சற்று முன்
Home / செய்திகள் / யுக்ரேன்-ரஷ்யா மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை இன்னும் மோசமாகப் பின்தள்ளும்

யுக்ரேன்-ரஷ்யா மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை இன்னும் மோசமாகப் பின்தள்ளும்

“ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இரண்டு தீர்மான வாக்கெடுப்புக்களில் இந்தியா சீனாவுடன் சேர்ந்து நடுநிலமை வகித்துக்கொண்டமை மேற்குலக சக்திகளுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது. ”

பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பாஸ்கரன் வழங்கிய சிறப்பு நேர்காணல்

ரஷ்ய உக்ரேன் மோதலுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து கூற முடியுமா ?

இந்த விடயத்தை வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி அல்லது பிராந்திய நலன்கள் என்ற அடிப்படையில்தான் நாங்கள் பார்க்க வேண்டும். 1950 ஆம் ஆண்டுமுதல் 1990 ஆம் ஆண்டு வரை பனிப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் வல்லரசுக்கான போட்டி ஒன்று இடம்பெற்றிருந்தது. 90களில் சோவியத் ஒன்றியத்தை வீழ்த்துவதில் அமெரிக்கா வெற்றி கண்டிருந்தது. அதன் பின்பு சோவியத் ஒன்றியம் துண்டு துண்டாக உடைந்தது. அவை சுதந்திர நாடுகளாக தோற்றம் பெற்றன. அவ்வாறு தோற்றம் பெற்ற ஒரு நாடு தான் உக்ரெயின். எனினும் தன்னை தக்கவைத்துக் கொள்வதில் புடின் தலைமையிலான ரஷ்ய கூட்டமைப்பு ஓரளவு வெற்றி கண்டு கொண்டது. உடைந்து போன நாடுகள் சிலவற்றை ஒன்றிணைத்து ரஷ்ய கூட்டமைப்பாக அது ஒருங்கிணைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் பின்பு அவை எழுச்சியுற்றன. புடின் தலைமையிலான இந்த எழுச்சி மத்திய கிழக்கு போரிலும் சரி சிரிய யுத்தத்திலும் சரி அமெரிக்கா தோல்வியடைந்தது எனும் அளவிற்கு ரசியாவின் பலம் அங்கு நிரூபிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கின்ற பொழுது ரஷ்யாவின் எழுச்சியானது மேற்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியது. மேற்குலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கின. இது அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. இந்நிலையில்தான் அவர்கள் உக்ரேனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன. இவற்றைவிட முக்கிய பிரச்சனை என்னவென்றால் உக்ரேன் நேட்டோவில் இணைய விரும்பம் தெரிவித்ததுதான். உக்ரேன் நேட்டோவில் இணைவதை ரஷ்யாவோ ரஷ்ய சார்பு நாடுகளோ விரும்பியிருக்கவில்லை. இந்த பின்னணியில்தான் உக்ரேனை ஒரு வழிக்குக் கொண்டுவரவேண்டிய தேவை ரஷ்யாவிற்கு காணப்பட்டதன் காரணமாகவே உன்ரேன் மீதான படையெடுப்பை ரஷ்யா தொடங்கியது. உன்ரேன் தன்னை எப்பொழுதும் மேற்குலகின் நண்பனாக காட்டிக்கொள்ள முனைந்துவந்துள்ளது. இதுதான் ரஷ்ய உக்ரேனிய மோதலிற்கு வழிகோலியது.

ரஸ்ய உக்ரேன் மோதல் மூன்றாம் உலகப்போராக மாறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதா ? அவை குறித்து கூறுங்கள் ?

