சற்று முன்
Home / செய்திகள் / வித்தியா கொலை வழக்கு – எதிரிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டு – 28, 29, 30, 3, 4, 5 ஆம் திகதிகளில் தொடர் விசாரணை

வித்தியா கொலை வழக்கு – எதிரிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டு – 28, 29, 30, 3, 4, 5 ஆம் திகதிகளில் தொடர் விசாரணை

புங்குடுதீவு மாணவி வித்தியா கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தெடர்பான வழங்கு யாழ் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட ரயல்-அட்பார் முறையில் இன்று நடைபெற்றது. அதன்போது எதிரிகளுக்கு எதிராக கடத்தல், பாலியல் வன்புணர்வு, கொலை, திட்டம் தீட்டியமை,உடந்தையாக இருந்தமை உட்பட 41 குற்றங்கள் சுமத்தப்பட்ட குற்றப்பத்திரம் மன்றில் வாசிக்கப்பட்டது. 1ஆம், 2 ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளுக்கு எதிராக கடத்தல், பாலியல் வன்புணர்வு, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும், ஏனையவர்களிற்கு எதிராக  திட்டம் தீட்டியமை, உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.

09.30 இற்கு வழக்கு ஆரம்பம்

மாணவி வித்தியா கொலை வழக்கு இன்று காலை 09.30 மணிக்கு பா.சசிமகேந்திரன், அ.பிரேம்சங்கர், மா.இளஞ்செழியன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்

எதிரிகளாக பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ்குமார்) ஆகியோர் முறையே  01 ஆம், 02 ஆம் என வரிசைப்படுத்தப்பட்டு  மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். (இதில் இந்திரகுமார், ஜெயக்குமார், தவக்குமார் ஆகிய மூவரும் சகோதரர்கள் அதேபோல அதே போல சசிதரன் சசிக்குமார் ஆகிய இருவரும் சகோதரர்கள்)

சட்டத்தரணிகள் இல்லை

அதன்போது 5 ஆவது எதிரி சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி ஆஜராகியிருந்தார். ஏனையவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகியிருக்கவில்லை. 4, 7, 9 ஆம் எதிரிகள் சார்பில் ஆஜராகிவந்த சட்டத்தரணி பல்கம தொடர்ந்து ஆஜராக பின்னடிப்பதாக நீதிபதிகள் முன் தெரிவித்தார். இந்நிலையில் அரச செலவில் 09 பேரிற்கும் சட்டத்தரணிகளை நியமிக்க விருப்பமா என நீதிபதிகளால் கேட்கப்பட்டபோது எதிரிகள் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவ்விடையம் தொடர்பில் ஆராய பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமர்வு 15 நிமிடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்டது.

வந்தனர் சட்டத்தரணிகள்

அமர்வு மீண்டும் கூடியபோது 01 முதல் 09 வரையான எதிரிகள் சார்பாக அரச செலவில் ஆஜராக சட்டத்தரணி ஜெயந்த நியமிக்கப்பட்டார். 4, 6, 7, 8, 9 ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி எஸ்.கேதீஸ்வரனும் 1, 2, 3, 5 ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி ஆ.பசுபதியும் ஆஜராகுவதாக தெரிவித்தனர். இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி ரஞ்சித்குமார் ஆஜராகியிருந்தார்.

41 குற்றங்கள் சுமத்தப்பட்ட குற்றப்பத்திரம் வாசிப்பு

அதனையடுத்து எதிரிகளுக்கு எதிராக கடத்தல், பாலியல் வன்புணர்வு, கொலை, திட்டம் தீட்டியமை, உடந்தையாக இருந்தமை உட்பட 41 குற்றங்கள் சுமத்தப்பட்ட குற்றப்பத்திரம் மன்றில் வாசிக்கப்பட்டது. அவற்றினை ஒவ்வொன்றாக எதிரிகள் மன்றில் மறுத்தவாறிருந்தனர்.

16, 17 ஆம் சான்றுகளை சாட்சிகளாக்கப்பட்டன

அதன் பின்னராக 17 ஆவது சான்றுப்பொருளாக குற்றம் சாட்டப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பினையும், 16 ஆவது சான்றுப்பொருளாக சம்பவநேரத்தில் தான் வேலணைப் பிரதேச சபையில் பணியாற்றினார் என கூறப்பட்டமைக்கான சான்றாதாரங்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணத்தினால் நீதிபதிகளிடம் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 16, 17 ஆம் சான்றாதாரங்களை சேர்த்துக்கொண்டனர்.

சிங்கள மொழி ஆவணங்களை மொழிபெயர்க்க கோரிக்கை

அதன்பின்னராக சில சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் சிங்கள மொழியில் இருப்பதாகவும் அதனை தமிழிற்கு மொழிபெயர்த்துத் தருமாறும் எதிரிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சிங்களத்திலுள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறும் சட்டத்தரணிகள் அவற்றை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தனர்.

கைதிகளை இடம்மாற்ற கோரிக்கை

அதன்போது எதிரிகளை வெளிமாவட்ட சிறைகளில் வைத்திருப்பதால் தம்மால் அவர்களைச் சந்திப்பது கடினமானது. எனவே அவர்களை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றுமாறு எதிரிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் கோரிக்கை விடப்பட்டது. அரச சாட்சி யாழ் சிறைச்சாலையில் உள்ளதால் அக்கோரிக்கையினை நிராகரித்த நீதிபதிகள் குறித்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதிய வழக்கின்போது பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் வழக்கினை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு 01 முதல் 37 வரையான சாட்சிகளை 28 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் அதன்போது அரச சாட்சியாக மாறியுள்ள 05 ஆவது சட்சியான சுரேஸ்கரனை மற்றில் முற்படுத்துமாறு யாழ் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

தொடர் விசாரணை

வழங்கு விசாரணைக்காக எதிரிகளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தத் தேவையில்லை என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 28, 29,30 மற்றும் ஜூலை 03, 04, 05 ஆம் திகதிகளில் தொடர்விசாரணையாக முற்பகல் 09.30 மணிக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் திறந்த அமர்வாக நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com