந்தியா கணிக்கத் தவறிவிட்டது

“சில கசப்பான சம்பவங்களை மறந்து செயற்பட விடுதலைப் புலிகள் பக்கத்திலிருந்தும் சரி இந்தியத்தரப்பிலும் சரி முயற்சிக்கப்படவில்லை”

ஓய்வு பெற்ற இந்திய இராணுவத்தின் அதிகாரியும், முன்னணி இராணுவ ஆய்வாளரும், பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்த பல்கலைக்கழகங்களின் வருகை தரும் சிறப்பு விரிவுரையாளரும்,உலக இராணுவ நகர்வுகள் குறித்து ஆங்கில, தமிழ் ஊடகங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான மேஜர் மதன் குமார் வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல் பகுதி!

நேர்காணல் – கலியுகன்

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபின் சிறிலங்காவில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்திருக்கிறது. இதன் ஆபத்துக்கள் குறித்துக் கூறுங்கள் ?

2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு ஈழப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மிகப்பெரும் பலத்தோடு ராஜபக்சே அரசு அங்கு ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு மைத்திரிபால சிறிசேன அரசு ஆட்சியமைத்தது. அதன் பின்னர் மீண்டும் ராஜபக்சேக்கள் ஆட்சியமைத்துள்ளனர். இதனை மூன்று கால கட்டமாக நாங்கள் பிரித்துப்பாரத்தோம் என்றால் சீனாவின் நுளைவு என்பது 2004 ஆம் ஆண்டு நாட்டினை வளப்படுத்த வேண்டும் பொருளாதாரத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்கில் நாட்டுக்குள் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்தார்கள். சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுடன் சிறிலங்கா அரசு தொடர்புகளை ஏற்படுத்தியது. இதன்போது சீனா இதனை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. இந்தியாவும் வீதி புனரமைப்பு புகையிரதப் பாதை விமான நிலையம் வீடுகள் வழங்குதல் உதவிகளை மேற்கொண்டது. இப்பணிகளில் இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஈடுபட்டு இருந்தனர் அப்போது இருந்துதான் சிறிலங்காவைக் களமாகக் கொண்டு சீன இந்திய நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. இதில் இலங்கை அரசின் இராஜதந்திரம் என்னவெனில் சீனா மற்றும் இந்தியா எதிரி நாடுகள், இந்தியா அமெரிக்கா எதிரி நாடுகள், அமெரிக்கா சீனா எதிரி நாடுகள் என்ற கோணத்தில் ஸ்ரீலங்கா அரசு இந்த மூன்று நாடுகளுடனும் ஒன்றுடன் ஒன்றச் சாட்டி தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வந்தது. அதில் சிறிலங்கா அரசுக்கு குறிப்பிட்டளவு வெற்றியும் கிட்டியது. தெடர்ந்து சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவில் இந்தியாவின் கை சற்று ஓங்கியிருந்தது. இதை வைத்து சீனா சிறிலங்கா அரசு மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இது சிறிலங்காவின் அரசியலில் சில சலசலப்புக்களை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ஈஸ்ரர் தினத்தில் வெடிகுண்டுத் தா க்குதல் இடம்பெற்றிருந்தது. ஈழப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின் நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாக அது அமைந்திருந்தது. இதனைத் தமக்கு சதகமாக்கிய ராஜபக்சேக்கள் ஒரு வலிமையான அரசு வேண்டும் என சிங்களவர்கள் மத்தியில் உணர்வினைத் தூண்டி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தனர். ராஜபக்சேக்கள் ஆட்சிக்கு வந்த வேகத்திலேயே இந்தியாவுக்கு எதிராக சீனாவுக்கு சார்பான நிலைப்பாட்டினை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். ஆகால் இது சிறிலங்காவினை பெரும் கடன் சுமைக்குள்ளேயே தள்ளியிருக்கிறது. சிறிஙக்கா சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்கள் முழுவதையும் அடைப்பதற்கு 35 வருடங்கள் செல்லலாம் என கூறப்படுகின்றது. கடனையோ கடனுக்காக வட்டியையோ மீளக் கொடுக்க முடியாத நிலையில்தான் சிறிலங்காவின் இன்றைய பொருளாதாரம் இருக்கின்றது. ஆனாலும் ஒரு வலிமையான அரசு என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையில் நகர்கின்றார்கள்.
கொழும்பில் போட் சிற்றியை சீனாவிடம் கொடுத்தபோது இந்தியா எதுவும் கூறியிருக்கவில்லை. ஆனால் வடக்கில் நெடுந்தீவு உள்ளிட்ட இடங்களில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிறுவனங்களை சீனாவிடம் வழங்க முற்பட்டபோது இந்தியாவின் எதிர்ப்புக் காரணமாக அவை மீளப் பெறப்பட்டு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இது சீனாவிற்கு மிகப்பெரிய எரிச்சலையும் உறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு முனையத்திலும் இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்த திட்டங்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் நெருக்கடி காரணமாக சிறிலங்கா அரசு ஒரு சமநிலை தோற்றத்தைக் காட்டவே இவ்வாறான விட்டுக்கொடுப்புக்களுக்கு இணங்கியிருக்கிறது.
சீனா மேற்கொண்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் சீனாவைப் பொறுத்தவரை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வைத்து சீனாவால் எதுவும் செய்துவிட முடியாத நிலையே ஏற்பட்டிருக்கிறது. இதனால் தான் சீனா இயற்கை வளங்களுடன் கூடிய தமிழர் பிரதேசமான வடக்கு கிழக்கு துறைமுகங்களை நோக்கி தனது பார்வையை திருப்பியிருக்கிறது. இதன் மூலம் அம்பாந்தோட்டையில் இழந்ததை வடக்கு கிழக்கில் நிலைகொண்டு மீட்டுவிடலாம் என சீனா கணக்குப் போடுகின்றது.

