Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தலைவரே வெடிக்கும் வெடிக்கும் எண்டீங்களே – வெடிச்சிடுத்துங்கோ

Vakeesam # Vairavi Appu - Naadu Nadapu - Savariநாட்டு நடப்புக்களை அலசும் சவாரி – தொடர் (44)

வணக்கமுங்கோ,

“குண்டு ஒன்னு வச்சிருக்கேன்

வெடி குண்டு ஒன்று வச்சிருக்கேன்

அணு குண்டு ஒன்னு வச்சிருக்கேன்

அதுக்கு காலக்கெடும் வச்சிருக்கேன்.”

 

அது ஒண்டும் இல்லயுங்கோ போனகிழம பாட்டு ஒண்டோட நாட்டு நடப்ப ஆரம்பிச்சன் ஒரே பாட்டு பாட்டா வருதுங்கோ, போனகிழமை எங்கண்ட நடேஸ்வரக் கல்லூரி பழைய இடத்தில மீண்டும் ஆரம்பிச்சு வச்சவயுங்கோ ஒரு எட்டுப் பாப்பம் எண்டு போனனானுங்கோ. எல்லாத் தலைவர்களும் அதிகாரிகளும் நல்லா உரையாற்றினவயுங்கோ. ஆனா எங்கண்ட தலைவற்ற உரை மட்டும் வேற லெவலில இருந்திச்சுங்கோ. தலைவற்ற உரையக் கேட்டுட்டு எங்கண்ட பெடியள் மச்சான் தலைவர் மீண்டும் வெடிக்கும் எண்டுட்டாற்றா? எப்ப வெடிக்கப்போகுதோ தெரியாது. உந்தாள் நெடுக வெடிக்கும் வெடிக்கும் எண்டு வாய் வெடியா வெடிக்குது ஆனா நிஜமா வெடிக்கிறபாட்டக் காணேல்ல எண்டு வீட்ட வந்துசேருற வரைக்கும் தலைவர விட்டு வைக்கேல்லயுங்கோ.

 

எனக்கு சரியான கோபமாப்போச்சுங்கோ. உந்தப் பெடிப்பசங்கள் மேல இல்லயுங்கோ தலைவர் மேலயும்தானுங்கோ. தலைவர் அந்தக்காலத்தில என்ன பேச்சுப்பேசுறவர் தெரியுமோ. இப்ப எல்லாம் தலைகீழா மாறிப்போச்சுங்கோ. தலைவர் என்னபேசுறார் ஏன் பேசுறார் எண்டே விளங்குதில்லயுங்கோ. பின்ன செய்தி சேகரிக்கிற பெடியளுக்கும் அவ்வளவு தூரம் போய் பேச்சக் கேட்டா கோபம் வரமா என்ன வருமுங்கோ. அதுதான் நக்கலடிக்கிறாங்கள்.

நான் தலைவரிட்ட நேர போய் சொல்லிப்புடோணும் எண்டு தானுங்கோ நினைச்சனான். எண்டாலும் ஒரு மாதிரி இருக்குதுங்கோ. அதுதான் இதுல எழுதுறன். தலைவர் குறை நினைக்காம விசயத்த உள்வாங்குவார் எண்டு நம்புறனுங்கோ.

அந்தக்காலத்தில தலைவற்ற உரைஎங்க நடந்தாலும் அதக் கேக்கிறதுக்கு மாட்டுவண்டிலப் பூட்டிக்கொண்டு முதல் ஆளா போய் நி்ண்டிடுவனுங்கோ. செல்வா ஐயா, அமிர்தலிங்கம் ஐயா, சிவசிதம்பரம் ஐயா, எண்டு அண்டைய லெஜனுகள் உரை எண்டு உவங்கள் தமிழரசுக் காறர் ஸ்பீக்கர் கட்டீ சனதத் திரட்டிப்போடுவாங்களுங்கோ. ஆனா தலைவர்மார் வேற புறோக்கிறாமுகளில நிண்டுட்டு வர நேரம் போடுமுங்கோ சனம் குழம்பத் தொடங்கிவிடுமுங்கோ. அந்த நேரம் இப்போது உங்கள் பிரச்சாரப் பீரேங்கி அவர்கள் பேசுவார்கள் எண்டு சொல்லி முடிக்கிறத்துக்குள்ள தலைவர் மைக்கப்பிடிச்சு கம்பீரமாத்  தொடங்குவாருங்கோ. கைதட்டல் வானப் பிளக்குமுங்கோ. அதோட சனத்தின்ர ஆர்ப்பரிப்பு அடங்கிப்போடுமுங்கோ.

விழா ஏற்பாட்டுக்காரர்கள் அவரை இட நிரப்புப் பேச்சாளராத் தானுங்கோ மேடை ஏத்துறவயுங்கோ. ஆனா தலைவற்ற கர்ஜிக்கும் கம்பீரக்குரலும் கருத்தான பேச்சும் சனத்த அப்படியே கட்டிப் போட்டிடுமுங்கோ.

 

தலைவர் இப்பவும் இடைவெளி நிரப்புப் பேச்சாளர் எண்டாப் பறவாயில்ல. அவர் தான் இப்ப மெயின் பேச்சாளர். ஆனா இப்ப எதுவும் இல்லயுங்கோ. தலைவர் தன்ர பாட்டுக்கு கதைச்சிட்டுப்போறாருங்கோ. அவருக்குப் பின்னால அவற்ற பேச்சக் கேட்கிறதுக்குத் திரியிற கூட்டம் இப்ப இல்லயுங்கோ. தேர்தல் கூட்டங்களில ஏதோ கதைக்கிறார், இப்ப வேற ஏதேதோ கதைக்கிறார். வெடிச்சிடும் வெடிச்சிடும் எண்டு மிரட்டுறார். எனக்கு இப்ப எல்லாம் தலைவற்ற கூட்டத்திற்குப் போறதே பிடிக்காமப் போகத் தொடங்கீட்டுதுங்கோ.

கிட்டடியில் ஆய்வாளர் ஒருத்தரும் உவயளப் பாத்து தாறுமாறாக் கேட்டுட்டாருங்கோ.

அவர்கள் சொன்னால், இளைஞர்கள் கேட்பார்கள் என்று சொல்லத்தக்க முன்னூதாரணம் மிக்க தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? அல்லது இப்போதிருக்கும் தலைவர்களுள் எத்தனை பேர் மக்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்கள்? அல்லது கிராமங்கள் தோறும் மக்களோடு நெருங்கிச் செயற்படும் உள்ளூர் தலைமைகளை கட்டி எழுப்ப வேண்டும் என்ற தரிசனம் அரங்கிலுள்ள எந்தவொரு கட்சியிடமாவது உண்டா? எண்டு கேள்விமேல கேள்வியாக் கேட்டுட்டாருங்கோ.

எங்கண்ட தலைவர் சிந்திக்கவேணுமுங்கோ. தமிழ்க்கூட்டமைப்ப கூட்டணிக் கட்சிகளைச் சிதைக்கிறம் தமிழரசுக் கட்சியை தனிப்பெருங்கட்சியா வளர்க்கிறம் எண்டு ஐடியா பண்ணிக்கொண்டு திரியிறத விட்டுட்டு நீங்கள் சொன்னால் இளைஞர்கள் கேட்கிற, முன்னுதாரணம் மிக்க தலைவரா வளரோணுமுங்கோ.

அப்ப போட்டு வாறனுங்கோ.

சவாரி தொடரும்…..

வண்டில்கார வைரவி அப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com