
இலங்கையின் பொருளாதார நிலமைகள் தொடர்பில் – நிதி முகாமைத்துவ நிபுணரும் FinTech Hive (PVT) Ltd நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கனகநாயகம் சயந்தன் வழங்கிய சிறப்பு நேர்காணல்
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையினை தெளிவாக விளக்க முடியுமா?
இலங்கையின் பொருளாதாரம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை என்றும் கண்டிராத, கடுமையான, பாரதூரமான நெருக்கடி நிலையில் இருக்கின்றது. பிற நாடுகளில் இருந்து அத்தியவசியமான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 2019ஆம் ஆண்டு 8.8 பில்லியன் டொலர்களாக இருந்த அன்னிய செலாவணி கையிருப்பு, தற்பொழுது முழுமையாக கரைந்து வெறும் 800 மில்லியன் டொலர்களாக இருக்கின்றது. அத்தோடு 2014ஆம் ஆண்டு 893 மில்லியம் டொலர்களாக இருந்த இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பும் தற்பொழுது வெறும் 100 மில்லியன் டொலர்களிலும் குறைவாக இருக்கின்றது. இத்தகைய விளிம்பு நிலை அன்னிய செலாவணி கையிருப்பினை வைத்துக்கொண்டு அடுத்த சில வாரங்களுக்கு தேவையான அத்தியவசிய உணவு, எரிபொருள் மற்றும் மருந்துவகைகளையே இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்ய முடியும்.
மேலும் இலங்கையின் மொத்த 15 பில்லியன் இறையாண்மை பத்திரக் கடனில் ஒரு பில்லியனினையும் 45 பில்லியன் நீண்ட காலக் கடனில் அண்ணளவாக 7 பில்லியனையும் வட்டியுடன் இந்த வருட இறுதிக்குள் மீள் செலுத்த வேண்டும். ஆனால் கையிருப்போ அடுத்த சில வாரங்களுக்கு மட்டுமே போதுமானது.
அரச வருமானம் கணிசமாக குறைவடைந்து, செலவீனங்கள் அதிகரித்தும் காணப்படுவதனால் நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு வருடத்துக்கு முன்னர் 3.6 வீதமாக இருந்த பணவீக்கம் தற்பொழுது மத்திய வங்கியின் உத்தியோக பூர்வ தரவின் படி 22 வீதத்திற்கும் அதிகமாக காணப்படுகின்றது. அதனால் வாழ்க்கைச் செலவு நடுத்தரக் குடும்பம் ஒன்றினாலும் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துச் செல்கின்றது.
இந்த நிலைமை தொடருமானால் இன்னும் சில வாரங்களில் உலகின் அதிக பணவீக்கமுடைய நாடுகளில் இலங்கை முன்னிலைக்கு வருவதைத்த தவிர்க்க முடியாது.

பொருளாதாரத்தை மீட்க கடன் பெற்றால் மட்டும் போதுமா ? வேறு என்ன வழிவகைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் ?
இலங்கையின் தற்போதைய நிலமை மிகவும் கடினமான சிக்கலுக்குரியது. ஒவ்வாரு தீர்மானமும், தீர்மானம் மிக்கவை. கடனைப் பெற்றுக் கடனை அடைப்பதனால் இந்தச் சிக்கல் தீரப்போவது இல்லை. மாறாக மீளவே முடியாத பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும்.
இலங்கையின் இன்றைய இந்த பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு மூலகாரணம் 1977ம் ஆண்டில் திறந்து விடப்பட்ட பொருளாதாரமும் அதனூடாக அதிகரித்த உதவித்திட்டங்களுக்காக்க நிதி உதவிகளும் இலங்கையின் இனப்பிரச்சனையும் தான். நீண்டகால மூலோபாயத் திட்டமிடல் இல்லாமல், அரசியல் நோக்கங்களுக்காக வாங்கிக் குவிக்கப்பட்ட கடன்கள் அடுத்தடுத்த அரசாங்கங்களை நிதிப் பற்றாக்குறையுடனேயே கொண்டு நடாத்தவேண்டி இருந்தது. அரச வருமானங்களை நிலையாக அதிகரிப்பதனை கவனம் செலுத்தாமல் துண்டுவிழும் நிலையினை சமாளிக்க மேலும் மேலும் மூலோபாயத் திட்டமிடல் இல்லாமல், உதவித்திட்டங்களுக்கூடாக பெற்ற கடன்கள் இலங்கையினை குறைந்த நடுத்தர வருமானம் பெறும் பொருளாதரா நாடு என்னும் நிலைக்கு கொண்டு வந்தது நிறுத்தியுள்ளது.
எனவே சரியான மூலோபாயத் திட்டமிடல் இல்லாமல் கடனைப் பெற்று கடனை அடைத்தால் அந்தக் கடனையும் அதற்குரிய வட்டியைறும் சேர்த்து அடைக்க மீண்டும் அதிகமாகக் கடன் பெறவேண்டிய நிலைக்கு வரவேண்டியிருக்கும்.
