தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் வழங்கிய நேர்காணல்
தமிழ் மக்களின் கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் உயரிய நோக்கத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட சங்கு சின்னத்தை அந்தக் கூட்டில் இடம் பெற்றிருந்த சில கட்சிகள் கபளீகரம் செய்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
சிதறி இருக்கின்ற தமிழ் மக்களை தமிழ் தேசிய நிலைப்பாட்டின் பக்கம் நின்று ஒன்று திரட்டுவது என்ற உயரிய நோக்கம் தமிழ்ப் பொது வேட்பாளர் மூலோபாயம் மேலோங்கி நின்றது . ஆனால் இம் முறை ஒரு கன்னி முயற்சி என்பதால் பல சதிகளையும் பல சவால்களையும் கடந்து ஒரு சிறு வெற்றியையே அடைய முடிந்திருக்கின்றது. எமது மக்களை ஒன்று சேர்ப்பதற்கு எதிர்பார்ப்புகள் அற்ற மிகப் பொருத்தமான அரசியல் களம் சனாதிபதி தேர்தல் என்பதால் இந்த மக்களை அணிதிரட்டும் முயற்சியை இந்த களத்திலே சாத்தியமாக்க முடியும்.
ஆனால் அந்த நோக்கத்தை அடைவதற்கு முன்னர் சுய நோக்கமும் , இலாப நோக்கமும் மேலாங்கி இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் களத்தில் இந்த சின்னத்தை பயன்படுத்துவது எமது மக்களின் உணர்வுகளையும் , தியாகங்களையும் கொச்சைப்படுத்துவதோடு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பின்னரான ஒரு கசப்பான வரலாற்றை தங்களுக்கு தாங்களே தமிழ்த் தேசிய பரப்பில் எழுதிக் கொள்வதோடு , எமது மக்கள் மத்தியில் தாங்கள் யார் என்பதை தாங்களே அடையாளப்படுத்துகின்றனர் என்பதே நிதர்சனமாகும்.
தமிழ் மக்கள் பொதுச்சபையோ அல்லது பொது கட்டமைப்போ பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பையும் ஓர் அணியில் திரட்டும் முயற்சியில் இருந்து விலகியது ஏன்?
தமிழ் மக்கள் பொதுச் சபை ஒரு குறுகிய கால கட்டமைப்பு என்பதாலும் , சனாதிபதி தேர்தலை கையாளுவதற்காக விரைவான ஏற்பாட்டுடன் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு என்பதாலும் இம்முறை நேரடியாக தலையீடு செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தோம். பாராளுமன்ற தேர்தல் களம் சுயநலன் மேலோங்கிய தொழில் தளமாக தற்போது மக்கள் மத்தியில் பார்க்கப்படுவதால் தமிழர்களின் அரசியல் சுழல் ஒழுங்கு செய்யப்படுவதற்கு முன்னர் நாங்கள் தமிழ் மக்கள் பொதுச் சபையாக தன்னை ஒரு வலுவான தளத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான தகுதியையும் பலத்தையும் அதிகரித்துக் கொள்ளும் வரைக்கும் , தமிழ் மக்கள் ஒரு பொதுத் தளத்தில் பெரும்பாண்மையாக ஒருங்கிணைக்கப்படும் வரைக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபை பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொள்ளாது.
மேலும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஒரு தேர்தல் அரசியல் களம் காணும் கட்சி இல்லை மாறாக குடிசார் சமூகங்களின் கூட்டு என்பதால் தேர்தல் அரசியலில் தாக்கம் செலுத்தும் கட்டமைப்பாக செயற்படும் மாறாக தேர்தலை நேரடியாக செய்யும் கட்டமைப்பாக இருக்காது.
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீது மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க அல்லது வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் பொதுச்சபைக்கு இல்லையா ?
நிச்சயமாக உண்டு. ஆனால் தமிழ் மக்கள் பொதுச் சபை தனக்குள் சில உள்ளக மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. மக்களை ஒருங்கிணைக்கும் பொறிமுறைக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத சனாதிபதி தேர்தல் வெளியே ஒப்பீட்டளவில் மிகவும் பொருத்தமான தளமாகும்.
ஏனைய தேர்தல் களங்கள் பிரித்தாளும் சனநாயக வெளிகள் அதிகம் உடைய தேர்தல்கள் என்பதால் இந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களை ஒன்று திரட்ட முடியாது.
தமிழ் மக்கள் பொதுச்சபையின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
தன்னை பலப்படுத்தி வலுவான மக்கள் கூட்டமைப்பாக மக்கள் மத்தியில் உறுதியான ஒரு தளத்தை ஏற்படுத்துவதற்கு நிர்வாக சீர்திருத்தத்தையும் , நிர்வாக பரவலாக்கத்தையும் செய்வோம்.
தேர்தலை மையப்படுத்தி மாற்றத்திற்கான இளைஞர்கள் என புதிது புதிதாக பல சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் ?
பல சுயற்சைக்குழுக்கள் என்பது தமிழ் தேசியத்திற்கு எதிரான தரப்புகளால் கட்டமைக்கப்படும் ஒரு சதி முயற்சி. ஆனால் கட்சி அரசியலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய அரசியல் தளத்தையும், மக்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள கட்சிகளின் நிர்வாக கட்டமைப்புக்களையும் பொதுவான தளத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றால் வலுவான தமிழ் தேசிய சுயற்சைக்குழு ஊடாக தமிழ் தேசிய அரசியலை கையாளுவதை தவிர வேறு வழி என்னுடைய சிந்தனைக்குள் இல்லை.
0 Post a Comment:
Post a Comment