சற்று முன்
Home / சிறப்புக் கட்டுரைகள் / கஜேந்திரன்களின் எதேச்சதிகாரம்; முன்னணியின் சிதைவு?

கஜேந்திரன்களின் எதேச்சதிகாரம்; முன்னணியின் சிதைவு?

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

இப்படி ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்று தமிழில் மிகவும் பிரபலமானது. கடுவெளிச் சித்தர் எழுதியது. “…நீ விரும்பி வேண்டி காத்திருந்து பெற்ற ஒரு விடயத்தை தவறான வகையில் பயன்படுத்தி வீணாக்கிக் கொள்கிறாய்…” என்பதுதான் இந்தப் பாடலின் எளிமையான பொருள்.

இந்தப் பாடல், யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ் அரசியல் சூழலுக்கு எப்போதுமே பொருந்தும். மக்கள் ஆணையைப் பெற்ற தரப்புக்களாக தமிழ்த் தேசிய அரசியலில் மேலெழுந்த பல தரப்புக்களும் பொறுப்பின்மை, தன்முனைப்பு மனநிலை (ஈகோ) ஆகியவற்றினால் விடயங்களைக் கோட்டை விட்டு தாங்களும் தோற்று, மக்களையும் தோற்கடித்த வரலாறுகள் உண்டு. அதன் அண்மைய உதாரணங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்தப் பத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் இடம்பெற்று வருகின்ற குளறுபடிகள், குழந்தைப் பிள்ளைத்தனங்கள், எதேச்சதிகாரப் போக்குப் பற்றி பேச விளைகின்றது. முன்னணி அடையாளத்தினூடு கடந்த பதினொரு ஆண்டுகளாக தேர்தல் அரசியல் வெற்றிக்காக போராடி வந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இந்தப் பொதுத் தேர்தலில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை வென்றிருக்கின்றது. கூட்டமைப்பின் மீதான அதிருப்தி மற்றும் முன்னணி இளைஞர்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை முன்னிறுத்தி வாக்களித்த மக்களின் விரலில் தீட்டப்பட்ட ‘மை’ அழிபடும் முன்னமே, முன்னணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு Zoom செயலி மூலம் கூட்டப்பட்ட முன்னணியின் மத்திய குழுக் கூட்டத்தில், முன்னணியின் மூன்றாவது முக்கியஸ்தரான விஸ்வலிங்கம் மணிவண்ணன், அவர் வகித்துவந்த தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். மணிவண்ணன் முன்னணியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த போதிலும், அந்தக் கூட்டத்துக்கு முதலிரண்டு முக்கியஸ்தர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரினால் திட்டமிட்ட ரீதியில் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக, அப்படியொரு கூட்டம் இடம்பெறுவதாக அவருக்கு சொல்லப்படவுமில்லை. Zoom செயலி இணைப்பு வழங்கப்படவுமில்லை. அந்தக் கூட்டத்தில் மணிவண்ணனை பதவிகளில் இருந்து நீக்குவதற்கான காரணங்களாக கொள்கைப் பிறழ்வு மற்றும் கட்சியின் தீர்மானங்களை மீறியமை உள்ளிட்ட காரணங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

ஆனால், கடந்த தேர்தல் பிரச்சாரக் காலங்களிலேயே மணிவண்ணன் முன்னணியில் இருந்து சீக்கிரமாக விலக்கப்பட்டுவிடுவார் அல்லது அவரே விலகிவிடுவார் என்கிற நிலைப்பாடு உருவாகியிருந்தது. மணிவண்ணனை எப்படியாவது வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வட்டம், குறிப்பாக யாழ். இந்துக் கல்லூரி இளைஞர்கள் குழுவொன்று மும்முரமாக இருந்தது. அதேபோல, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில், முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் மற்றும் இன்னொரு வேட்பாளரான சுகாஷ் உள்ளிட்ட குழுவினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அது, விருப்பு வாக்குப் போட்டி என்கிற நிலையைத் தாண்டிய மோதலாக முன்னணிக்குள் எழுந்திருந்தது. ‘மணியுடன் பேசுவோம்’ என்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளன்று மணிவண்ணன் நடத்திய சந்திப்பும், அதில் அவர் தன்னை முன்னிறுத்திப் பேசிய விடயமும், முன்னணி என்கிற கட்டமைப்புக்குள் எவ்வாறான பிளவு ஏற்பட்டிருக்கின்றது என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.

முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு என்பது, கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரின் எதேச்சதிகாரப் போக்குக்கு எதிரானது என்பது மணிவண்ணன் ஆதரவாளர்களின் வாதம். கஜேந்திரன்களுக்கு (கஜேந்திரகுமார்+ கஜேந்திரன்) இருக்கிற முக்கிய பிரச்சினை, அவர்களது நிலைப்பாடுகளை கேள்விக்குட்படுத்தும் அனைவரையும் நோக்கி துரோகி அடையாளம் சூட்டுதல். அது ஒரு கட்டத்தில், சொந்தக் கட்சி இளைஞர்களை நோக்கியதாகவும் மாறிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினரான பார்த்தீபன் வரதராஜன், தன்னுடைய தந்தையாரைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்பொன்றில், முன்னணிக்குள் எழுந்திருக்கின்ற சொந்தக் கட்சி உறுப்பினர்களை நோக்கியே துரோகி அடையாளம் சூட்டும் குணம் பற்றி பெரும் கவலை வெளியிட்டிருந்தார். (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் அதன் தலைவராக இருந்து 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிலிருந்து விலகிய மறைந்த பொருளியல் ஆசிரியர் சி.வரதராஜனின் மகனே, பார்த்தீபன் என்பது குறிப்பிடத்தக்கது.)

