சற்று முன்
Home / செய்திகள் / கண்டி அசம்பாவிதங்களுக்கு நட்டஈடு

கண்டி அசம்பாவிதங்களுக்கு நட்டஈடு

கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

கண்டி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திலேயே மேற்படி நஷ்டஈட்டுத்தொகைகள் நிர்ணயிக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடலின் போது , கண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம் ரூபாவும், பள்ளிவாசல்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் முதற்கட்டமாக வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட கொடுப்பனவின் பின், இழப்பீடுகளை மதிப்பீடு செய்து அதற்குரிய நஷ்டஈடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முற்றாக சேதமடைந்த வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை மதிப்பீடு செய்து, அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் உரிய தொகை வழங்கப்படும்.

இதுதவிர பாரியளவில் சேதமடைந்த பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் கலாசார அமைச்சினால் மேலதிகமாக 4 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளன.

எரிக்கப்பட்ட அல்லது உடைக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டுமன்றி , கண்ணாடி, கதவுகள் உள்ளிட்ட கழிவறை, சமயலறை, படுக்கையறை போன்றவற்றிலுள்ள அனைத்து சாதனங்களும் சேதமடைந்த நிலையில் உள்ள வீடுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஜன்னல், கண்ணாடி உடைந்தவை ஒரு பிரிவாகவும் வீடு, கடைகளுக்குள் இருந்த பொருட்களுக்கு ஏற்பட்ட சேதம் ஒரு பிரிவாகவும் முற்றாக சேதமடைந்த ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, அதற்கேற்றவாறு நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது. ஜன்னல், கண்ணாடி உடைந்த இடங்களிலுள்ள பொருட்கள் சேதமடைந்திருந்தால் மீள மதிப்பீடு செய்யப்படுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹலீம், லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com