முதலில் பெற்ற கடன்களை மீளமைத்து, பகுதி பகுதியாக சிறிது காலத்தின் பின்னர் மீள்செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்தினை அனைத்து கடன் வழங்கிய நிறுவனங்களுடனும் நாடுகளுடனும் கலந்துரையாடி அவர்களோடு ஒரு கடன் மறுசீரமைப்பு புரிந்துணர்வுக்கு வரவேண்டும். இந்தக் கடனை முகாமைத்துவம் இலங்கையின் பொருளாதாராத்திற்கு எழுந்து நிற்க சந்தர்ப்பம் கொடுக்கும்.
அத்தோடு அரச வருமானங்களை அதிகரிப்பற்கான வழிமுறைகளான வரிகளை அதிரித்தும், நட்டத்தில் இயங்குகின்ற அரச நிறுவனங்களின் செலவீனங்ளைக் குறைத்து அவற்றின் வருமான வழிகளை அதிகரிக்கவும் வேண்டும். உதாரணமாக நட்டத்தில் இயங்கும் இலங்கை மின்சார சபையின் வருமானத்தினை அதிகரிக்க அடிப்படை பாவனை அலகுகளுக்கான கட்டணங்களை பலமடங்கு அதிகரிக்கவேண்டும்.
மேலும் சில அரச நிறுவனங்களை தனியார் அரச இணை நிறுவனங்களாக மாற்றி அவற்றின் இயங்குதிறனை அதிகரித்து அன்னிய முதலீடுகளையும் அதிகரிக்க முடியும்.
இவற்றை செய்யும் பொழுது பாதிப்புக்குள்ளாகும் குறைந்த வருமானம் பெரும் சமூகங்களுக்கு நிவாரணமும் அவர்களின் வருமானங்களை அதிகரிக்கும் பொறிமுறைகளையும் உருவாக்கி அவற்றை முறையாக நிர்வகிக் வேண்டும். இல்லையெனில் பாதிப்புக்குள்ளாகும் மக்களால் சமூக பொருளாதார உறுதித்தன்மையில் குழப்பங்கள் ஏற்படும்.
அத்தோடு உள்நாட்டு உற்பதியினை ஊக்கப்படுத்தி உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்கிப்பினை அதிகப்படுத்த வேண்டும்.
இத்தகைய மாற்றங்களை உறுதிப்பாட்டுடன் மேற்கொள்ள நிலையான மூலோபாயத் திட்டமிடல் கூடிய உறுதியன அரசு அமைய வேண்டும்.

இலங்கையின் பணவீக்கம் எந்த நிலையில் உள்ளது ? பணவீக்கம் மேலும் அதிகரித்தால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் ?
இன்றைய நிலையில் இலங்கையின் மத்திய வங்கியின் அறிக்கையின் படி இலங்கையின் பணவீக்கம் 22 வீதத்திலும் அதிகமாக காணப்படுகின்றது. பணவீக்கம் இன்னும் அதிகமாக அதிகரித்து மிகை பணவீக்க நிலைக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக்க காணப்படுகின்றது.
பணவீக்கம் அதிகரிக்க இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டே செல்லும். இதனால் வாழ்கைச் செலவுகள் விண்ணைத் தொடும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்ன என்பதை கணக்கிடவோ பெறவோ முடியாது.
பல சமூகப் பிரச்சனைகள் உருவாகும். அமைதியின்மை எங்கும் நிலை பெற்றிருக்கும்.
இலங்கையில் டொலர்களை வைப்பிலிடுபவர்களுக்கு 10 வருட வதிவிட உரிமை வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
இந்த முயற்சி இலங்கையின் அன்னிய செலாவணிக் கையிருப்பை அதிகப்படுத்துவதற்கான ஒரு குறுங்கால முயற்சி. இங்கு இருக்கின்ற சிக்கலான பொருளாதாரப் பிரச்சனைக்கு உறுதியான தீர்வு வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தால் இலங்கையின் நெருக்கடி எந்தளவிற்கு நீங்கும் ?
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கையினை இன்னும் ஒரு தளத்திற்கு இட்டுசெல்லும். இலங்கையினை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்ததனைககள் உறுதிசெய்யும். நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை நிறைவேற்றும் பொழுதுதான் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிகள் பகுதி பகுதியாக கிடைக்கப்பெறும். இலங்கை மக்கள் இத்தனை காலங்களாக அனுபவித்த மானியங்கள், இலவசங்கள், மற்றும் சலுகைகள் முழுதாகவோ இல்லை பகுதியாகவோ இழக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏராளம். அத்தோடு திறந்த பொருளாதாரக் கட்டமைப்பு இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் திறந்து விடப்படும். மொத்தத்தில் அது ஒரு மிகவும் கடினமான பாதை. இலங்கை புதிய பரிமாணத்தில் பயணிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலை.