சற்று முன்
Home / கட்டுரைகள் / நம்மவரின் கார் றேஸ் – மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி – சிறப்புக் கட்டுரை

நம்மவரின் கார் றேஸ் – மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி – சிறப்புக் கட்டுரை

மக்கள் மனம் மகிழ்ந்து பார்த்த கேளிக்கை விளையாட்டுக்களில் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் ஒன்று.

சவாரிப் போட்டிகளின் ரசனை எந்தளவுக்கு உயர்வாக இருந்தது என்பதைக் குறிக்க இது நல்லதோர் உதாரணம். யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வில் பெரும் செல்வாக்கைச் செலுத்திய சவாரிப் போட்டிகளின் தடங்கள் மீது இன்று நடந்து பார்ப்போம்.மேற்கு நாடுகளில் கார் ஓட்டப் போட்டிகள் எவ்வளவு பிரபலமாக இருக்கின்றதோ, அதுபோல எம்மண்ணில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டிகள் மிகப் பிரபலமாக இருந்தன. இன்றும் இருக்கின்றன. இவற்றை எம்மவரின் கார் ரேஸ் எனலாம்.

எம்மவரின் பாரம்பரியமான விளையாட்டுக்களில் மிக மதிப்பு வாய்ந்ததாயிருந்தது. ஊருக்கு ஊர் விளையாட்டு மைதானம் போல சவாரித் திடல்களாக இருந்தன. ஆயினும் பிரபலமும் சனத்திரளும் மிக்க திடல்களாக நீர்வேலி, அளவெட்டி, பிணாக்கை, ஊர்காவற்துறை, நாரந்தனை, மாவிட்டபுரம், பூநகரி, வட்டுக்கோட்டை, மட்டுவில் எனப் பிரதேசங்கள் தோறும் சவாரித் திடல்கள் இருந்தன.

அந்நாளில் மாட்டு வண்டில் வைத்திருப்போர் ஊரில் மதிப்பு மிக்கவர்களாக பணவசதி படைத்தோராக இருந்தனர். இன்று சைக்கிள் பார்க், கார் பார்க் இருப்பது போல பொது இடங்களில் மாட்டு வண்டிக்கு இடமிருந்தது. மாட்டு வண்டில்கள் பரவலாக இருந்த காலத்தில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டிகளும் அதிகம் இருந்தன.இன்றைய கார் பெற்ற மதிப்பை அன்றைய நாளில் மாட்டு வண்டிகள் பெற்றன. மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியில் பங்கேற்பது உயிராபத்து மிக்க வேலையாகையால் “மாட்டு வேலை மோட்டு வேரை” என அந்நாளைய பெரியவர்கள் கூறினார்கள்.

சவாரிப் போட்டியில் வெற்றி பெறுவது ஆண்மையின் குறியீடாகப் பார்க்கப்படுவதாக அக்காலம் இருந்தது.சவாரிப் போட்டியில் வென்ற ஆண்கள் ஊர்களில் ஹீரோக்களாக மதிக்கப்பட்டார்கள். இந்திய தமிழகத்தின் காளை மாடுகளை அடக்கும் ஜல்லிக்கட்டுப் போன்ற போட்டிகள் எம்மண்ணில் நிகழவில்லை. ஆயினும் அதற்கு நிகராகவே மாட்டு வண்டிச் சவாரிப்போட்டிகள் பார்க்கப்பட்டன. வெற்றி பெறும் சவாரி வீரனுக்கு தனியாகவும், மாட்டுக்குத் தனியாகவும் பரிசு வழங்கப்படும் வழக்கம் இருந்தது. இன்றைய காலத்தைப் போல வேறு வகையான பொழுது போக்குகள் மிகக் குறைவாயிருந்த அக் காலத்தில் மாட்டு வண்டிச்சவாரிப் போட்டிகள் இருந்தது.