ரஷ்ய உக்ரைன் முதல் மூன்றாம் உலகப்போர் ஆக மாறாது என கூறுவது மிக கடினமான விடயம். மேற்குலகத்தின் உடைய செயற்பாடுகள் எந்த அளவிற்கு நீதியாகவும் நேர்மையாகவும் இருக்கின்றது அவை எந்தளவிற்கு ரஷ்யாவை கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றன என்பதோடு புடீன் உடைய பலம் என்ன பலவீனம் என்ன உள்ளிட்ட விடயங்களை நோக்கவேண்டியிருக்கிறது. எல்லோரும் எதிர்பார்த்தது போல உக்ரைனின் ஒரு பகுதியான கிறேமியாவை ரஷ்யா ஆக்கிரமித்து புடீன் அதனை அங்கீகரிப்பாரா என்ற கேள்வி இருந்தது. புடீன் அதனை செய்துகாட்டினார். மீண்டும் தற்பொழுது டான்பாஸ் போன்ற பிரதேசங்களை புடீன் அங்கீகரிப்பாரா என்ற சர்ச்சைகள் இருந்தன. அவற்றையும் அவர் செய்தார். இதேபோல உக்ரேன் மீது முழுமையான ஒரு ஆக்கிரமிப்பை புடீன் மேற்கொள்வாரா என்ற விவாதங்கள் காணப்பட்டன. ஆனால் அவர் ஆக்கிரமிப்பினை தற்போது மேற்கொண்டுள்ளார். எனவே இந்த விடயங்களை நோக்கவேண்டும்.
அண்மையில் புடீன் கூறிய விடயங்களை நோக்கவேண்டும். இரண்டு முக்கிய விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று ரஷ்யா இல்லாத உலகம் இருந்து என்ன இல்லாமல் விட்டென்ன என்பது. அதாவது ரஷ்யாதான் எங்களுக்கு உலகம். ரஷ்யா இல்லாத உலகம் ஒன்று எங்களுக்கு தேவையில்லை என்பது. அதாவது ரஷ்யா என்கிற தேசத்திற்காக அவர் எதையும் செய்யத் துணிந்துவிட்டதையே இது காட்டுகின்றது. இரண்டாவது விடயம் ரஷ்யாவின் அணு ஆயுதப் பிரிவை தாயார் நிலையில் இருக்குமாறு பகிரங்கமான
அறைகூவல் ஒன்றினை புடீன் வெளியிட்டிருந்தார். இது மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
உலகளாவிய அணு ஆயுத கையிருப்பை கணக்கெடுக்கின்றபோது ரஷ்யா அதிகமான அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றது என்ற உண்மையை நாங்கள் மறந்துவிடக்கூடாது. அதே போல புட்டின் போன்ற ஒரு தலைவர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்குவார் என நினைத்துவிடவும் கூடாது. மேற்குலகம் ரஷ்யாவிற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்கின்றபொழுது மிகவும் அவதானமாக செயற்படவேண்டிய நிலமை காணப்படுகின்றது. ஏனென்றால் அணுவாயுத யுத்தம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் மூன்றாம் உலக யுத்தம் ஒரு அணுவாயுத யுத்தமாகத்தான் நடைபெறும். அவ்வாறானதொரு யுத்தம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் அது நிச்சயமாக இந்த உலகத்தினுடைய அழிவிற்குத்தான் வழிவகுக்கும். எனவே மேற்குலகத்தினுடைய நடவடிக்கைகள் நிச்சயமாக நடுநிலையில் இருந்து சரிசெய்துகொள்ளவேண்டுமே தவிர பக்கச்சார்பாக இருக்குமிடத்து அது ரஷ்யாவினுடைய விரக்தியையும் வெறுப்பையும் அதிகரிக்கச் செய்து மிக அழிவிற்கான பாதைக்கு இட்டுச்செல்லும். எனவே மூன்றாம் உலகப்போரை உருவாக்குவதும் தவிர்ப்பதும் மேற்குலகின் கைகளிலேயே இருக்கிறது. ரஷ்யப் பிராந்தியத்திற்கு ஆபத்து ஒன்று நிகழுமாக இருந்தால் எந்த நிலைக்கும் சென்று தாக்குதல்களை மேற்கொள்ள அவர்கள் தயங்கமாட்டார்கள் என்பதுதான் யதார்த்த நிலை.

யுக்ரேன்-ரஷ்யா மோதல் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்துமா அவை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் ?

இலங்கையின் பொருளாதார உறவுகளில் ரஷயா மிக முக்கியமான ஒரு நாடு. இலங்கையைப் பொறுத்தவரை தேயிலை ஏற்றுமதியானது ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒரு அம்சம். இந்த தேயிலை ஏற்றுமதியில் ஈராக், துருக்கிக்கு அடுத்தபடியாக மிக அதிகளவான தேயிலையை ரஷ்யாவிற்கே இலங்கை ஏற்றுமதி செய்துவருகின்றது. இதில் ஏற்றுமதியில் பிரச்சனைகள் எழுந்துவிடும் என்பதற்கு அப்பால் பணப்பரிமாற்றத்தில் மிகப் பெரும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்ய மத்திய வங்கியை மேற்குலக நாடுகள் தடைசெய்திருக்கின்றன. சுவிஷ் வங்கியிலிருந்து ரஸ்யாவை விலக்கியிருக்கின்றன. இறுதியாக மாஷ்ரர் காட் நிறுவனம் நிதிப் பரிமாற்றத்திலிருந்து ரஷயாவை விலக்கியிருக்கின்றது. இது ரஷயாவோடு செய்துகொள்கின்ற ஏற்றுமதி இறக்குமதியில் பணப்பரிமாற்றத்தில் மிக முக்கியமான சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே இந்தவிடயத்தில் பார்க்கின்றபோது அது இலங்கைக்கு மிகப்பெரும் பின்னடைவினை ஏற்படுத்தும்.
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்ற இச் சூழலில் ரஷ்யாவுடனான வர்த்த நடவடிக்கை என்பது இலங்கைக்கு மிகவும் தேவையான முக்கியமான விடயம். ஆனால் மேற்குலக நாடுகள் ரஷயா தொடர்பில் மிகத் தீவிரமான நிலைப்பாட்டினை எடுத்திருக்கும் இந்த நிலையில் பொருளாதார ரீதியாக இலங்கைக்கு மிகப்பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பும் உலக அரசியலில் எவ்வாறான தாக்கங்களை அல்லது மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள் ?

