ஊடகப் போராளி இசைப்பிரியாவின் பிறந்த நாள் இன்று

இறுதிக்கட்டப்போரில் கொல்லப்பட்டவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். இலங்கையின் நெடுந்தீவில் 1981-ம் ஆண்டு, மே 2 அன்று பிறந்தவர். இசைப்பிரியா (இயற்பெயர் சோபனா). கல்லூரிப் படிப்பு யாழ்ப்பாணத்தில். அது இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், வன்னிக்கு குடிமாறுகிறார். அங்குதான் மேல்படிப்பை முடிக்கிறார். விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் சேர்ந்து பணியாற்றுகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் செய்திகளை வாசிப்பவராகப் பணிகளைச் செய்கிறார். அங்குதான் சோபனா எனும் பெயரை இசையருவி என்று வைக்கின்றனர். பின்னாளில் அது இசைப்பிரியா என்று மாறியது.

அப்போதிருந்து, இறுதி வரை ஊடகப் பணிகளை மட்டுமே செய்தார், ஆயுதங்களைப் பிரயோகிப்பவர் அல்ல அவர். “விடுதலைப் புலிகளின் தமீழத் தொலைக்காட்சியில் பணியாற்றிய ஊடகப் போராளிதான் இசைப்பிரியா. செய்தி அறிவிப்பது, நிகழ்ச்சிகள் செய்வதுதான் அவரின் வேலை. இசைப்பிரியா, பாட்டுப் பாடுவார், நடனம் ஆடுவார், நடிப்பார், வீடியோக்களை எடிட் செய்வார், கேமராவில் படம் பிடிப்பார், பின்னணி குரல் கொடுப்பார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பிரதிகளை எழுதுவார், சிறுகதைகள் எழுதுவார்… இப்படி இத்தனை துறைகளில் அதுவும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று அனைவருக்குமே வியப்பாக இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் தெரியாது என்று சொல்ல மாட்டார். இறுதிக்கால யுத்தத்தின்போது அதிகம் செய்திகளை வாசித்தார்.

துயிலறைக் காவியங்கள் என்றொரு நிகழ்ச்சியை இசைப்பிரியா நடத்தினார். அதில், போரில் உயிரை நீத்த மாவீரர்கள் பற்றியது. மாவீரர்களின் தாய், தந்தை, நண்பர்கள் அவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாக கடித வடிவத்திலான நிகழ்ச்சி. இது வழியே மாவீரர்கள் பற்றிய கதை பாதுகாக்கப்படும் என்று இசைப்பிரியா நினைத்து இதை ஆர்வத்தோடு செய்துவந்தார்.

2009 மே 18 இல் போர் முடிந்தபின் 2013-ம் ஆண்டு, வெளியாகிய ஒரு வீடியோ ஒட்டுமொத்த தமிழர்களையும் குலைநடுங்கச் செய்தது. அதிர்ச்சியில் உறையச்செய்தது. விடுதலைப் புலிகளில் ஊடகத்தில் பணிபுரிந்த இசைப்பிரியா, உயிரோடு கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குள்ளாகும் காட்சிகள் அதில் இருந்தன. ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில் இருந்த காட்சிகள் தமிழர்களின் மனதை உலுக்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com