தமிழரசுக்கட்சி என்ன முடிவெடுத்தாலும் தமிழ்ப்பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு தனது ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விடுத்திருக்கும் அறிவிப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள் ?
தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுகின்ற அரியநேந்திரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களினுடைய இல்லத்திற்குச் சென்ற பொழுது அவரை வரவேற்ற சிறிதரன் அரியநேந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று தமிழ்ப்பொது வேட்பாளரான அரியநேந்திரனின் வெற்றிக்கு தான் முழுமையான ஆதரவு வழங்குவதாக அவர் கூறியிருப்பது உண்மையில் வரவேற்கக்கூடிய விடயம். சிறிதரனைப்போன்று தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் இந்தப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்ட நோக்கம் என்ன என்பதை உணர்ந்து தமிழ்ப்பொது வேட்பாளருக்கு முழுமையாக ஒத்துளைக்கவேண்டும் என்பதுதான் தாயக மற்றும் புலம்பெயர் தமிழ்மக்களினுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நாங்கள் எதிர்பார்க்கின்றோம் வடக்கு கிழக்கெங்கிலுமுள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தமிழ்ப்பொது வேட்பாளர் அரியநேந்திரக்கு முழுமையான ஒத்துளைப்பினை வழங்குவார்கள் என்று. அதற்கு முன்மாதிரியாக சிறிதரன் அவர்கள் அரியநேந்திரனை வரவேற்று அவருக்குரிய ஒத்துளைப்பை வழங்குவதாக அறிவித்தது உண்மையில் வரவேற்கக்கூடிய நல்ல விடயமாக நான் பார்க்கின்றேன்.
சுமந்திரன் சாணக்கியன் போன்றோரே தமிழரசுக் கட்சிக்குள் இருந்து தமிழ்ப்பொது வேட்பாளரை கடுமையாக எதிர்ப்பதாக கூறப்படுகிறதே இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள் ?
உண்மையில் அவர்கள் வேறு ஒரு நிகழ்ச்சிநிரலில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்படுபவர்களாக இருந்திருந்தால் குறிப்பாக சுமந்திரன் நல்லாட்சி என்று ரணில் விக்கிரமசிங்கவோடு திரிந்தபோது பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது. குறிப்பாக கல்முனைப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை என அன்றைக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிட்டுவிட்டு கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்த முடியாதவர்கள் தற்சமயம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இறுதிவரையும் அனைவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் நாங்கள் பார்த்து தேர்தலுக்கு 24 மணித்தியாலத்திற்கு முன்பாக தாங்கள் முடிவெடுத்து அறிவித்தால் சிங்கள வேட்பாளர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று அவர் கூறியிருக்கின்றார். நிச்சயமாக அது நடக்கவே நடக்காது. ஏனெனில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சுமந்திரன் போன்றவர்கள் மக்களை ஏமாற்றிய விடயம் எல்லோருக்கும் தெரியும். இவர்கள் கூட சில காலத்திற்கு முன் கூறியிருந்தார்கள் தாங்கள் ரணில் விக்கிரமசிங்கவினாலும் மைத்திரிபால சிறிசேனவினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என. எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அவர்கள் தங்களுக்கான நிகழ்ச்சிநிரலோடு இருக்கிறார்கள். இவர்கள் கூறுகின்ற விடயத்தை மக்கள் கவனத்தில் எடுக்கின்ற நிலையில் இல்லை என்பதுதான் உண்மை. மக்கள் அனைவரும் பொதுக்கட்டமைப்பால் தமிழ்ப்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான அரியநேந்திரனின் சங்குச் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள்.
பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியமைத்தால் வடக்கு கிழக்கு இணைப்புக்கோ காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கவோ மாட்டோம் என நாமல் ராஜபக்சகூறியிருப்பது தொடர்பில் கூற முடியுமா ?
