(நன்றி விகடன்) சுஜா காலையில் போட்ட கோலத்தை பிறகு எழுந்து வந்து பார்த்த பிந்து பாராட்டியது நல்ல விஷயம்.
‘விக்ரம் வேதா’வில் இருந்து ‘யாஞ்சி. யாஞ்சி…’ பாடல் ஒலிபரப்பானது. உள்ளிருந்து வரும் இயல்பான உணர்வுடன் நடனமாடினால், நடனம் தெரியவில்லையென்றால் கூட அது நன்றாக அமையும். பிந்து அதை சிறப்பாக கையாள்கிறார். ‘யாராவது மூவ்மெண்ட் சொல்லிக் கொடுத்தால்தான் ஆடுவேன்’ என்ற சுஜா இன்னமும் சரியாக தயாராகவில்லை.
‘ஆர்த்தி இருக்கும்போது ஜோக் அடிச்சிட்டே இருப்பாங்க. சிரிச்சிட்டே இருப்பேன்’ என்றார் ரைசா. அப்படியா? அப்போதெல்லாம் ‘ட்ரூ’ என்று சொன்னதைத் தவிர ரைசா வேறெதுவும் சொன்ன நினைவில்லையே?
தரைத் துடைப்பானை கையில் பிழியாமல் விசையை திருப்புவதின் மூலம் பிழியக்கூடிய மாடல் இங்கு கிடையாதா? வெறும் ரூ.350/-தானே? என்று பிக்பாஸை tease செய்தார் காஜல். ‘இல்லை அந்த மாடல் லக்ஸரி பட்ஜெட்டில் வந்து விடும். நூறு ரூபாய் மாடல்தான் இங்குள்ளது’ பிக்பாஸின் மானத்தை கூடுதலாக வாங்கினார் ஆரவ். ‘Self discipline’ கத்துக்கத்தான் இங்க வந்திருக்கோம். சொகுசா இருக்கறதுக்கு இல்ல’ என்றது ஆரவ்வின் கிண்டல்.
‘பொதுமக்கள் ஒப்புக்கொண்ட ஒருவரை நாமும் நகலெடுத்தால் வெற்றியை அடைய முடியும் என்று சிலர் நம்புகிறார்கள்’ என்றார் காஜல். வந்ததில் இருந்தே அவருக்கு சுஜாவுடன் இணக்கமில்லை என்பது தெரிகிறது. எனவே, அது சார்ந்த புகைச்சல் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ‘ஓவியா மாதிரி காமிராவைப் பார்த்து பேசிட்டிருக்கா’ என்பது சுஜாவைப் பற்றிய காஜலின் விமர்சனம். நல்ல விஷயங்களுக்காக முன்னோடிகளைப் பின்பற்றுவதில் பிழையில்லை. கூடவே தமது சுயத்தை இழந்து விடக்கூடாது என்பது முக்கியமானது. சுஜா இதைப் புரிந்துகொள்வார் என நம்புவோம்.
‘என்னைப் பார்த்தால் யோகம் வரும்’ என்ற வாசகத்துடன் கழுதையின் புகைப்படத்தை சில கடைகளில் மாட்டியிருப்பார்கள். அது அதிர்ஷ்டமாம். பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளில் அதுவொன்று. ஆரவ் அதுபோல் ஒரு விதத்தில் மாட்டிக்கொண்டார். ‘இதை அழுத்தினால் அலாரம் நிற்கும்’ என்று போட்டிருந்த போர்டை சிறுவனுக்கான உற்சாகத்துடன் அழுத்த அடுத்த வார வெளியேற்றத்தில் போய் சிக்கிக்கொண்டார். அவர் வேறொருவரை நாமினேட் செய்வதின் மூலம் அந்தச் சிக்கலை அடுத்தவருக்கு மாற்றி விடலாம்.
வடிவேலு நடித்த நகைச்சுவைக்காட்சியில் ஒரு மொட்டைத் தலையில் கையை வைத்து மாட்டிக்கொள்வார். கையை எடுத்தால் மொட்டையர் குரல்வளையை கடித்து விடுவார். வேறொருவரை அந்த தலையில் கைவைக்க வைத்தால்தான் வடிவேலு தப்பிக்க முடியும்.
