சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் மீறி யாழ் மாவட்டச் செயலகத்தில் மாநாடு – கொழும்பிலிருந்து வந்த நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு

யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் மீறி கொழும்பிலிருந்து வருகைதந்த அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பாதுகாப்பு பிரிவினர் என நுாற்றுக்கணக்கானோர் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை உதாசீனம் செய்து கிராமிய பொருளாதார மேம்பாட்டு கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் அபாய பிரதேசங்கள் அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். என்ற சுாதார பாதுகாப்பு நடைமுறைகளை முற்றாக உதாசீனம் செய்து குறித்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

குறித்த கூட்டத்தில் கொழும்பிலிருந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய பாதுகாப்பு பிரிவினர் என நுாற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சமூக இடைவெளியை பேணாமல் மிக நெருக்கமாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் அமர்ந்திருந்து கூட்டம் நடைபெற்றது.

சாதாரணமாக அபாய பிரதேசம் அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்துவரும் மக்கள் தொடர்பாகவும், ஆலயங்கள், திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் மக்கள் தொடர்பாகவும் அதிக அக்கறை எடுக்கும் சுகாதார பிரிவினர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதை வேடிக்கை பார்த்தவண்ணம் உள்ளனர்.

குறிப்பாக யாழ்.வடமராட்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் கோவில் பூசையில் வெளிமாவட்டத்தவர்கள் கலந்துகொண்டனர் என்பதற்காக பூசகர் உட்பட ஒரு சில பொதுமக்களை பிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தை பிரயோகித்த சுகாதார பிரிவு இன்று உறக்கத்தில் உள்ளதா? என சமூக ஊடங்களில் கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன.

மேலும் அபாய பிரதேசங்கள் அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் பகுதிகளில் இருந்து வருவேர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் தொலைபேசி இலக்கங்களை அறிவித்திருந்தார். அந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு சுகாதார பிரிவின் நடவடிக்கை என்ன என வினவியபோது அது அதற்கு பதிலளித்தவர்கள் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தனர். பின்னர் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பு கொண்டபோது அவர்களுக்கு கூட்டம் நடப்பதே தொியாது என்பதுபோல் பதிலளித்ததுடன், பல கூட்டங்களுக்கு தம்மிடம் அனுமதி பெறப்பட்டதாகவும் இதற்கும் அனுமதி பெறப்பட்டதா? என்பதை ஆராய்ந்து பார்ப்பதாக கூறினர். அப்படியானால் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெற்றால் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறலாமா? இதேபோல் வெளிமாவட்டங்களுக்கு சென்றுவரும் வாகன சாரதிகள், பேருந்துகளில் பயணிப்போர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இவர்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டம் பொருந்தாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com