தமிழர் தாயப் பிரதேசங்களான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் நோக்கி சீனாவின் பார்வை திரும்பியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

இராணுவ ரீதியாகப் பார்த்தால் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கக் கூடிய பகுதி, இந்தியாவின் தமிழகத்துடன் மிக நெருங்கிய தொடர்புபட்ட மக்கள் ஈழத்தில் வாழ்கிறார்கள், மொழியால் கலாச்சாரத்தால் என மிக நெருக்கமான உறவுடையவர்களாக இருக்கிறார்கள். எனவே வடக்கு கிழக்கினை கைவசப்படுத்தி இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் கொடுக்க முடியும் என சீனா நினைக்கிறது.
இதனை நாம் இராணுவக் கணக்குப்படி பார்த்தால் இயற்கை அரண்கள் நிறைந்த வடக்கு மற்றும் கிழக்கில் முதலீடு எனும் பெயரில் ஒரு விமான நிலையம் அல்லது இராணுவ தளம் அமைக்கப்படுவது என்றால் அதற்கு மேற்கொள்ளக்கூடிய முதலீடு என்பது மிகக் குறைவாகவே காணப்படும். இதனை இராணுவ ரீதியாக செய்யவேண்டும் என்றால் குறைந்தது இரண்டு விமானந்தாங்கிய போர்க்கப்பல்கள் தேவை. அதனுடைய முதலீடு என்பது சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாவரை தேவைப்படும். அதனைச் செய்து முடிப்பதற்கும் சுமார் ஏழு வருடம் முதல் 10 வருடகாலமாவது தேவை. இதனால்தான் சீனா முதலீடு எனும் பெயரில் வடக்கு கிழக்கினைக் குறிவைத்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட முனைகின்றது.

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டால் சிறிலங்கா உள்ளிட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் சீனா இவ்வளவு வேகமாக காலுன்றிவிடும் என்பதை இந்தியா முன்னரே கணிக்கத் தவறிவிட்டதா ?