இந்தக் காட்சியை பிக்பாஸ் நேற்றுதான் பார்த்திருப்பார் போல. அதிலிருந்துதான் இந்த கொலைவெறி task-க்கான யோசனை அவருக்கு வந்திருக்கும் போல.
ஆரவ் மூவரை தேர்ந்தெடுப்பார். நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டியில் அவர்கள் கலந்துகொள்வார்கள். தோற்பவர் வெளியேற்றத்திற்கு தகுதியாவார். காஜல், சுஜா, பிந்து .. என்று மூவரை தேர்ந்தெடுத்தார் ஆரவ்.
போட்டி விதிகளை சரியாக அறிந்துகொள்ளாமல் காஜலுக்கு டிப்ஸ் கொடுத்து இயந்திரக் குரல் எச்சரிக்கை செய்ய, பல்பு வாங்கினார் ரைசா. காஜல் மற்றும் ரைசாவின் கூட்டணி அழுத்தமாகிக் கொண்டு வருகிறது. காஜலின் அராஜகத்தால் எப்போது பிட்டுக் கொள்ளுமோ?
பரப்பரப்பான (?!) அந்தப் போட்டி துவங்கியது. நீச்சல் குளத்தில் வளையம் தேடும் போட்டி. தேடல் இருந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும் என்பது பிக்பாஸின் தத்துவம் போல. மயிரிழையில் சுஜா தோற்றுப் போனார். (அய்யோ.. இதை எழுதும்போது தன்னிச்சையாக காயத்ரி நினைவு வருகிறதே).
ஆரவ்வின் தண்டனை இப்போது சுஜாவின் தலையில் வந்து விடிந்தது. மொட்டையனின் தலையில் கைவைக்க இப்போது வேறு யாரையாவது சுஜா தேடியாக வேண்டும்.
சிநேகனின் ஆருயிர் நண்பராக வையாபுரி மாறிவிட்டார். எனவே, சிநேகன் வையாபுரியிடம் தன் பிரச்னை ஒன்று பற்றி பகிர்ந்தார்.
தன்னுடைய கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பான கிண்டல்கள் வெளியில் பரவியிருப்பதை யூகித்துவிட்ட சிநேகன், இப்போது தன் இமேஜ் குறித்து வருந்துகிறார். இங்கு தான் எப்படி சித்திரிக்கப்படுகிறோம் என்பது குறித்தான கவலை அவருக்கு இருக்கிறது. ‘எல்லா விமர்சனத்தையும் பார்த்துவிட்டோம், இதையும் பார்த்து விடுவோம்’ என்று தனக்குத்தானே ஆறுதலும் கூறிக்கொண்டார்.
அவருக்கு ஆறுதல் சொன்ன வையாபுரி பகிர்ந்துகொண்ட விஷயம் நிச்சயம் பரிதாபகரமானது. ‘நான் நூறு நாள் படங்கள்ல நடிச்சு பல வருஷமாச்சு. ஓடற படங்களைத்தான் மக்கள் பார்க்கறாங்க… அதுல வர்றவங்களைத்தான் ஞாபகம் வெச்சுப்பாங்க.. மத்தவங்களை மறந்துடுவாங்க. வெளிய போகும்போது நம்மளை யாரும் விசாரிக்கலைன்னா கவலையா இருக்கு. இந்த நிகழ்ச்சியின் மூலம் அந்தப் பிரச்னை இருக்காது’ன்னு நெனக்கறேன்.’
என்ன செய்தாவது மஞ்சள் விளக்கின் அடியிலேயே இருக்க வேண்டிய கட்டாயமும் அதை இழக்கும்போது ஏற்படும் சோகமும் விரக்தியும் வையாபுரியின் குரலில் தென்பட்டது. பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக நடிகர்களுக்கான பிரத்யேக சோகம் இது.