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தேர்தலைப் புறக்கணிக்க மக்களைக் கோருவது என்று கஜேந்திரன்கள் முடிவெடுத்தமை குறித்து மணிவண்ணன், கட்சிக்குள் மாற்றுக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார். மக்களது நிலைப்பாடுகளுக்கு எதிராக கட்சி தொடர்ச்சியாக முடிவெடுப்பது நல்லதல்ல என்று அவர் வாதிட்டிருக்கின்றார். அது, வார்த்தைகள் தடிக்கும் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஒரு கட்டத்தில் மணிவண்ணன் கூட்டத்திலிருந்து வெளியேறியும் இருந்தார். ஆனால், அவர் கட்சிக்குள் தான் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை மீறி பொது வெளியில் பிரஸ்தாபித்திருக்கவில்லை. ஆனால், தடித்த வார்த்தைகள் தொடர்பில் தன் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கட்சியிடம் அறிவித்திருந்தார். ஆனால், அப்போது விடயம் கைவிடப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னணியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக நின்று தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள்.

முன்னணியை பத்து ஆண்டுகள் கடந்தும் கட்சியாக பதிவு செய்யாமை தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்தப் பத்தியாளரும் பலமுறை கேள்வி எழுப்பியிருக்கிறார். அவ்வாறான சூழலில், முன்னணியை கட்சியாக பதிவு செய்வது சார்ந்து மணிவண்ணன் தரப்பு ஆர்வம் வெளியிட்டது; கட்சிக்குள் வலியுறுத்த ஆரம்பித்தது. அதன் மூலம், கட்சியின் கட்டமைப்பை ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், முன்னணியைக் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை கஜேந்திரன்களுக்கு, குறிப்பாக கஜேந்திரகுமாருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஏனெனில், முன்னணி என்கிற அடையாளத்திற்கு ஊடாக காங்கிரஸை மீட்டெடுப்பதுதான் அவரின் ஒற்றை இலக்கு. அதற்குத் தடையாக மணிவண்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது, அவருக்கு சிக்கலான விடயமாக மாறியது.

அடுத்து, தங்களைத் தாண்டி முன்னணிக்குள் மணிவண்ணனை நோக்கி இளைஞர் ஆதரவுத் தளமொன்று உருவாகி வந்தமை கஜேந்திரன்களினால் கொஞ்சமும் ரசிக்கப்படவில்லை. அந்த ஆதரவுத் தளம், கஜேந்திரன்களை கேள்விகளுக்கு அப்பால் நின்று பின்தொடர்வதற்கு தயாராக இருக்கவில்லை என்பதுதான் அதன் பிரதான சிக்கலாகும். வழக்கமாக கஜேந்திரன்களின் ஒற்றைவாதம் என்பது கொள்கை மறுதலிப்பற்ற தரப்பு தாங்கள் மட்டுமே என்பதாகும். ஆனால், அவர்களும் காலத்துக்கு காலம் கொள்கைகளை மாற்றி வந்திருக்கிறார்கள். அதற்கு கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணித்தமையை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது, முன்னணியின் தலைவராக இருந்த வரதராஜன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார், அப்போது கஜேந்திரன்கள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது, 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாக அமையும் என்று கூறி நிராகரித்திருந்தனர். ஆனால், அந்த நிலைப்பாடுகளை ஒருசில ஆண்டுகளுக்குள்ளேயே அவர்கள் மாற்றிக் கொண்டு அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகிவிட்டார்கள்.

ராஜபக்ஷக்களுக்கு துதிபாடும் அரசியல் நெறியொன்று தென் இலங்கையில் நிலைபெற்றிருக்கின்றது. அது, ராஜபக்ஷக்களை கேள்விகளுக்கு அப்பால் நின்று தொழுகின்றது. அப்படியானதொரு நிலையொன்றை தங்களைக் சுற்றி கட்டமைக்கும் நிலைப்பாடுகளில் கஜேந்திரன்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் கூறுவதுதான் வேதவாக்கு அதனைக் காவிக்கொண்டு திரியும் கூட்டமே முன்னணியில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. அதனை, கடந்த ஒருவாரகாலமாக முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையில் நடைபெற்றுவருகின்ற சமூக ஊடக உரையாடல்களைப் பார்க்கின்ற போது புரிந்து கொள்ள முடியும். அதனை இன்னமும் நேரடியாகச் சொன்னால், மூளைச் சலவை செய்யப்பட்ட கூட்டமொன்றை கட்டி வளர்க்க வேண்டும் என்பதுதான் கஜேந்திரன்களின் நினைப்பு.

தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியை ஒரு மாற்றாக நம்பி, அதன் பின்னால் சென்று அதன் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த இளைஞர்கள் கஜேந்திரன்களின் எதேச்சதிரகாரப் போக்கினால் இன்று போக்கிடமின்றி நிற்கிறார்கள். கிட்டத்தட்ட முட்டுச்சந்துக்குள் மாட்டிக் கொண்ட நிலையை ஒத்தது. ஒவ்வொரு தடவை மக்களால் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தாங்கி நின்ற வலியும் அவமானமும் பெரியது. அதனைத் தாண்டி சிறிய வெற்றியொன்றை பெற்றிருக்கின்ற தருணத்தில், அதனை அப்படியே போட்டுடைப்பது என்பது ஜீரணிக்க முடியாததுதான்.


தமிழ்மிரர் பத்திரிகைக்காக புருஜோத்தன் தங்கமயில்  எழுதி  இன்று வெளியான பத்தி.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கொரோனா நோயாளியின் சடலம் – யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com