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக இருக்கின்ற நாமல் ராஜபக்ச நான்காவது - ஐந்தாவது இடத்தில் பின்தள்ளப்பட்ட நிலையில் இருக்கின்றார். பெரமுனவோடு இருக்கின்ற தொண்ணூறு வரையான எம்.பிக்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோடு நிற்கின்றார்கள். இந்த நிலையில் நாமல் ராஜபக்சவோ அவர்களின் கட்சியான பொதுஜன பெரமுனவோ இந்தத் தேர்தலில் வெல்லவே வெல்ல முடியாத நிலைதான் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் தமக்கோ தமது கட்சிக்கோ வாக்களிக்க மாட்டார்கள் என்பது ராஜபக்சே குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரிந்த விடயம். எனவே தான் நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கின்றார். ஏனெனில் ராஜபக்சேக்களால் தமிழினம் இனப்படுகொலை செய்யப்பட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின் நடைபெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ச, கோட்டபாஜ ராஜபக்ச என ராஜபக்சே குடும்பத்தினரை எதிர்த்தே வாக்களித்திருக்கின்றார்கள். தமிழ் மக்களின் பிரதான எதிரிகளான இனப்படுகொலையாளிகளான ராஜபக்சேக்களை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கும், மைத்திரி பால சிறிசேனவிற்கும், சஜித் பிரேமதாசவிற்கும் வாக்களித்தார்கள். அவர்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. இந்த ஜதார்த்தம் தெரிந்துதான் நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கிறார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தாதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிவிட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதே இதனை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
உள்ளூராட்சித் தேர்தல் மட்டுமல்ல மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு தமிழரசுக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்களும் காரணம். ஏனெனில் மீண்டும் விக்கினேஸ்வரன் ஐயா முதலமைச்சராக வந்துவிடுவார் என பயந்து தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற சில உறுப்பினர்கள் ரணிலோடு இணைந்து மாகாணசபைத் தேர்தலை நடத்தாது இழுத்தடிப்பதில் அக்கறை கொண்டிருந்தனர். அதே போல தொடர்ந்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாததற்குக் காரணம் இந்த ரணில் - ராஜபக்சே கூட்டு அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு மிகக் குறைவாக காணப்பட்ட சூழலில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைந்துவிடுவோம் என அவர்கள் கருதியதாலேயே வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட பின்பும் அந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் இன்று நீதிமன்றம் அதிரடியான உத்தரவின் மூலம் ரணில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிவிட்டார் என கூறி உடனடியாக உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துமாறு உத்தரவிட்டிருக்கின்றது. இதன் மூலம் கூடியவிரைவில் உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத்தேர்தல்களை நடத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழ் மக்கள் பெரியளவில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை அவர்கள் சலிப்பு நிலையில் இருக்கிறார்கள் என கூறப்படும் நிலையில் தமிழ்ப்பொதுக் கட்டமைப்பு தமிழ்ப்பொது வேட்பாளரை எவ்வாறு மக்கள் முன் கொண்டுசெல்லப்போகிறது ?
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின் இனப்படுகொலை புரிந்த ராஜபக்சேக்களுக்கு எதிராக அவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் மக்கள் பேரழுச்சியாகத் திரண்டு ராஜபக்சேக்களுக்கு எதிராக சரத் பொன்சேகாவிற்கும், மைத்திரி பால சிறிசேனவிற்கும், சஜித் பிரேமதாசவிற்கும் வாக்களித்தார்கள் ஆனால் இன்று நிலமை அப்படியல்ல. ராஜபக்சே தரப்பிலிருந்து எவரும் ஜனாதிபதியாக வரமுடியாத சூழல் காணப்படுகின்றது. இரண்டாவது விடயம் இதுவரை இலங்கையில் நடைபெற்ற எட்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் நல்லெண்ண சமிக்ஞையாக வாக்களித்த வேட்பாளர்கள் கூட ஒரு துளியளவும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதற்கு அப்பால் மிக மோசமான முறையில் தமிழ் மக்களுக்கு எதிராக இவர்கள் தமிழின அழிப்பிற்கு துணைபோனவர்களாகவும் படுகொலைகளுக்கு காரணமானவர்களாகவும் இருக்கின்ற சூழலில் நாங்கள் காலத்தின் தேவை கருதி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தியுள்ளோம். இதனை மக்கள் புரிந்துகொண்டு வாக்களிப்பார்கள். தமிழ்ப்பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரப் பயணம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழினத்திற்காக அஞ்சலித்து முல்லைத்தீவு மண்ணிலிரு்து அவர் தனது பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களுக்கும், மேலதிகமாக தேவைக்கேற்ப வடக்கு கிழக்கிற்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கும் அவர் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்வதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. வடக்கு கிழக்கில் எமது தமிழ்ப்பொது வேட்பாளர் பொலிகண்டி முதல் பொத்துவில் வரை பயணங்களை மேற்கொண்டு மக்களுக்கான கொள்கைசார் விளக்கங்களை வழங்குவதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இதனை விட புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற சுமார் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட உறவுகளுடனும் தமிழ்ப்பொதுக் கட்டமைப்பிலுள்ள பிரதிநிதிகள் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். புலம்பெயர் உறவுகளும் தாயக உறவுகளும் ஓரணியில் திரளும்போது எமது கொள்கைசார் வேட்பாளர் அதிகப்படியாக வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம். புலம்பெயர் தமிழர்களின் தாயக மக்களை நோக்கிய உந்துதல் மிகப்பெருமளவிலான வாக்களிப்பினை உறுதிப்படுத்தும் எனவே நாங்கள் புலம்பெயர் உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் தாயகத்திலுள்ள உங்கள் உறவுகளை தமிழ்ப்பொது வேட்பாளர் போட்டியிடும் சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கோருங்கள். உங்கள் உந்துதல் எமது வேட்பாளருக்கு இன்னமும் பலம் சேர்க்கும்.
0 Post a Comment:
Post a Comment