தமிழ் மக்களின் கூட்டுப் பலத்தை நிராகரிப்பவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள் !! தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சூளுரை

 


வடக்கு-கிழக்கு சிவில் சமூகங்களின் கூட்டிணைந்த முயற்சியில், தமிழ் அரசியல் கட்சிகளையும், ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஆரோக்கியமான ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில்  முன்னேற்றகரமான ஒரு நகர்வாகும்.இதன் நிலைத்திருப்பில் அனைத்து தரப்பினரும்  தனிநபர் விருப்பு, வெறுப்புகளை முன்னிலைப்படுத்தாமல் கூட்டுப் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சமகால அரசியல் நிலவரங்களை மையமாக  வைத்து இன்று வெளியிட்டடுள்ள  வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் ஈழத்தமிழர்களுக்கு தமது கோரிக்கைகளை ஒன்றுபட்ட குரலில் உரத்து  சொல்லவதற்கான புதிய வாய்ப்பை அடையாளப்படுத்தியுள்ளது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழீழ விடுலைப்புலிகள் தமது அரசியல் அணுகுமுறைகளுக்கேற்ப  அன்றைய சூழலில் வேறுபட்ட முடிவினை எடுத்திருந்தனர். எனினும் ஏனைய அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களில்,  தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் சேகரித்து கொடுக்கும்  சேவகம் செய்யும் வகையிலேயே தமிழ் அரசியல் கட்சிகள் முடிவெடுத்திருந்தனர்.  இது தமிழ் மக்கள் கோரும் இனவழிப்பிற்கான நீதிக்கோரிக்கையையும் பலவீனப்படுத்தியது. தென்னிலங்கை அரச ஆதரவுடன்  தமிழர்  தாயகத்தில் மேற்கொள்ளப்படும்  சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்களை அங்கீகரித்தது.

எவ்விதமான மூலோபாய அணுகுமுறைகளுளின்றி எதிரணி தெரிவு, ஒப்பீட்டடிப்படையில் ஆபத்து குறைந்த பிசாசு தெரிவு மற்றும் ராஜபக்ச எதிர்ப்புவாதம் எனும் அடிப்படையில் முடிவுகளை எடுத்திருந்தனர். தமிழ் மக்களும் நெறிப்படுத்தப்பட்டிருந்தனர். 2010ஆம் ஆண்டில் உச்சபட்சமாக தென்னிலங்கையின் தமிழ் மக்கள் மீதான போர் வெற்றிக்கான போட்டியில், தமிழ் மக்கள் தம்மீதான சரத் பொன்சேகாவின் போர் வெற்றியை அங்கீகரித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களை நெறிப்படுத்தியிருந்தது. மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான முடிவை சுட்டிக்காட்டி, தமிழ்ப் பொது வேட்பாளர் எனும் மூலோபாய அணுகுமுறையை நீண்டகாலமாகவே பரிந்துரைத்தார்.


தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்தியீவிகளின் கருத்தை நிராகரித்து, தென்னிலங்கையை இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது. தொடர்ச்சியான 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் அதனையே தொடர்ச்சியாக பின்பற்றியிருந்தது. இது தமிழ் மக்ககள் போலித் தேசியம் பேசும் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளை நிராகரித்து, தென்னிலங்கை கட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தல்களிலும் ஆதரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. 


2020  ஆம் ஆண்டு வடக்கு-கிழக்கு பாராளுமன்ற பிரதிநித்துவம் அதனையே உறுதி செய்கின்றது. போலித் தேசியவாதிகள் மீதான தமிழ் மக்களின் கோபம், தமிழ்த் தேசிய இருப்பிற்கு பலமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதற்கான சீர்திருத்தமாக தமிழ் மக்களிடையே பலமான சிவில் சமுக செயற்பாடு, பொதுக்கட்டமைப்பின் தேவைப்பாடும் அவசியமாகிறது. இதற்கான வாய்ப்பு இலங்கை ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி தற்போது எழுச்சி பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரிப்பதுடன், ஈழத் தமிழர்களின்  வலுவான கோரிக்கைகளை  முன்னிறுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசியத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. வடக்கு-கிழக்கின் சிவில் சமுகங்கள் நீண்ட கால அமைதிக்கு பின் ஆக்கபூர்வமான அரசியல் களத்திற்குள்  இறங்கியுள்ளளனர். வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபை, தமிழ் மக்களின் திரட்சியை விரும்பும் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ்த் தேசிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதனை தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் முழுமையாக வரவேற்கிறது. அத்துடன் பொதுக் கட்டமைப்பு   தமிழ்  மக்கள்  மீது மேற்கொள்ளப்பட்ட  இனவழிப்பிற்கான நீதியை வென்றெடுப்பதற்கான காத்திரமான   பணிகளையும் முன்னெடுக்கும் அதேவேளை அரசியல் தீர்வு விடயத்திலும் சமரசமின்றி இலக்கு நோக்கி நகரவேண்டும்  அத்துடன் பொருளாதார,  சமூக மட்டதிலும்  தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நிலைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post