பிந்துவின் டிரஸ் சென்ஸை பாராட்டிய வையாபுரி, அவர் தன்னிச்சையாக தான் அணிந்திருந்த செருப்பை சரி செய்யும்போது, ‘டிரஸ்ஸை பத்தி சொல்லும்போது செருப்பைக் கழட்டினா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க’ என்று சொல்லி சிரிக்க வைத்தார். வையாபுரி மற்றும் பிந்துவின் கூட்டணி நகைச்சுவையாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
‘இனிமேல் புறம் பேசக்கூடாது’ என்கிற ஞானத்தை வந்தடைந்திருக்கிறார் ரைசா. இரண்டு பேர் உட்கார்ந்தால் மூன்றாவது நபரைப் பற்றி பேசிப் பேசி அவருக்கே அலுப்பாக இருக்கிறது என்கிற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார். ‘ரைசா, புறம் பேசாமலிருப்பது பிக்பாஸ் விதிமுறைகளின் படி தவறு’ என்று இயந்திரக்குரல் எச்சரித்திருக்கலாம்.
போலவே இன்னொரு ஞானமும் ரைசாவுக்கு வந்திருக்கிறது. மக்களுக்குப் பிடிக்கவில்லையெனில் ஒரே வார நாமினேஷிலேயே வெளியே போகும் ஆபத்து உண்டு. நமீதா, காயத்ரி போன்றோர்களுக்கு அப்படித்தான் ஆயிற்று. ஆனால், ஓவியா தொடர்ந்து நாமினேட் ஆகியும் வெளியில் செல்லவில்லை என்கிற விஷயத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார். தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாக்கை ரைசா எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார் போலிருக்கிறது.
‘நமீதா மேடத்துக்கு’ டீ போடுகிறேன் பேர்வழி என்று முன்னர் கஞ்சா கருப்பு செய்த நகைச்சுவைகளை ஜாலியாகப் பேசிக் காட்டினார் வையாபுரி. பிக் பாஸ் வீட்டின் சிரிப்பொலிகளுக்கு வையாபுரியே காரணமாக இருக்கிறார்.
‘சுஜாவைப் பார்த்தால் ஜூலி நினைப்பு வருகிறது’ என்கிறார் ரைசா. ‘அது fake. இது பொய்’ என்பது காஜலின் வர்ணனை. ‘முடியலைன்னா செய்யற வேலையை நிறுத்திடுங்க’ என்று சொன்னேன். ஆனா பிடிவாதமா செய்யறாங்க’ என்கிறார் ரைசா. மேயற மாட்டை ஏதோ மாடு கெடுக்கிற கதை என்பது இதுதான்.
எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துகொண்டிருந்த சுஜாவைப் பற்றி. செளகரியமாக போர்த்திப் படுத்துக்கொண்டு மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
Buddy’ என்கிற வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டுமென்று வையாபுரிக்கு டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தார் பிந்து. வையாபுரிக்கு அந்த வார்த்தையை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. மெளனராகம் திரைப்படத்தில் சீக்கியர் ஒருவருக்கு ரேவதி தமிழ் சொல்லித் தந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. ‘போடா டேய்”
‘கண்டுகொண்டேன்’ என்றொரு task-ஆம். போட்டியாளர்களின் டீஷர்ட் மற்றும் ஷூக்களை கலைத்துப் போட்டு விடுவார்களாம். கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவரவர்களின் உடமைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமாம். ரைசா மாத்திரம் கடைசி வரையில் அம்போவென்று தேடிக் கொண்டிருந்தார். ‘இந்த மாதிரி ஐடியாக்களுக்கு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ”
பிக்பாஸ் வீட்டில் இன்னொரு கவிஞரும் உருவாகிக் கொண்டிருக்கிறார். சுஜாதான் அது. ‘பூச்சிகள் சுதந்திரமாக உலாவுகின்றன. மனிதர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பது அவருடைய கவிதையின் மையப்புள்ளி. இதை சீனியர் கவிஞரான சிநேகனிடம் சொல்லி சான்றிதழ் வாங்கினார். தமிழ்நாட்டில் கவிதை எழுதாதவர்களின் நிலைமைதான் பாவம். மற்றவர்களுடையதை வாசிக்க வேண்டிய பரிதாபத்தில் இருக்க வேண்டும்.
வாக்குமூல அறைக்கு அழைக்கப்பட்டார் சுஜா. அவருடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியை வேறொருவருக்கு மாற்ற ஒரு வாய்ப்பு. இரவு முழுவதும் அவருடன் விழித்திருக்க ஒரு பலியாட்டை சம்மதிக்க வைக்க வேண்டும்.
