ads top

வங்கதேச ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா


 வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறிய ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாய், தனது தாயின் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததற்கு நாட்டில் உள்ள ஒரு சிறு குழுவினரின் சதியும், ஐஎஸ்ஐயும் தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.


தனது தாயின் உயிரை காப்பாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


ஷேக் ஹசீனாவின் விசாவை மேற்கத்திய நாடுகள் ரத்து செய்ததாக வெளியான தகவலும், அவர் பிற நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியதாக வெளியான செய்திக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏஎன்ஐ (ANI) செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், வங்கதேசத்தின் ஒரு சிறிய குழு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தான் நம்புவதாக சஜீப் வாஜித் கூறியுள்ளார். ஏனென்றால், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எந்த முகாந்திரமும் இல்லை. போராட்டக்காரர்கள் கோரியபடி இட ஒதுக்கீட்டை அரசு வெகுவாகக் குறைத்துவிட்டிருந்தது.


இடஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் முடிவு எடுத்தது ஹசீனா அரசாங்கம் அல்ல, நீதிமன்றம் தான் என்று அவர் கூறினார்.


"போராட்டத்தில் காவல்துறையை அத்துமீறி தாக்குதல் நடத்துமாறு அரசு ஒருபோதும் உத்தரவிடவில்லை. அத்துமீறி அதிகாரத்தை பயன்படுத்திய காவல்துறை அதிகாரிகளை அரசாங்கம் உடனடியாக இடைநீக்கம் செய்தது, ஆனால் போராட்டக்காரர்கள் திடீரென எனது தாயாரின் அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரத் தொடங்கிவிட்டனர்" அவர் விவரித்தார்.


"மேலும், போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன? அவர்கள் மாணவர்கள் அல்ல, கலவரக்காரர்கள். அவர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க தூண்டப்பட்ட பயங்கரவாதிகள். நாட்டில் இனப் படுகொலை சூழலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற காரணத்தினால் எனது தாயார் பதவி விலகினார்.” என்று சஜீப் வாஜித் ஜாய் கூறியுள்ளார்.


ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சஜீப் வாஜித் ஜாய், `இதில் அமெரிக்கா ஈடுபட்டதா இல்லையா என்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை என்று கூறினார். ஆனால் நிலைமையைக் கூர்ந்து கவனித்தால், போராட்டக்காரர்களை அரசுக்கு எதிராக யாரோ தூண்டிவிட்டதை உணரமுடியும் என்றார்.


மேலும் கூறுகையில், “ஆரம்பத்தில் போராட்டம் அமைதியாக நடந்தது. முதல்கட்ட போராட்டத்திற்கு பிறகு இடஒதுக்கீட்டை அரசு குறைத்தது. வன்முறையைத் தடுக்க தேவையான எல்லாவற்றையும் அரசாங்கம் செய்தது. இந்த வன்முறை சில அடையாளம் தெரியாதக் குழுக்களால் பரப்பப்பட்டது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளால் இந்த வன்முறை தூண்டப்பட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

Share on Google Plus

About vakeesam

வாகீசம் - தூயவை துணிவோம் - உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் தமிழ் செய்தித் தளம்

0 Post a Comment:

Post a Comment