சற்று முன்
Home / அடையாளம் / நவம் ஜீ.எஸ் – ஒரு நினைவுக் குறிப்பு – மயூரப்பிரியன்

நவம் ஜீ.எஸ் – ஒரு நினைவுக் குறிப்பு – மயூரப்பிரியன்

ஜீ. எஸ் . என்றும், நவத்தார் என்றும், நவம் ஐயா, என்றும் எம்மால் அன்பாக அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் ந. நவரட்ணராஜா.

பயமறியாது , உணர்ச்சி வசப்பட்டு சில இடங்களின் நாம் முரண்படும் போதும் , செயற்படும் போது ” குஞ்சு அமைதியா இருடா” , “அப்பு உணர்ச்சி வசப்படாதேடா ” என எம்மோடு களத்தில் நின்று எம்மை வழி நடத்தியவர் நவம் ஐயா ,பல இடங்களின் எம்மை முன்னின்று வழி நடத்தியவர்.
பல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பணியாற்றியவர். கடந்த கால அரசியல் , ஜனநாயக போராட்டம், மற்றும் ஆயுத போராட்டம் என பலதையும் கடந்து வந்தவர். அதன் அனுபவங்கள் மூலம் கற்ற பலதை எமக்கு கூறி எம்மை வழி நடத்தி சென்றவர்.
ஆயுத போராட்டம் முனைப்பு பெற்று இருந்த காலப்பகுதியில் ஊடக துறையில் இருந்தவர். போராட்ட குழுக்கள் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்று சகோதர படுகொலைகள் நடைபெற்று வந்த வேளை ஊடக துறையில் பணியாற்றியவர்.
அக் கால அனுபவங்கள் , வரலாறுகளை எமக்கு கூறி எமக்கு கடந்த கால வரலாறுகளை கற்று தந்தவர். போராட்ட குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பற்றியும் , அக்காலத்தில் போராட்ட குழுக்களின் செயற்பாடுகள் , போராட்ட குழுக்களின் தலைமைகள் மற்றும் அக்குழுக்களில் இருந்தவர்களின் வரலாறுகள் , பலதையும் எமக்கு கற்று தந்து இருந்தார்.
நாம் பயமறியாது , பின் விளைவுகளை யோசிக்காது செயற்படும் போது சொல்லுவார் ” அப்பு நீங்கள் வாழனும் ” என்று கூறி எம்மை அமைதியாக்குவார்.
ஊடகத்துறையின் கசப்பான , மோசமான மறுபக்கம் பற்றியும் எமக்கு கற்று தர அவர் மறக்கவில்லை. ஊடக நிறுவனம் , நிர்வாகத்தின் செயற்பாடுகள் பற்றிய அவர்களின் மறு பக்கங்கள் பற்றி நிறையேவே கற்று தந்தார்.
நவம் ஐயா எமக்கு தனியே கற்று மட்டும் தரவில்லை, எம்மிடம் இருந்து சிலதை கற்றுக்கொண்டார்.
தொழிநுட்ப ரீதியில் தெரியாத விடயங்களை கேட்டு அறிந்து கொள்வார் போன் மற்றும் கமரா பற்றி எம்மிடம் கேட்பார். “அப்பு இதென்று செய்யுறதடா” , “குஞ்சு இது ஏதோ பிழை போல என்ன என்று பாருடா” என.
“தெரியாததை தெரியாது என்று சொல்லி கேட்டு தெரிந்து கொள்வதற்கு வெட்கப்பட கூடாதுடா” என கூறி எம்மிடம் கேட்டு தெரிந்து கொள்வார்.
பலர் நாங்கள் எத்தனை வருடமாக ஊடக துறையில் இருக்கின்றோம். இதுகள் இப்ப வந்ததுகள். ஐ போனையும் கமராவையும் தூக்கிட்டு ஊடகவியலளர்கள் என கூறிக்கொண்டு திரியுதுகள் என கூறும் போது நவம் ஐயா எம்மோடு சேர்ந்து ஒன்றாக எம்முடன் சமனாக களத்தில் நின்றவர்.
எம்மோடு ஒன்றாக அமர்ந்து சிரித்து, பேசி, பகிடிகள் விடுவார். என்றுமே அவர் தன் வயதையோ அனுபவத்தையோ எண்ணி எம்மோடு இடைவெளியை பேணவில்லை.
ஐயாவின் ஊடக அனுபவம் எமது வயதை விட அதிகம். ஐயா ஊடகத்துறையில் 35 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்.
ஆனால் என்றுமே தான் இத்தனை வருடம் ஊடக துறையில் இருந்தான் எனக்கு தெரியாதது எதுவும் இல்லை உங்களுக்கு என்ன தெரியும் என எப்போதும் நவம் ஐயா தன்னை பற்றி பெருமை பேசியது இல்லை.
அச்சு ஊடகம் , இணையத்தளம் மற்றும் வானொலி ஆகியவற்றில் சுயாதீன ஊடகவியலாளராக தன் வாழ்நாளின் இறுதி வரை பணியாற்றியவர். விபத்துக்குஉள்ளாகி எழுந்து நடமாட முடியாத நிலையில் இருந்த போதும் தான் சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கிக்கொண்டு இருந்தவர்.
ஐயா, கிராம சேவையாளராக , ஊடகத்துறை சார்ந்தவராக , மாத்திரம் பணியாற்றவில்லை. சிறந்த உதைப்பந்தாட்ட வீரனும் , வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும் , அங்கீகரிக்கப்பட்ட உதைப்பந்தாட்ட மற்றும் துடுப்பாட்ட மத்தியஸ்தரும் ஆவார்,
எமக்கெல்லாம் தோழனா, ஆசானா எம்மை களத்தில் இருந்து வழி நடாத்திய நவம் ஐயா..இன்று எம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டார்.
ஐயாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்

ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி எனப்படும் வேலுப்பிள்ளை சுப்ரமணியம் காலமானார். முல்லைத்தீவு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com