முதலில் இதற்கு விழித்த சுஜாவின் கண்களில் பிறகு உற்சாகமான மின்னல் தோன்றியது. யார் அந்த பலியாடு என்பதான உத்தேசம் அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஆம். சீனியர் கவிஞர் சிநேகன்தான் அது. உற்சாகமாக ஓடிச் சென்ற சுஜா, சிநேகனிடம் நைச்சியமாக கெஞ்ச சிநேகனும் ஒப்புக்கொண்டார். பெண் என்றால் பேயே இரங்கும்போது, தேவதைகளின் காப்பாளர் சிநேகன் இரங்காமலா இருப்பார்?. ஆனால், இன்னொருவருக்கு உதவி செய்ய இரவு முழுவதும் விழிக்கத் தயாராக இருந்த சிநேகனின் நல்லியல்பை பாராட்டியே ஆக வேண்டும்.
சிநேகன் ஒப்புக்கொண்டவுடன் குத்தாட்டம் போட்ட சுஜாவைப் பார்த்து ‘என்ன சுஜா’ என்று கணேஷ் விசாரிக்க, அது அப்போதைக்கு ரகசியம் என்பதால் அவர் வெவ்வே காட்ட, ‘சரி.எதுவோ.. நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்’ என்றார் கணேஷ்.
‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தில் நாயகிக்கு உதவும் கமலைப் பார்த்து ரஜினி சிகரெட் வாயில் தொங்க… தெனாவெட்டாக ‘ஜென்டில்மேன்’ என்பார். அதே தொனியில் கணேஷை சொல்லத் தோன்றுகிறது.
இரவு முழுவதும் விழித்திருக்கும் task-ன் முதல் பாகம் மட்டுமே வெளியானது. பிறகே அதன் இரண்டாவது பகுதியின் ரகசியம் வெளிப்பட்டது. விழித்திருப்பவர்கள் பந்துகளை எறிந்து பரஸ்பரம் பிடித்து கூடையை நிரப்ப வேண்டும். இரவு முழுவதும் விழித்திருந்து இதைச் செய்ய வேண்டுமாம். இதைவிட குரூரமான, பைத்தியக்காரத்தனமான task இருக்க முடியாது.
சரி, பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறித்தானே ஆக வேண்டும்?
சுஜா – சிநேகன் கூட்டணியின் இந்த விளையாட்டுக்குத் தங்களால் ஆன பங்கைத் தருவதாக சிலர் ஒப்புக்கொண்டனர். காஜல் மட்டும் ‘என்னைக் கூப்பிடாதீங்க. நான் வர மாட்டேன்’ என்று சுஜாவின் மீதுள்ள எரிச்சலை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார்.
வீட்டில் உள்ள ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்வதற்காக எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார் என்கிற சகிப்புத்தன்மையையும் உதவி செய்யும் மனப்பான்மையையும் சோதிப்பதற்கான விளையாட்டு இது. ஆனால், காஜல் தன்னுடைய அராஜகமான பதிலின் மூலம் துவக்கத்திலேயே சறுக்குகிறார். ஆனால் ரைசா, ஆரவ் என்றால் உதவுவாராம். என்ன மனிதர்களோ!
சுஜாவை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதான தோரணையில் ஐடியாக்கள், அந்த விளையாட்டின் டைனமிக்ஸ், டயட் கண்ட்ரோல் என்று பல விஷயங்களை ஒரு கோச் போல சொல்லிக் கொண்டிருந்தார் கணேஷ்.
விளையாட்டுக்கு முன்பு வார்ம் –அப்பாக சிநேகன் வையாபுரியுடன் கிசுகிசுப்பாக ரகசியம் பேசிக்கொண்டிருந்தார்.
பந்தை எறிந்து விளையாடும் போட்டி துவங்கியது. நள்ளிரவுக்கும் மேல் நீண்டு கொண்டிருந்த அந்தப் போட்டியில் சோர்வடையத் துவங்கிய இருவரையும் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. மற்றவர்கள் உறங்கி விட, கணேஷூம் ஆரவ்வும் உதவ வந்தனர்.
பந்துகளை எறிவதற்குப் பதில், பிக்பாஸை வசைச் சொற்களால் அர்சிக்க வேண்டும் என்று போட்டி வைத்திருந்தால், அனைவருமே ஆர்வமாக முன்வந்து பங்கேற்பார்களோ எனத் தோன்றுகிறது!