உலகம் ஒரு அதிகார மாற்றத்தை நோக்கி இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா வகித்துவந்த முன்னிலை என்பது, குறிப்பாக சோவியத் ஒன்றியத்தினுடைய வீழ்ச்சியின் பின்னர் அது தன்னை நிலைநிறுத்திக்கொண்டது எனச் சொல்லிக்கொண்டால் கூட செப்ரெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் உலகில் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் எழுச்சி அமெரிக்காவை பொருளாதார ரீதியில் பின்னுக்குத் தள்ளியது. உலக மாற்றமானது அமெரிக்காவை மிஞ்சிய ஒரு வல்லரசு உருவாக்குகின்ற போக்கினை கொண்டதாக மாற்றம் அடைந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக சீனாவின் எழுச்சி, ரஷ்யாவின் எழுச்சி, இந்தியாவினுடைய எழுச்சி போன்றவை முக்கியமான விடயங்கள். இந்த ஒரு நிலையில் மிக முக்கியமாக அமெரிக்காவுக்கு மிகப் பெரும் தலையிடியாக வந்து சேர்ந்த விடயம் கோவிற் நோய்த்தாக்கத்தின் பிரச்சனை. அது மிகப்பெரிய அளவிற்கு அமெரிக்க பொருளாதாரத்தை பாதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுக்கக் கூடிய நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரம் இல்லை என்ற கருத்தே அதிகமாக சொல்லப்படுகின்றது. இதன் வெளிப்பாடுதான் அமெரிக்கா இன்னமும் உக்ரேனுக்கு ஆதரவாக நேரடியாக படையை அனுப்ப பின்னடித்தமையைக் கூறலாம். நேட்டோவினுடைய நேரடியான உதவி உக்ரேனுக்கு கிடைக்காமல் போனமை கூட இதன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
அந்தவகையில் பார்க்கின்ற பொழுது ரஷ்யாவின் உடைய இந்த எழுச்சிக்கு மேற்குலகத்தின் பதில் அவ்வளவு பலமானதாக இருக்கவில்லை என்பது தான். நேட்டோவினுடைய தலையீடு என்பது அமெரிக்கா சார்ந்த வல்லரசு நிலையை பலவீனப்படுத்திவிடலாம் என்கின்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மறுவளமாக பார்த்தால் இந்த யுத்தத்தில் அமெரிக்க ஆதரவு அணிகள் வீழ்ச்சியடைந்தால் அது சீனாவின் வல்லாதிக்கத்தை, சீனாவின் எழுச்சியை மென்மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிவிடும். இவற்றை ஓரளவிற்கு தடுப்பதற்குத்தான் அமெரிக்க-மேற்குலக சக்திகள் உக்ரெனுடன் இணைந்து படை இறக்கத்தை மேற்கொள்ளாது. ஆயுத-நிதி உள்ளிட்ட உதவிகளை மேற்கொண்டு யுத்தத்தை சமநிலையில் நகர்த்த முனைகின்றன. ஆனால் படை பலம் இல்லாத பொருளாதார – ஆயுத உதவி என்பது அது எந்தளவிற்கு சமநிலையை வழங்கும் என்பதில் கேள்விகள் காணப்படுகின்றன.
நிச்சயமாக சீனா மற்றும் ரஷ்யாவின் எழுச்சி உலகம் இன்னொரு தலைமைக்கு கீழே வருவதற்கு அல்லது மிகப்பெரிய ஒரு மாற்றத்திற்கான காரணியாக இந்த யுத்தம் அமைந்துவிட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
இதில் மிக முக்கியமான ஒரு விடயம் இன்று இந்தியா என்ன நிலையில் இருக்கின்றது என்பது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இரண்டு தீர்மான வாக்கெடுப்புக்களில் இந்தியா சீனாவுடன் சேர்ந்து நடுநிலமை வகித்துக்கொண்டமை மேற்குலக சக்திகளுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது. எனவே இதுவும் கூட மேற்குலகின் அதிகார நிலை என்பது கீழிறங்கி வருவதனையே காட்டிநிற்கின்றது.

நன்றி – உரிமை மின்னிதழ்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com