சங்கு சின்னத்தை அபகரித்து முதுகில் குத்திய ஜனநாயக தேசிய கூட்டணி - கலியுகன்


தமிழ் மக்களை ஓரணியில் திரட்டும் முயற்சியாக சிவில் அமைப்புக்களின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையும் ஏழு அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடிவுசெய்து மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரனை சுயேட்சை வேட்பாளராக களமிறக்கியிருந்தன. அவர் சங்குச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.   

அரியநேந்திரனை வேட்பாளராகக் களமிறக்குவதற்கு முன் சிவில் அமைப்புக்களின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச்சபை பிரதிநிதிகளுக்கும் ஏழு அரசியல் கைதிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் தென்னாசியப் பிராந்தியத்தில் ஆகப்பிந்திய புதிய முயற்சி என்றும் இது தமிழ் மக்களின் அரசியல் நகர்வினை புதிய பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் அந்த ஒப்பந்தம் குறித்து தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தனர். 


அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவைதான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரே பொது வேட்பாளருக்கான சின்னமோ அரசியல் கட்சிகளால் தங்களது சுய நலநோக்கின் அடிப்படையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதுதான் அந்த முக்கிய இரு விடயங்கள். 


தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேந்திரன் தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு தமிழ்ப்பொது வேட்பாளருக்கான சின்னமாக சங்கு சின்னம் தெரிவு செய்யப்படுவதற்கு முன் தமிழ் மக்கள் பொதுச்சபை இந்த ஏழு அரசியல் கட்சிகளிடமும் உங்கள் கட்சிபெயரையும் சின்னத்தையும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்த தர முடியுமா என தமிழ் மக்கள் பொதுச்சபையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியிடம் அவர்களின் குத்துவிளக்குச் சின்னத்தை தருமாறு கோரப்பட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். இன்னொரு தேர்தல் நடைபெறும்போது அந்த சின்னத்தை நாங்கள் பயன்படுத்தவேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கு தந்துவிட்டால் உங்கள் ஒப்பந்தப்படி அடுத்துவரும் தேர்தல்களுக்கு பயன்படுத்த முடியாது. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாங்கள் என்ன செய்வது என ஜனாநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி குத்துவிளக்கு சின்னத்தை வழங்க மறுத்துவிட்டது. ஈபிஆர்எல்எவ் கட்சி மட்டும் கொள்கையளவில் தமது சின்னத்தை வழங்க உடன்பட்டிருந்தது. அதுவும் கால அவகாசம் போதாமையால் சாத்தியமற்றுப் போய்விட்டது. 


இந்நிலையில்தான் அரியநேந்திரன் பொது வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டு சுயேட்சைச் சின்னமான சங்குச் சின்னம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில்தான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்ற இரண்டு நாட்களில் பொதுத் தேர்தலை அறிவித்திருந்தார். அதன் பின்னணியில்தான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் அவரச அவசமாக இரகசியமான முறையில் தேர்தல் ஆணையத்திற்கு தங்களது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிரந்தரச் சின்னமான குத்துவிளக்குச் சின்னத்தை மாற்றி குத்துவிளக்குச் சின்னத்திற்கு பதிலாக சங்கு சின்னத்தை தங்களது சின்னமாக தரவேண்டும் என ஒரு விண்ணப்பம் செய்யப்படுகின்றது. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் பொதுச் சபையுடன் முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தத்தை புறந்தள்ளிவிட்டு இவ்வாறு சின்னத்தை மாற்ற விண்ணப்பம் செய்தமைக்கு காராணம் குத்துவிளக்கு சின்னத்தை விட சங்குச் சின்னம் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுவிட்டது, சங்குச் சின்னம்தான் தற்பொழுது ஒற்றுமையின் சின்னம் என மக்கள் மத்தியில் விளங்கவைக்கப்பட்டுவிட்டது என்பதன் அடிப்படையில் தங்களது சுயநல அரசியல் ஆதாயத்திற்காக சங்கு சின்னத்தை அபகரிக்க துணிந்தார்கள். தேர்தல் ஆணைக்குழுவும் அவர்களுக்கு சங்குச்சின்னத்தை வழங்கிவிட்டது. 

ஆனால் தமிழ்ப்பொதுக் கட்டமைப்பின் ஒரு அங்கமான தமிழ் மக்கள் பொதுச்சபை சங்குச்சின்னத்தை ஜனாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பயன்படுத்தக்கூடாது என்கின்ற தீர்மானத்தை எடுக்கின்றது. ஆனால் அதனை மீறி ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சங்குச் சின்னத்தை பெற்றுக்கொண்டுள்ளது. 

இந்த விடயத்தில் சட்டம் என்ன சொல்கின்றது எனில் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏழு நாட்களுக்குள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தனது சின்னத்தை விடுவித்து தனக்கு சுயேட்சை சின்னங்களில் பட்டியலில் உள்ள சின்னங்களில் ஒன்றை நிரந்தர சின்னமாக வழங்குமாறு விண்ணப்பம் செய்தால் தேர்தல் ஆணையம்  அவர்களது விண்ணப்பத்தை பரிசீலித்து தனது தற்துணிவின் அடிப்படையில் அவர்கள் கோரும் சின்னத்தை வழங்க முடியும். அதே போல மறுக்கவும் முடியும். வழங்குவதற்கும் மறுப்பதற்கும் எதிரான நீதிமன்றம் செல்ல முடியாது என்கிறது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட அரியநேந்திரன் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு சட்டத்தரணி ஊடாக விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பிக்கின்றார். நான் பல கட்சிகளின் கூட்டாகவே இந்தத் தேர்தலில் சங்குச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தேன். எனவே பாரபட்டசமான முறையில் அதில் ஒருசில கட்சிகளுக்கு அந்த சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஒரு வார காலப்பகுதிக்குள் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஜனாதிபதித் தேர்தலில் தான் கணிசமான வாக்குகள் பெற்ற சங்குச் சின்னத்தை உடனடியாக வேறு ஒரு கட்சிக்கு வழங்குவது முறையற்றது என்றும் தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் தற்துணிபின் அடிப்படையில் முடிவெடுக்கவேண்டிய தேர்தல் ஆணையம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சங்குச் சின்னத்தை வழங்கியுள்ளது. இங்கு தேர்தல் ஆணையமும் நீதியின்பால் செயற்படவில்லை என்பதுதான் உண்மை. 

தமிழ்ப்பொதுச் சின்னமாக அடையளங்காணப்பட்ட சங்குச் சின்னத்தை தங்கள் சுயநல வங்குறோத்து அரசியலுக்காக அபகரித்த பின்னணியில் புளொட் கட்சியின் தலைவர் சித்தாத்தன் இருந்தபோதும் இப் பெரும் சதி முயற்சியின் திரைமறைவு செயற்றிட்டத்தில் ரெலோ கட்சியின் பேச்சாளரான குருசுவாமி சுரேந்திரனே செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த கேவலமான கீழ்த்தரமான பொறுக்கித்தன அரசியலில் ஈடுபட்டு சங்குச் சின்னத்தை அபகரித்த கும்பலுக்கு தமிழ் மக்கள் சிறந்ததொரு தீர்ப்பினை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். 


Share on Google Plus

About vakeesam

வாகீசம் - தூயவை துணிவோம் - உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் தமிழ் செய்தித் தளம்

0 Post a Comment:

Post a Comment