ஆண், பெண் இரு பாலாரும் ஒன்று கூடி ரசித்தார்கள். புரட்டாதி மாதம் மழையுடன் நெற்செய்கை நடைபெறும். செம்புல, இருவாட்டி, மண் தோட்டங்களில் கார்த்திகை மழை ஓய்வுடன் மரக்கறிச் செய்கை தொடங்கிவிடும்.சித்திரை, வைகாசி மாதங்கள் வந்தவுடன் தோட்டச்செய்கை ஓய்ந்து விடும். நிலம் வெறுமையாகிவிடும். அதன் பின்பாக மழைவரும் காலம் வரையில் பொழுது போக்காக நடைபெறும் விளையாட்டுக்களில் ஒன்றாக மாட்டுவண்டிச் சவாரிப்போட்டிகள் பரவலாக நடந்தன. மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் இருந்தது. சித்திரைப் புத்தாண்டுடன் அண்மித்ததாக சவாரிப் போட்டிகள் பரவலாக நடந்தன. மாட்டு வண்டிகள் ஒற்றைத் திருக்கல் வண்டி , இரண்டைத் திருக்கல் வண்டிகள் ஒற்றைத் திருக்கல் மாடு பூண்டிய வண்டியை ஒருவர் ஒட்டிச் செல்வது ஒற்றைத் திருக்கல் வண்டியாகும். இரண்டு மாடுகள் பூட்டிய வண்டியை தனி ஒருவரோ, இருவரோ, ஓட்டிச்சொல்வது இரட்டைத் திருக்கல் வண்டியாகும். மாட்டு வண்டியில் கூடாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி குடும்பமாக மங்கல, அமங்கல வீட்டு நகிழ்வுகளுக்கும் கோயில் திருவிழாக்களும் செல்லும் வழக்கமிருந்தது.

விளையாட்டுக் கழகங்கள், கோயில்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தமது நிதி திரட்டும் முயற்சியாக சவாரிப் போட்டிகளை அன்று நடத்தினார்கள். யாழ்ப்பாண நகரில் கோட்டைக்கு முன்பாக இருக்கும் முற்றவெளியில் தினகரன் பத்திரிகை அந்நாளில் சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம், வாண வேடிக்கை என்பவற்றுடன் சவாரிப் போட்டிகளையும் நடாத்தியது. கட்டணமின்றி இலவசமாகவே சவாரிப் போட்டிகள் நடந்தன. முதலாமிடத்தைப் பெற்ற சவாரிக்காரருக்கு பரிசாக இலண்டன் பாட்டி உற்பத்தியாக்கிய வூல்ஸ்லீ நீரிறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. தினகரன் பத்திரிகையின் இசை நிகழ்வும் அந்நாளில் பிரபலமாயிருந்தது.போட்டிகளின் போது திரளும் மக்களைக் கட்டுப்படுத்தவென பொலிஸ் குதிரைப் படையினர் இருந்தன.

யாழ். கோட்டையினுள் குதிரை கட்டும் லாயமிருந்தது. மாட்டுவண்டிச் சவாரி நடைபெறும் நாள் பெரும்பாலும் ஓர் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும். ரக்சி அல்லது காரில் ஒலிபெருக்கியை இணைத்துக் கொண்டு போட்டிக்கு முதல் நாளும் போட்டி அன்றும் ஊர் ஊராக அறிவிப்புச் செய்யப்படும். கட்டணம் அறவிடப்படும் போட்டியாயின் சவாரி மைதானத்தின் பாதைகளை வழிமறித்து காவல் நிற்பார்கள். கட்டணம் வாங்குவதற்காக ஒரு வழிப் பாதையே பெரும்பாலும் அமைக்கப்படும். ஊரின் பெரியவர்களுடன் இளைஞர்கள் இணைந்து நின்று கட்டணம் வாங்குவார்கள்.

