சற்று முன்
Home / செய்திகள் / பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு 2022 ஓகஸ்ட் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினால் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு,

பேரன்புடையீர்!
வணக்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு 2022 ஓகஸ்ட் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்ச் சூழலில் அச்சுப் பண்பாட்டு இயக்கத்திலும் பதிப்புத்துறையிலும் ஈழத்தவர் பணிகள் மகத்தானவை. அச்சு, பதிப்பு ஆகியவற்றினூடு தமிழியல் வரலாற்றைக் கட்டமைப்பதிலும் பாதுகாப்பதிலும் நவீனப்படுதுவதிலும் ஈழத்தவரின் சாதனைகள் முன்னோடியானவை. அச்சியந்திரங்களைக் கொணர்ந்து அச்சியந்திர சாலைகளை நிறுவுதல், ஓலைச் சுவடிகளை அச்சேற்றி நூல்களுக்கு நிலையான ஆயுள் அளித்தல், அச்சிட்ட நூல்களைப் பரப்புவதனூடு அறிவுப் பரவலாக்கத்தை நிகழ்த்துதல் முதலாய செயற்பாடுகளை காலனிய காலத்தில் மேற்கொண்ட ஈழத்து அறிஞர்கள், தமிழ்ப் பதிப்புலகின் கேந்திர தேசமாக ஈழநாட்டை மிளிரச் செய்தனர். ‘சீர்பதித்த நற்பதிப்பு மூலவர்’ ஆறுமுக நாவலர், ‘பதிப்பு உலகின் தலைமைப் பேராசிரியர்’ சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரதும் அவர்களைப் பின்பற்றி இத்துறைசார்ந்து ஈடுபட்டோரதும் பணிகளை ஆராய்ந்து பயன்கொள்வது நமது கடமையாகும்.

இலங்கை சுதந்திரம் அடையும் காலம்வரை, நூல்களை அச்சு வாகனம் ஏற்றிய ஈழத்து அறிஞர், பதிப்பாளர், அச்சுக்கலை நிபுணர் முதலியோரின் பல்வகைப் பணிகள், அவற்றின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை அடையாளங் காணல், அவற்றைச் சமூக பண்பாட்டுப் பின்புலத்தில் வாசித்தல், அதன்வழி ஆவணப்படுத்தல் ஆகியவை இந்த மாநாட்டுக் கருப்பொருளின் முக்கிய நோக்கங்களாக அமைகின்றன.

முழுவிபரமும் இணைப்பில் உள்ள அறிவிப்பு மடலில் உள்ளது.

ஆய்வு மாநாடு சிறப்புற நிகழ, தங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
நன்றி

மாநாட்டுக் குழு சார்பில்
கலாநிதி செ. சுதர்சன்
சிரேஷ்ட விரிவுரையாளர்
தமிழ்த்துறை
கலைப்பீடம்,
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை, இலங்கை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொலிஸ் அதிகாரம் இல்லை – 13 மைனஸ் வழங்க ரணில் தீர்மானம்

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com