
இந்தியாவில் கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு தொடக்கம் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கோரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. அந்த உரையில்,
“அடுத்த 21 நாள்கள் நமக்கு மிகவும் முக்கியமானது. கோரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என யாரும் நினைக்கக் கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர யாருக்கும் ஊரடங்கின்போது அனுமதியில்லை.
பிரதமர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். வல்லரசு நாடுகளாலேயே கோரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தந்து நாட்டு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. வீட்டைவிட்டு வெளியே வந்தால் கோரோனா வரும். இந்த 21 நாள்களை மக்கள் ஆக்கப்பூர்வமானதாகப் பயன்படுத்த வேண்டும்.
24 மணி நேரமும் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், பொலிஸார் உள்ளிட்டோரின் சிரமங்களை உணர வேண்டும். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு இந்தியரும் முக்கியம் என்பதாலேய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரமாக இருப்பதன் மூலமாகவே இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.
அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் தடை இருக்காது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்திட வேண்டும்” என்று பேசி வருகிறார்.