ஆக முந்திய காலங்களில்5 சதம், 10 சதம் என ஐம்பது சதம் ஒரு ரூபாய் என வந்தது.போட்டி நடைபெறும் மைதானத்தில் பார்வையாளர்கள் ஒரு கரையாக இருக்கத் தடுப்புக் கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். அப்பக்கம் பார்வையாளர்கள் நிற்பார்கள். சவாரி வண்டில்களும் அதனை ஓட்டுபவர்களும் போட்டி நடைபெறும் ஆரம்ப இடத்தில் நிற்பார்கள்.விசில் அடித்தோ அல்லது கொடி அசைத்தோ போட்டி ஆரம்பித்து வைக்கப்படும். ஒற்றைத் திருக்கல் வண்டியாயின் அவை மட்டும் ஓடக் கூடியதாக சவாரிப் போட்டி அமையும். அதேபோல இரட்டைத் திருக்கல் வண்டியாயின் அவை மட்டும் ஓடும் போட்டிகள் நடைபெறும். போட்டி நடைபெறும் போது தம்மூர் மாடுகள் தமது தெரிந்தவர் மாடுகள் ஓடும் போது பார்வையாளர் உற்சாகம் தெரிவித்து ஆரவாரம் செய்வார்கள்.சவாரியாளர்கள் உற்சாகம் பொங்க ஓடுவார்கள். சவாரித் தூரம் ஒன்று முதல் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரையும் இருக்கும். சவாரியில் ஓடும் போது நமது மாடுகள் முதலாவதாக ஓட வேண்டும் என்று பல உத்திகளைக் கையாளுவார்கள்.

கையில் ஆணி வைத்திருந்து மாட்டுக்கு குத்தி வேதனை உண்டாக்கி வேகமாக ஓட வைப்பார்கள். மற்றவனின் மாடு முந்திக் கொண்டு ஓடினால் ஆத்திரமும் தமது மாட்டின் மீதே திரும்பும். ஆணியால் குத்தும் வேகம் இன்னமும் அதிகமாகவே இருக்கும். மாட்டின் பின்புறம் குத்தி இரத்தம் கசியக் கசிய ஓட வைப்பார்கள்.அந்நாளில் மிருகவதைச் சட்டங்கள் இப்போதையதைப் போல வலுப்பெற்றிருக்கவில்லை. இதனால் பல்லாயிரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க மாட்டின் வேகத்தைக் கூட்டச் செய்யப்படும் இது போன்ற ஈனச் செயல்களைக் கண்டு கொள்வதில்லை.

சினிமாப் படங்களில் காட்டுவது போல மாட்டின் தீவனத்துடன் வெறியூட்டும் தன்மை கலந்தும் சிலரால் வைத்திருக்கப்படலாம். மாட்டுக்கான ஊக்க மருந்து சோதனைகள் அன்றுமில்லை இன்றும் எம் மண்ணில் இல்லை. இதனால் அத்தகைய சோனைகளுக்கு வாய்ப்பு இல்லை. அந்நாட்களில் சவாரிப் போட்டிகள் ஒற்றைத் திருகைக்கல் வண்டிகளாகவோ, இரட்டைத் திருகைக்கல் வண்டிகளாகவோ நிகழ்ந்தது. ஆனால் இந் நாளில் அங்கொன்று, இங்கொன்றாக நிகழும் சவாரிப் போட்டிகள் இரட்டைத் திருக்கல் வண்டிப் போட்டிகளாக மட்டுமே நிகழுகின்றன.

சவாரிப் போட்டிகள் ஏ,பி,சி என மூன்று வகைகளாகவும் நடைபெறும் முறை இருக்கின்றது. நலம் போட்ட மாடுகள் இரட்டைத் திருக்கல் வண்டியில் நடைபெறுவது ஒருவகை நலம் போடாத இளம் மாடுகளை வைத்து நடைபெறுவது இன்னொரு வகை. வளர்ச்சியடைந்த சின்னப் பருவ மாடுகளை வைத்து நடைபெறும் சவாரிப் போட்டிகள் மூன்றாவது வகை.சவாரிப் போட்டிகளில் விண்ணர்களாகியவர்க்கு அவர்களின் பெயருடன் சவாரி என்பது ஒட்டியிருக்கும். மயிலிட்டியைச் சேர்ந்த ஒருவர் சவாரிச் சபாபதி என அழைக்கப்பாட்டார். இவர் தொடர்ந்து பத்து வருடங்களாக சவாரிப் போட்டியில் முதலாவது பரிசைப் பெற்றார். அதே போல அச்செழு கிராமத்தைச் சேர்ந்த சுருளி சின்னத்துரையும் சவாரிப் போட்டிகளில் பிரபலம் பெற்றிருந்தார்.

