நான் வெறும் குறியீடு மட்டும்தான் என்னை உங்கள் ஆயுதமாக்குங்கள் - தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் அறைகூவல்


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழர்கள் முன்னர் போட்டியிட்டிருந்தாலும் முதல் முதலாக தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கூட்டமைப்பில் ஒரு பொது வேட்பாளராக போட்டியிடுகின்றீர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவத்தை எப்படி உணர்க்கிறீர்கள் ?


இதனை வரலாற்று முக்கியத்துவம் என்று கூறுவதை விட வரலாற்றுக் கடமையாகவே நான் பர்க்கின்றேன். ஏனெனில் பிரித்தானியரிடமிருந்து இலங்கை சிங்களவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பின் ஆட்சிக்குவந்த எட்டு ஜனாதிபதிகளினாலும் தமிழினம் ஏமாற்றப்பட்டுவிட்டது. ஈழத்தமிழினம் இனியும் ஏமாறுவதற்குத் தயாரில்லை என்ற செய்தியை தென்னிலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் சர்வதேசசமூகத்திற்கும் ஆணித்தரமாக தெரிவிப்பதற்காகவே சிவில் சமூகக் கட்டமைப்புக்களும் தமிழ்த்தேசியப் பாதையில் பயணிக்கின்ற அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்கின்றன.  இந்த பொதுக் கட்டமைப்பில்தான் நான் ஒரு பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளேன். நான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் என்று சொல்வதைவிட தமிழ் மக்களின் அடையாளமாக போட்டியிடுகின்றேன். உண்மையில் இந்த வாக்குகள் எனக்குரியவை அல்ல. இவை தமிழ்த்தேசியக் கொள்கைக்கான வாக்குகள். தமிழ் மக்கள் இன்னமும் அதே மாறாத தமிழ்த்தேசியக் கொள்கையுடனேயே இருக்கின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பறைசாற்றுகின்ற வாக்குகளாகவே இருக்கும். இந்த தேர்தல் தமிழ் மக்களின் அபிலாசைகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லக்கூடிய ஒரு தேர்தலாக இருக்கும். 


ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பொது வேட்பாளராக போட்டியிடும் தாங்கள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்த முடியுமா ?


நாங்கள் இன்னமும் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவில்லை. வேட்புமனுத்தாக்கலின் பின்னர்தான் எமது உத்தியோகபூர்வ கொள்கைப் பிரகடனம் வெளியிடப்படும். ஆனாலும் முள்ளிவாய்க்காலில் எமது விடுதைலப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட இந்த 15 வருட காலப்பகுதியில் ஒரு சிறந்த தலமை இல்லாத சமூகமா எமது அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்தான் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகளை ஒன்றிணைத்து சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுவான கட்டமைப்பிற்கு வந்திருக்கின்றன. அந்தவகையில் எங்களுடைய ஒரே இலக்கு எமது மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதுதான் எம்முடைய பிரதான இலக்காக இருக்கின்றது. எமக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகள், அரசியல் கைதிகள் பிரச்சனைகள், நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் என பல்வேறு பிரச்சனைகளை எமது தமிழினம் தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. இவற்றிற்கெல்லாம் தீர்வு தமிழினம் தனது தாயகப் பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் ஒரு தேசிய இனமாக வாழ்வதுதான். இதன் மூலம்தான் எங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். அந்தவகையில் நாங்கள் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஏமாற்றப்பட்டிருக்கிறோம். எனவேதான் இந்த தேர்தலில் எங்களது உரிமைக் கோசங்களை முன்னிறுத்தி நாங்கள் எங்களுக்கே வாக்களிப்போம். எங்கள் பலத்தையும் ஒற்றுமையையும் நிரூபிப்போம். 




இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக முடியாத ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு சொல்லப்போகும் செய்தி என்ன ?


எங்கள் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் நாங்கள் இதற்கு முன்னரும் பல செய்திகளை நாங்கள் சொல்லியிருக்கிறோம். எமது செய்திகளை அயுத பலத்தோடும் சொல்லியிருக்கிறோம். அரசியல் பலத்தோடும் சொல்லியிருக்கிறோம். அரசியல் ரீதியாக கூறுவதானால் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி பலமான ஒரு  செய்தியை முன்னைத்திருந்தோம். அதேபோல 2001 ஆம் ஆண்டு தமிழினம் ஓரணியாக திரண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்து பலமான ஒரு செய்தியை வழங்கியிருந்தது. இந்தத் தேர்தல் இன்னுமொரு பலம்மிக்க செய்தியை சர்வசேத்திற்குச் சொல்லும். சர்வதேசத்திற்கு மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்திற்கும் ஆணித்தரமான செய்தி ஒன்றை இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் கூறுவார்கள். நாங்கள் தனித்துவமான தேசிய இனம். சிங்கள தேசத்தின் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் தேர்தலில் அதன் பங்காளிகளாக நாங்கள் இருக்கமாட்டோம். உங்கள் ஜனாதிபதியை நீங்களே தெரிவுசெய்யுங்கள். நாங்கள் எங்கள் அபிலாசைகளை முன்னிறுத்தி இதுதான் எங்கள் கோரிக்கை என்பதை வலியுறுத்தி எங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்கிறோம் என்ற செய்தியை சொல்வோம்.


