சற்று முன்
Home / செய்திகள் / சமரும் மருத்துவம் நூலின் திருட்டே சல்லியர்கள் திரைப்படம் – கிட்டு ஏன் மேதகு 2 இலிருந்து நீக்கப்பட்டார் ? – சிறப்பு நேர்காணல்

சமரும் மருத்துவம் நூலின் திருட்டே சல்லியர்கள் திரைப்படம் – கிட்டு ஏன் மேதகு 2 இலிருந்து நீக்கப்பட்டார் ? – சிறப்பு நேர்காணல்

மேதகு திரைப்படம் உருவாக்கத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கவிஞருமான திருக்குமரன் வழங்கிய சிறப்பு நேர்காணல்

நேர்காணல் – கலியுகன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்றினை மேதகு திரைப்படமாக உருவாக்குவதற்கான தூண்டுதல் எவ்வாறு ஏற்பட்டது ? மேதகு திரைப்படத்தின் தோற்றம் பற்றிக் கூறுங்கள் ?

ஆரம்பத்தில் றைஸ் ஒப் கரிகாலன் எனும் பெயரில் கிட்டு என்பவர் சிறியதொரு குறும்படத்தினை எடுத்திருந்தார். அது மிகவும் விளையாட்டுத்தனமான குறும்படமாக இருந்தது. நான் அவரிற்கு அழைப்பு எடுத்து எமது ஈழ விடுதலைப் போராட்டத்தை சுப்பிரமணியபுரம் படம் என நினைத்தீர்களா என மிக இறுக்கமான கருத்தாக கூறியிருந்தேன். ஏனெனில் அந்தக் குறும்படம் அவ்வளவு மோசமானதாக இருந்தது. உங்களுக்கு எங்களது போராட்டம் பற்றி தெரியாவிட்டால் பேசாமல் இருங்கள் அதைக் கொச்சைப்படுத்தும் விதமாக படம் எடுக்க வேண்டாம் என கூறியிருந்தேன். அதனால் அவரால் அக் குறும்படத்தை வெளியீடு செய்யமுடியாமல் போய்விட்டது. தஞ்சாவூரில் இருக்கின்ற குகன் குமார் என்பவரிடம் சென்று நாம் ரைஸ் ஒப் கரிகாலை எதிர்ப்பது பற்றிக் கூறியிருக்கிறார். அவரே என்னைத் தெரியும் என கிட்டுவிற்கு கூறி வேண்டுமானால் நாங்கள் ஒரு நல்ல வரலாற்றினை படமாக எடுப்போம் என கூறியிருக்கிறார். அதன்படி தலைவரின் வரலாறு குறித்த படம் ஒன்றினை எடுப்பது தொடர்பாக கலந்துரையால்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான கதை எழுதும் பணி தொடங்கியது. ஈழத்தைச் சேர்ந்த முத்துச் செழியன் என்பவரும் எம்மோடு இணைந்திருந்தார். தமிழ்நாட்டு இயக்குநர்களைப் பொறுத்தவரையில் திரைப்படங்கள் எடுப்பது தொடர்பான பூரண அறிவு இருக்கின்றபோதும் ஈழத்துக் கதைகளைப் படமாக்குவதென்பது சிரமமான ஒன்று. ஈழத்து வரலாறு, ஈழத்துக் காட்சிகள், ஈழத்து மொழி என அவர்களுக்கு எதுவும் புரியாது. இவ்வாறான நுட்பமான விடயங்களைப் படம் எடுப்பதற்கு அந்த மண்ணில் நின்ற ஒருவரால் தான் முடியும். எனவே ஒவ்வொன்றையும் நாங்களே கிட்டுவிற்கு சொல்லிக்கொடுக்கவேண்டியிருந்தது. உதாரணமாக நான் தமிழ்நாட்டில் 20 வருடங்கள் வாழ்ந்தாலும் மதுரையில் உள்ள சீவலப்பெரிப்பாண்டியனின் கதையை எடுப்பதென்றால் அந்த மண்ணில் பிறந்த மகன் ஒருவர் திரை மொழியில் எழுதுவதற்கும் எனது எழுத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்படித்தான் எங்களது ஈழத்தின் நிறம் என்னவென்றோ அதன் வரலாறு என்ன என்றோ போராட்டம் எப்படி இருக்கும் என்றோ தெரியாத ஒரு ஆளால் முற்றுமுழுதாக இதனை எடுக்க முடியாது. எனினும் ஒரு கட்டத்தில் நாங்களும் தம்பி முத்துச்செழியன் உள்ளிட்டவர்களும் ஒரு கலந்துரையாடலில் மேதகுவை தயாரிப்பது பற்றி கதைத்து கிட்டுவிற்கு ரைம்லைன் ஒன்றினை எழுதி கொடுத்தோம். அதனை ரைம்லைன் ஸ்கிறிப்ற் ஆக செய்து எனக்கு கிட்டு அனுப்பியிருந்தார். அதனை பார்த்துவிட்டு நான் இதனை அழகாக திரைக்கதையாக்கினால் நன்றாக வரும் ஆனாலும் உமக்கு ஈழத்தவர் ஒருவருடைய உதவி கண்டிப்பாக தேவை என கூறினேன். கிட்டுவிற்கு முத்துச்செழியனின் தொடர்பு இருந்திருக்கவில்லை. நாங்கள் முத்துச்செழியனின் தொடர்பினை ஏற்படுத்திக்கொடுத்தோம். அதன் பின்னர் தலைவரின் உரையாடலில் இருந்து ஒவ்வொரு சிறு உரையாடலும் எங்களால் முழுமையாக எழுதப்படு கிட்டுவிற்கு கொடுக்கப்படுகிறது. ஆனாலும் கிட்டு அதனை முழுமையாக தனது படைப்பு எனும் விதத்தில் கிட்டுவின் படைப்பு எனவே வெளிப்படுத்துகின்றார்.
ஈழத்தவர்களைப் பொறுத்தவரையில் நாங்கள் சினிமாக்காறர் இல்லை. நாங்கள் சினிமாவிற்குள் இனி வரப்போவதும் இல்லை. எங்களின் எதிர்காலமும் அது இல்லை என்றபடியால் நாங்கள் அது குறித்து பெரிதாக கரிசனை கொண்டிருக்கவில்லை. அதற்குப் பின் ஒவ்வொரு காட்சிகளும் படமாக்கப்பட்டன. அங்கும் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொருவருடைய உடல்மொழியும் எப்படி இருக்கவேண்டும் என நாங்கள் தான் சொல்லிக்கொடுக்கவேண்டியிருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அக்சன் – கட் வேலை தான் கிட்டு செய்திருந்தார். மேதகு திரைப்படத்தை கூத்துக் கலை மூலம் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை கிட்டு எங்களிடம் வெளிப்படுத்தினார். நாங்களும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தோம்.
முகம் காட்டாத பல ஈழத்தவர்கள்தான் இந்தப் படத்தின் பின்னணிணில் பெரும் உழைப்பினை வழங்கியிருக்கிறார்கள். எனவேதான் குறைந்த நிதியில் சிறந்த படைப்பினை உருவாக்கக்கூடியதாக இருந்தது.