இது போல சவாரியால் பிரபலம் பெற்றவர்கள் ஊருக்கு ஊர் பலர் இருந்தார்கள்.சவாரி மோகத்தால் தமது கல்வியைத் துறந்து பொன்பொருள் இழந்தவர்களும் பலர் இருந்தனர். சவாரி நடைபெறுவதற்கு பல வாரங்கள் முன்பாகவே சவாரித் திடலில் பயிற்சிகள் நடைபெறும். போட்டி நடைபெறும் போது மாடுகள், வண்டில்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி இறந்தவர்களும் சிலர் இருந்தார்கள். படுகாயப்பட்டு ஊனமுற்றவர்களும் இருந்தார்கள். மாடுகள் பார்வையாளர்கள் பக்கம் தெறித்தோடி பொது மக்கள் காயப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. ஆனாலும் சவாரிப் போட்டிகளின் மீது மோகம் கொண்டு அதையே தமது முழுநேரப் பொழுது போக்காக கொண்டவர்கள் பலர் இருந்தார்கள்.

கைக்கொடிச் சவாரி எனும் ஒருவகைச் சவாரிப் போட்டியும் இருந்தது. மாட்டின் கழுத்தின் மீது கயிறைப் போட்டு மாடு முன்பாக ஓட கயிறைப் பின்புறமாக பிடித்துக் கொண்டு ஓடுவார்கள். சில வேளை மாடு வேகமாக ஓட கயிற்றைப் பிடிப்பவர் கையைவிட வேண்டியிருக்கும். இத்தகைய போட்டியைத் தான் கைக்கொடிச் சவாரி என்பார்கள்.மெல்ல மெல்ல ஆரம்பித்த யுத்தமும் தொலைக்காட்சியின் தராள புழக்கமும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகளின் செல்வாக்கைப் பெருமளவு குறைத்தது.குறைவான தேவைகளுடன் வாழ்ந்த மக்களுக்கு சவாரிப் போட்டிகள் மதிப்பு மிக்கதாயிருந்தது.

பொழுது போக்குகள் தேவைகள் அதிகரிக்கவும் யுத்தத்தின் தீவிரமும் சவாரிப் போட்டிகளின் உச்சக் காலத்தை மங்கச் செய்து விட்டது.காலச்சக்கரம் மெல்ல மெல்லச் சுழன்று யுத்தமற்ற காலத்தை மீண்டும் தந்துள்ளது. சவாரிப் போட்டிகள் அங்கொன்று இங்கொன்றாக இப்பொழுது நிகழ்கின்றன. ஆயிரக்கணக்கில் மக்கள் முன்பு ரசித்தார்கள். இப்போதே பல நூறு பேர் இரசிக்கும் ஒரு பாரம்பரிய விளையாட்டாகச் சுருங்கிவிட்டது. சவாரித் திடல்கள் பல அப்படியேதான் இருக்கின்றன.ஆனால், சவால் விட்டு விளையாடும் தீவிர போட்டியுகம் குறைந்து விட்டது. புலம்பெயர் நாடுகளில் இருந்து ஜுன், ஜுலை மாத விடுமுறைக் காலங்களில் வரும் எம்மவர்கள் சவாரி வீரனாக தீவிர இரசிகனாக இருந்து இறந்து போன தம் உறவுகளின் நினைவாகப் போட்டிகளை நடத்துகின்றார்கள். பாரம்பரியமாகத் தொடரும் இந் நிகழ்வுகள் வரவேற்கத்தக்கவை.ஊர் கூடித் தேரிழுத்த ஒற்றுமைப் பண்பாட்டின் வேர்களில் ஒன்றாகிய சவாரிப் போட்டிகளை ஆதரித்து மறையாத சொத்தாக்குவோம்.

கட்டுரை ஆக்கம் – வேதநாயகம் தபேந்திரன்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஊடகர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு அமரர் தில்காந்திக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது

“கனவாகவே வந்து எங்கள் காவியமான தேவதை உறங்கச் சென்று விட்டாள்..!துயிலட்டும் அவள் அமைதியுடன்..!” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com