சற்று முன்
Home / அடையாளம் / ‘பகிர்வு’ ஒளிப்படக் காட்சிக்குப்பின்னரான உரையாடல்

‘பகிர்வு’ ஒளிப்படக் காட்சிக்குப்பின்னரான உரையாடல்

B Cபகிர்வு என்னும் தலைப்பிலான ஒளிப்படக் காட்சியொன்று யாழ்ப்பாண நகரின் மத்தியிலுள்ள சன்மார்க்க ஜக்கிய இளைஞர் கழகத்தில் கடந்த ஆடிமாதம் 29ம் திகதியிலிருந்து 31ம் திகதி வரை நடைபெற்றது. தர்மபாலன் திலக்ஷனால் வழிப்படுத்தப்பட்ட இக்காட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்திரமும் வடிவமைப்புத்துறையின் 2ம்வருட மாணவர்கள் நால்வரினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தக்காட்சின் அங்குரார்ப்பண நிகழ்வில் மூத்தஓவியர்களான ரமணிஇ ஆசை.ராசையா மற்றும் நுண்கலைத்துறை விரிவுரையாளரும் ஓவியருமான கலாநிதி தா.சனாதனன்இ தெற்கின் முன்னணி ஒளிப்படவியலாளராகிய அனோமா ராஜகருண ஆகியோருடன் ஆர்வலர்கள் மாணவர்களெனக் கணிசமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் காட்சியின் ரசானுபவம் மற்றும் வெளிப்பாடுகள் தொடர்பில் சில முன்வைப்புக்களைச் செய்யமுடியும்.

A

இக்காட்சியை ஒழுங்கமைத்த தர்மபாலன் திலக்ஷன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைவரலாற்றில் பட்டம் பெற்றவர். ஓளிப்படவியலைத் தன்னைத்தரிசிக்கும் துறையாகவும் தனது ஒழுக்கமாகவும் கொண்டவர். பட்டப் பயில்வின் பின் வாழ்வு, தொழில் மற்றும் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு அல்லாடிக்கொண்டிருக்கும் படித்த இளைஞர்களிற்கு மத்தியில் தன்தேவைகளிற்கான ஒரு தொழிலையும் தெரிவு செய்து அதற்கப்பால் ஒளிப்படக் கருவியினூடே தன்வாழ்வைத் தேடிச் செல்லும் ஒரு இளைஞர். இவரின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதும் வரவேற்கத்தக்கதுமாகும்.


இவர்களே கூறுவது போல….
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்புத்துறையில் ஒரு பாடநெறியாக எமக்கு அறிமுகமான ஒளிப்படக்கலையானது எம்மை வெளிக்கொணர்வதற்கான ஒரு மாற்று வடிவமாகத் தெரிந்தது. வகுப்பறைக்கற்றலில் ஒளிப்படக்கலை பற்றிய அடிப்படை அறிவையும் அதன் அறிமுறை விளக்கங்களையும் பெற்றுக்கொண்டு அடுத்த தளத்திற்குப் பயணித்தோம்.
இத்துறையில் நாங்கள் நால்வரும் முன்னனுபவங்கள் ஏதுமற்றோர். ஒளியும் காலமும் ஒன்றுகலக்கும் வெளியில் சரி பிழைகளுக்கு அப்பால் தொடர்ந்தியங்கினோம். ஆரம்பத்தில் பார்ப்பதையெல்லாம் ஒளிப்படங்களாக்கினோம். ஒருகட்டத்தில் ஒளிப்படக்கலையென்றால் என்ன என்ற கேள்விக்கு விடை தேடும் பட்சத்தில் அதனைக் கலையாக உணரத் தொடங்கினோம். என்ன? ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்கு விடை தேடித் தொடர்ந்து செல்கிறோம்…….”
இவர்களின் உள்ளொளிரும் சுடர் இவர்களைத் தொடர்தும் வழிநடத்துவதாக…!
இந்தக் காட்சியில் வைக்கப்பட்ட ஒளிப்படங்கள் தொடர்பில் ஒரு முக்கியமான வாசிப்பை செய்யலாம். பொதுவாகப் பயில் நிலையில் உள்ளவர்கள் நிலக் காட்சிகளையும் பூக்களையும், மிருகங்கள், பறவைகள் போன்ற வனப்பு மிக்க விடயங்களையுமே பிரதி செய்ய முற்படுவர். ஆனால் இவர்களின் ஒளிப்படக் கருவி நேரடியாக வாழ்க்கைக்குள் இறங்குகின்றது. வாழ்வையும் மனிதனையும் பாடு பொருளாக்கியுள்ள இவர்களின் தொடக்கம் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இக்காட்சியானது மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதைகளை எனக்கு ஞாபகப்படுத்தியது.

“இன்னவாறாம் கவியெழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர்திருப்பச் சொல்லாதீர்
மின்னல் முகில் சோலை கடல்
தென்றலினை மறவுங்கள் – மீந்திருக்கும்
இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்ச்சி என்பவற்றைப் பாடுங்கள்..”
மூன்றாம் நாள் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை காட்சிக்கூடத்திற்கு வெளியே பருத்தித்துறை வீதியால் பெல்ஜியத்தைத் தாயகமாக கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள் காட்சியின் விளம்பரப்பதாகையைத் திடீரெனக் கண்டவர்கள் விரைவாகக் காட்சிக் கூடத்தினுள் வந்து காட்சியை பார்வையிடத்தொடங்கினர். காணாததைக் கண்டது போல் ஒரு மகிழ்சி அவர்களின் முகத்தில் தெரிந்தது. இந்த இடத்தில் நான் எனக்குள்ளே சில கேள்ளிகளைக் கேட்டுக் கொண்டேன்.

1.நம்மில் பலர் இதே காட்சிக் கூடத்தினையும் விளம்பரப்பதாகையையும் தாண்டிச் சென்றோம். துறை சார்ந்தவர்களும் உட்பட. ஆனால் இக்காட்சியைப் பார்வையிட எம்மில் எத்தனைபேர் எத்தனித்தோம்?

2.சினிமாப்பட நுளைவுச் சீட்டுக்காய் வரிசையில் நிற்கும் நாம் ஒரு நல்ல ஓவியத்தை, ஒளிப்படத்தை அல்லது சிற்பத்தை நாம் ஏன் இன்னும் தேடி ரசிக்கத் தொடங்கவில்லை?

3.மேற்கத்தேயத்தவர்கள் இந்த இரசனைக்குப் பழக்கப்பட்ட அளவிற்கு நாம் ஏன் இன்னும் பழக்கப்படவில்லை?

4.ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, சிற்பக்கலை போன்றன வியாபார ரீதியில் வெற்றி பெறுமளவிற்கு கலையாக அவை இன்னும் பொதுவெளிக்கு ஏன் நெருக்கமாகவில்லை அல்லது சனரஞ்சகத்தன்மை பெறவில்லை?

நாம் எமது காண்பியப்பண்பாடு குறித்தும் ரசனைக்கலாசசாரம் குறித்தும் எம்மை நாமே விசாரணை செய்யவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் எமது தெரிவுகள்குறித்து எம்மைச் சுயவிசாரணை செய்வதனூடு; கலா அனுபவத்தினூடாக வாழ்வில் புத்துயிர்ப்படைவோமாக.

யோகி 

_DSC0289 _DSC0322 _DSC0326 _DSC0336 _DSC0337 _DSC0339 _DSC0359 _DSC0402 _DSC0423 _DSC0473 _DSC0634 _DSC0687 _DSC0690 _DSC0719 _DSC0723

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு

இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com