இந்தியாவின் தவறு என்னவென்றால் – இந்தியா பாகிஸ்தான் உறவை எடுத்துக்கொண்டால் பாகிஸ்தானை எவ்வாறு கையாள வேண்டும் என்ற தீர்க்கமான வெளியுறவுக் கொள்கை இந்தியாவிடம் உண்டு. இதேபோன்று அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் வங்காளாதேசத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்கிற திடமான வெளியுறவுக் கொள்கை இருக்கிறது. அரசுகள் எப்படி மாறினாலும் ஆட்சியாளர்கள் மாறினாலும் 90 சதவீதம் அந்த தீர்க்கமான வெளியுறவுக் கொள்கையின்படியே பயணிப்பார்கள். மாறி மாறிவரும் ஆட்சியாளர்கள் வெளியுறவுக் கொள்கையில் 10 சதவீதமான முடிவுகளை தங்களுக்கு ஏற்றால்போல் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை இந்தியா அவ்வாறானதொரு தீர்க்கமான – உறுதியான வெளியுறவுக் கொள்கைளை என்றுமோ கொண்டிருந்ததில்லை. இந்திராகாந்தியாக இருக்கட்டும், ராஜீவ்காந்தியாக இருக்கட்டும், நரசிம்மராவ் என அனைவருமே தனிப்பட்ட ரீதியாக தலைவர்கள் எடுக்கும் முடிவுகளின் படியான வெளியுறவுக் கொள்கையே இலங்கை விடயத்தில் கையாளப்பட்டது.
உதாரணத்திற்கு விடுதலைப் புலிகளின் உருவாக்கத்திற்கு எந்தளவிற்கு உதவினார் என்பதும் இந்தியாவில் விடுதலைப் புலிகளிற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதும் உலகம் அறிந்த விடயம். ஆனால் அதன் பின்பு ராஜீவ்காந்தி பிரதமாரானபின் அவரினால் தனிப்பட்டரீதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் அவரது ஆலோசகர்களினால் வழங்கப்பட்ட தீர்மானங்கள் வேறுவிதமாக இருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவர், இலங்கை அரசு, இந்திய அரசு என மூன்று தரப்பினை வைத்து உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தப்படியான போர் நிறுத்தம் கூட நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் இந்தியா தனது படைகளை அனுப்பியமை, ராஜீவ்காந்தியின் மரணம் – ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கிறது என கூறப்படுகின்றது. தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசிற்குமான உறவு நிலை வெகு துரத்திற்கு சென்றுவிட்டது. அவர்களால் மீண்டும் ஒரு இணைக்கநிலைக்கு வரவே முடியவில்லை. இந்தியாவில் கஸ்மீர் உள்ளிட்ட மானிலங்களில் உள்ள பிரிவினைவாதக் குழுக்களுடன் இந்திய அரசு தற்போதுவரை பேசிக்கொண்டேயிருக்கிறது. நாகலாந்து மாநிலத்திலுள்ள போராளிக் குழுக்களுடனும் இந்திய அரசு பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை என்பது முழுவதுமாக நின்றுவிட்டது. பரஸ்பர நம்பிக்கையின்மையும் அதிகரித்துவிட்டது.
இவ்வாறு தனிப்பட்ட தலைவர்கள் இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி – விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களாக இருந்தவர்களும் சரி ஒருத்தரை ஒருவர் நம்பிக்கொள்ளாதவர்களாக இருந்தனர். இதனால் இந்தியாவை மீறி வேறு நாடுகளின் தலையீட்டைக் கோரினர். இவ்வாறு இந்திய வெளியுறவுக் கொள்கையானது உறுதியற்ற ஒன்றாகவே காணப்பட்டிருந்தது. அதன் விளைவுகளையே நாம் தற்போது பார்க்கின்றோம்.
நடைபெற்றவை கசப்பான வரலாற்று நிகழ்வுகளாக இருந்தாலும் அதனை மீறி சில உறவுகளை நம்மால் வலுப்படுத்திக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு இந்திய பாகிஸ்தான் கார்கில் போருக்குப் பின்பு அடர்பிகாரி வாஜ்பேய் பாகிஸ்தானுக்குச் சென்று வரலாற்று உரை ஒன்றினை நிகழ்த்தினார். இதுவரை சண்டையிட்டோம். இதுவரை சகோதரத்துவம் இல்லாமல் இருந்தோம் நட்பிற்கு ஒரு முயற்சிசெய்வோம் என்று உரையாற்றினார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு விடுதலைப் புலிகள் பக்கத்திலிருந்தும் சரி இந்தியத்தரப்பிலும் சரி நடைபெறவில்லை. ஏனெனில் ஒருவருக்குள்ளும் இருந்த தனிப்பட்ட அரசியல் நிலைகளே இதற்குக் காரணமாகிவிட்டது. இந்த சூழ்நிலையால் தான் இறுதிப் போரின்போதும் இந்தியா அரசால் எதுவும் செய்துவிட முடியவில்லை. இதில் இந்திய அரசு என நாம் பார்ப்பதை விட இந்தியாவை அப்போது ஆட்சிசெய்தவர்கள் எந்த மனநிலையில் இருந்தார்கள் என்பதையே நாம் பார்க்கவேண்டும்.

நன்றி – உரிமை மின்னிதழ்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

அரசியல் கைதியான சிவ ஆரூரன் 15 வருடங்களின் பின் நிரபராதி என விடுவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com