சுமந்திரன் சாணக்கியன் என ஒரு சாரார் தமிழ்ப்பொது பேட்பாளரை எதிர்க்கின்ற சூழலில் அதே தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான நீங்கள் தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறங்கியிருக்கிறீர்கள் இது குறித்து கூற முடியுமா ?


எங்கள் கட்சிக்கு சில கொள்கைகள் இருக்கின்றன. அதே போல எனக்கான தனித்துவமான கொள்கைகளும் இருக்கின்றன.1976 ஆம் ஆண்டிலிருந்து நான் 47 வருடங்களுக்கு மேலாக தமிழ்த்தேசியக் கொள்கை சார்ந்து பயணித்துவருகின்றேன். எமது தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசியத்திற்கு எதிரான கட்சி அல்ல. தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசியக் கட்சிதானே. எமது கட்சிக்குள் புகுந்த சிலர் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டோடு செயற்பட்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழரசுக் கட்சியையும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் வைத்துப் பார்க்க முடியாது. தமிழரசுக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என இன்னமும் முடிவெடுத்திராத சூழலில் கூட இன்னமும் பொதுவேட்பாளராகப் போட்டியிடுகின்ற எனது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடிய  பலர் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கிறார்கள். அவர்கள் எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு எம்மை ஆதரிப்பார்கள். அவர்கள் மாறத பற்றுறுதியோடு தமிழ்த்தேசியக் கொள்கைசார்ந்து பயணிப்பார்கள். எனவே ஒருசில புல்லுருவிகளைப் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.



தென்னிலங்கையில் பலமுனைப் போட்டிக்கான களம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு கொள்கை சார்ந்து போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளராக தங்கள் முன்னுள் சவால்கள் எவை ?


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பலர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். ரணில், சஜித், அனுரகுமார, நாமல் என தென்னிலங்கையில் பல வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வேட்பாளரும் தங்கள் வெற்றிக்காக மக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவார்கள். தென்னிலங்கை அரசியல் தரப்பிலிருந்து பல வேட்பாளர்கள் போட்டியிடுவதால் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். எனவே அவர்களுக்கு தமிழ் மக்களிடைய வாக்குகள் தான் தேவை. தமிழ் மக்களினுடைய வாக்குகுள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இம்முறை தமது கொள்கைகளை முன்னிறுத்தி பொது வேட்பாளரை களமிறக்கியுள்ளதால் சிங்கள் தரப்பிற்கு அது பெரும் பேரிடியாக மாறியிருக்கிறது. எனவே அவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள தங்கள் முகவர்கள் ஊடாக தமிழ் மக்களை நோக்கி சலுகைகளை அள்ளி எறிவார்கள் என எதிர்பார்க்கலாம்.  எம்மிடம் வாக்குறுதிகள் இல்லை நாங்கள் எங்கள் கொள்கைகளை முன்னிறுத்தியே போட்டியிடுகின்றோம். அது எமக்கு சவாலானதாக இருக்கும். ஆனாலும் தமிழ் மக்கள் சலுகைகளுக்கு விலைபோபவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பார்கள் என நம்புகின்றோம்.


தமிழ் மக்களை இந்த தேர்தலில் கொள்கை நோக்கி அணிதிரட்டுவது எப்படி ?


தமிழ் மக்கள் சலுகைகளுக்கு விலை போபவர்கள் அல்ல. அவர்கள் இன மான உணர்வோடு தமது கொள்கைக்காக தன்னெழுச்சியாகவே அணிதிரள்வார்கள். எனினும் எமது பொதுக் கட்டமைப்பு அதற்கான பிரச்சாரைப் பணிகளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கும். நாங்கள் ஏன் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக முடியாத அரசியலமைப்பைக் கொண்ட இலங்கையின் ஜனாதிபத் தேர்தலில் தமிழ் மக்கள் போட்டியிட முடிவெடுத்த காரணம் என்ன ? இந்தத் தேர்தல் ஏன் தமிழ் மக்களுக்கு முக்கியமானது ? என்கின்ற கேள்விகளுக்கான பதில்களை நாங்கள் வழங்குகின்றபோது தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக அணிதிரள்வார்கள். இதற்கு முன்னரும் தமிழ் மக்கள் பல தடவைகள் தன்னெழுச்சியாக அணிதிரண்டிருக்கிறார்கள். வடக்கு மகாணத்திற்கு முதல் முதலில் தேர்தல் நடந்தபோது தமிழ் மக்கள் பெருவாரியாக திரண்டு எதிர்க்கட்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தமையை நான் தற்போது நினைவுபடுத்துகின்றேன். இந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் வெறும் கருவி மட்டும்தான் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாய் ஒன்றுதிரட்டு என்னை உங்கள் ஆயுதமாக்கி உங்கள் அரசியல் அபிலாசைகளுக்கான கொள்கையை வெற்றிபெறச் செய்யவேண்டும் என தமிழ் மக்களிடம் இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். 

நன்றி - உரிமை 




Post a Comment

Previous Post Next Post