சற்று முன்
Home / மருத்துவம் / ரத்த அழுத்தம், படபடப்பு, இதயக் கோளாறுகளுக்கு இதம் தரும் இஞ்சி!

ரத்த அழுத்தம், படபடப்பு, இதயக் கோளாறுகளுக்கு இதம் தரும் இஞ்சி!

இஞ்சி… `Zingiber officinale’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. `Zingiber’ என்ற லத்தீன் பெயர், தமிழ் மற்றும் மலையாளச் சொற்களான இஞ்சி + வேர் என்பவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. `இஞ்சுதல்’ என்றால் நீரை உள்ளிழுத்தல் என்று பொருள். `சுவறுதல்’ அல்லது `உறிஞ்சுதல்’ என்றும் பொருள்கொள்ளலாம். இஞ்சி என்றால், `கோட்டை மதில்’ என்றும் சொல்லப்படுகிறது. இவற்றிலிருந்து `இஞ்சி’ என்ற பெயர் வந்திருக்கலாம்.

இஞ்சி

இதற்கு `அல்லம்’, `ஆசுரம்’, `ஆத்திரகம்’, `ஆர்த்திரகம்’, `கடுவங்கம்’ என வேறு பெயர்களும் உள்ளன. மருத்துவக்குணம் நிறைந்த தாவரமான இது, பூமிக்குக் கீழே விளையும் சிறந்த நறுமணப்பொருள்.

`இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்கு புளிப்புக் கொண்டாட்டம்’ என்பது காவடிச் சிந்து பாடல். சித்தர் பாடல் ஒன்றில், `காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலை வீசி நடப்பான் மிடுக்காய்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலை நேரத்தில் இஞ்சி சாப்பிடுவது, மதிய வேளையில் சுக்கு காபி, இரவில் கடுக்காய் கஷாயம் அருந்திவந்தால் திடகாத்திரமான உடல் நலம் கிடைக்கும் என்பதே இதன் பொருளாகும்.

இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை… இவை மூன்றும் சமையல் அறையில் இணை பிரியாத நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டுச் சமையலில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இஞ்சியை துவையல், குழம்பு, பச்சடி, கஷாயம், ஜூஸ்… எனப் பலவிதங்களில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.

இஞ்சி

ரத்த அழுத்தம், தலைசுற்றல், படபடப்பு மற்றும் இதயக்கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. இதன் சாறு எடுத்து, வடிகட்டி, சிறிதுநேரம் கழித்து அதன் தெளிந்த நீரை எடுத்து தேன் சேர்த்துக் குடித்துவந்தால், குறைந்த ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்பும். இதை டீயில் சேர்த்தும் அருந்தலாம். இஞ்சிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து தேன், சர்க்கரை கலந்தால் ஜூஸ் ரெடி. இதுவும் உடல்நலத்துக்கு நல்லது.

இஞ்சிச் சாறு உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைந்துவிடும். எனவே இதை வெறும் சாறாகவோ, ஜூஸ் செய்தோ அருந்திவந்தால் எளிதாக உடல் எடை குறையும். ஆஸ்துமா நோயாளிகள் இதை அருந்தினால், நுரையீரலுக்குள்ள் செல்லக்கூடிய ரத்தநாளங்கள் ரிலாக்ஸ் ஆகி, ரத்த ஓட்டம் சீராகும்; சுவாசப் பிரச்னைகள் நீங்கும். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தினால், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

இஞ்சி டீ

இதை சொரசம் செய்தும் சாப்பிடலாம். அதாவது இரண்டு எலுமிச்சைப் பழத்தின் சாற்றை 5 கிராம் இந்துப்புடன் சேர்த்துக் கலக்கி, 25 கிராம் இஞ்சியை தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி அதில் தோய்க்க வேண்டும். இதை ஒரு சுத்தமான பாத்திரத்தில் போட்டு, மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்க வேண்டும். மாலையில் எடுத்து மீதமுள்ள எலுமிச்சைச் சாறு, இந்துப்பு கலவையில் போட்டு மீண்டும் கலக்க வேண்டும். அதை மூடி வைத்து மறுநாள் வெயிலில் வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று நாள்கள் செய்து, நன்றாகக் காய்ந்ததும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் `இஞ்சி சொரசம்.’ இதை அஜீரணக் கோளாறு, புளித்த ஏப்பம், பித்த கிறுகிறுப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள் 5 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரு வேளை சாப்பிட்டுவந்தால் பலன் கிடைக்கும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வெங்காயத்தை தினமும் பச்சையாகச் சாப்பிடுவதால் என்ன நன்மைகள்…?

வெங்காயத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட், குரோமியம், கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com