பாலுமகேந்திரா எனும் சாதாரண மனிதன் மே 20, 1939ல் இலங்கையில் பிறந்து, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பூனேவில் ஒளிப்பதிவு கற்று, தன்னுடைய திறமையின் காரணமாக இன்று திரையுலக சகாப்தமாகியுள்ளார்.
அவர் உண்மையில் மிகப்பெரிய சினிமா வெறியமால திகழ்ந்தவர். தான் மரணிக்கும் தருவாயிலும் சினிமாவை மட்டுமே தன் உயிராக கொண்டிருந்தவர். நல்ல சினிமா எடுக்க வரும் ஒவ்வொரு கலைஞனுக்கும் பாலுமகேந்திராவின் சினிமா நிச்சயம் முன்னோடியாக திகழ்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
‘ஒளிவழி மன்னன்’ பாலுமகேந்திரா 1972ல் தான் ஒளிப்பதிவு செய்த முதல் படமான “நெல்லு” படத்திற்காக கேரள அரசின் விருதை பெற்று வெற்றிகரமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பல மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து ஒளிப்பதிவில் தனக்கென்று ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொண்டார்.
இன்றளவும் பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவை பார்த்து பிரம்மிக்காத ஒளிப்பதிவாளர் இருக்க முடியாது. மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவு மட்டுமின்றி படத்தொகுப்பு, கதை, திரைக்கதை, இயக்கம் என சினிமாவில் அடுத்தகட்டம் சென்று வெற்றி கண்டவர். தான் இயக்கிய ’‘கோகிலா’-விலிருந்து கடைசியாக வெளிவந்த ‘தலைமுறைகள்’ வரை அதுதான் தொடர்ந்தது.
1977-ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் “முள்ளும் மலரும்”. தமிழ் சினிமாவின் தலைசிறந்த படங்களில் ஒன்றாகத் திகழும் ‘அழியாத கோலங்கள்’ தான் பாலுமகேந்திராவின் முதல் தமிழ்ப் படம். அறியாத வயதில் ஏற்படும் பாலியில் உணர்வுகளை ‘அழியாத கோலங்கள்’ படம் மூலமாக தைரியமாக செதுக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா.
அவரது மானசீக ஆசான்களில் ஒருவரான (Alfred Hitchcock) என்ற மாமேதைக்கு மரியாதை செலுத்தும் முகமாக, தமிழில் அவர் இயக்கிய சஸ்பென்ஸ் திரில்லர் தான் “மூடுபனி”… இந்தப்படத்திலிருந்து தான் பாலுமகேந்திராவுடன் இணைந்து இசைஞானி இளையராஜா தனது இசைராஜாங்கத்தை விரிவுபடுத்த ஆரம்பித்தார். மூடுபனி அவருக்கு மூன்றாவது படம். ஆனால் இசைஞானிக்கோ அது நூறாவது படம். 250 நாட்கள் ஓடிய படம் இது.
கமல், ஸ்ரீதேவியை உச்சத்துக்குக் கொண்டு போனது ‘மூன்றாம் பிறை’. பாலுமகேந்திராவின் ‘மாஸ்டர் பீஸ்’ என்றால் அது மூன்றாம் பிறை என பலரும் சொல்லுவார்கள். கமலுக்கு சிறந்த நடிகருக்கான முதல் விருது கிடைத்த படம் இது. இரு தேசிய விருதுகள், மூன்று தமிழக அரசு விருதுகள் உள்பட 6 விருதுகள் இந்தப் படத்துக்குக் கிடைத்தன.
மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு நசுங்குமான சோகம் அந்தக் காலகட்டத்தில் அவர் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் தனது துக்கத்தை கமல் என்னும் உன்னத கலைஞன் மூலம் இறக்கிவைத்து இளைப்பாறினார் பாலுமகேந்திரா. இவ்வுண்மையை அவரே கூறியுள்ளார்.
பாலுமகேந்திராவின் படங்கள் நடுத்தர வர்க மனிதர்களைப் பற்றியவை. அவரது பாத்திரங்களில் குறிப்பாக ஆண்களுக்கிடையில், உடல்ரீதியான வன்முறையைப் பிறர் மீது செலுத்துகிறவர்கள் எவரையும் காண்பது அரிது. சமூக வன்முறை என்பதனையும் அவரது படங்கள் சித்திரித்ததில்லை.
வீடு படத்தில் முதுமை என்பதை அவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்திருப்பார் பாலுமகேந்திரா. அதுபோலத்தான் அவர் இயக்கிய சந்தியா ராகம் படமும். தான் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, வண்ண வண்ண பூக்கள் தேசிய விருது பெற்றுத் தந்தவை.
அவர் கடைசியாக ஒரு விழாவின்போது சொன்னது என்ன தெரியுமா? “நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்று புறப்பட்டுவந்து இந்த 40 வருடங்களில் எனக்குப்பிடித்து நான் எடுத்த இரண்டே நல்ல படங்கள் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ என ரெண்டே படங்கள் தான். “நான் இருக்கும் வரை இதுபோன்ற படங்களை எடுத்துக்கொண்டே இருப்பேன். என்று நான் படம் எடுப்பதை நிறுத்துகிறேனோ, அன்று நான் இல்லை”. இந்த தள்ளாத வயதிலும் கடைசியாக அவர் இயக்கிய தலைமுறைகள் படத்திலும் தான் சொன்னதை செயலில் காட்டினார் பாலுமகேந்திரா.
தன் சினிமாவை தன்னோடு வைத்துக்கொள்ளாமல் இருந்ததால் தான் இன்றும் நல்ல சினிமாக்கள் நிறைய வருகிறது, அவரது சிஷ்யர்களான இயக்குனர் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி, விக்ரம் சுகுமார் போன்றோர்களிடம் இருந்து. தன் வாழ்நாள் முழுவதையும் சினிமாவில் மட்டுமே பயணித்து நல்ல சினிமாக்களை தந்து, நல்ல சினிமாக்களை தருவதற்கு தன்னுடைய மாணவர்கலுக்கு தன்னை விதையாக்கி விட்டு மறைந்த பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அழியா சாம்ராஜ்ஜியமே.
2014ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி, ஒளி வழியாய் மாயங்கள் செய்த மாயவன் மண்ணுலகு நீங்கி, திரைத்துறை காதலர்களின் நெஞ்சங்களில் என்றும் நீங்காத துயில் கொண்ட தினம்.