மேதகு திரைப்படத்தை எத்தனை பாகங்களாக வெளியிட உத்தேசித்திருக்கிறீர்கள் ? ஒவ்வொரு பாகத்திற்குமான கதைத்தெரிவு குறித்துக் கூறுங்கள் ?

மேதகு திரைப்படம் எத்தனை பாகங்களாக வெளியிடுவது என நாங்கள் முடிவேதும் எடுக்கவில்லை. நாங்கள் ஒவ்வொரு காலகட்ட வரலாறாக ஒவ்வொரு பாகமாக எடுத்துவருகின்றோம். முதலாம் பாகம் 1950 களில் இருந்து 1975 வரையான காலப்பகுதியின் வரலாற்றினைக் கூறுவதாக வெளிவந்தது. மேதகு பாகம் இரண்டு 1975 இல் இருந்து 1980 களின் இறுதிப் பகுதிவரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. முன்றாவது பாகம் 1980 களின் இறுதியில் ஆரம்பித்து அடுத்த ஒரு முக்கிய கட்டம் வரை நகரும். அவ்வாறு எங்கள் வரலாற்றில் எந்தெந்த முக்கியமான சம்பவங்கள் நடந்ததோ அவற்றினை மையமாக வைத்தே கதையினைத் தேர்வு செய்கின்றோம். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் தலைவரின் வரலாறு என்பது பெரிய ஒரு கடல். அதில் இருந்து முழுவதையும் எங்களால் சொல்லிவிட முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. எனவே நாங்கள் கதையினை எவ்வாறு தெரிவுசெய்கின்றோம் என்றால் தலைவர் ஒரு ஆயிரம் பேரினைச் சந்தித்திருப்பார். அதில் ஆயிரம் சம்பவங்கள் நடந்தேறியிருக்கும். ஆனால் எந்த எந்த சம்பவங்களைச் தெரிவு செய்தால், எந்தெந்த கதைகளைச் சொன்னால் எங்கள் போராட்டம் நியாயமானது என்றும் தொடர்ந்தும் எமது உரிமைக்காக போராட வேண்டும் என எதிர்கால சந்ததி எழுந்துநிற்குமோ அதற்குரிய கதைகளையே நாங்கள் தெரிவுசெய்து கொண்டுவருகின்றோம். மற்றப்படி எல்லா வரலாற்றையும் ஒரு படத்திற்குள் சொல்லிவிட முடியாது. நாங்கள் மேதகு திரைப்படத்தினை ஒரு ஐந்தாறு பாகத்திற்குள் சொல்லிமுடிக்கத்தான் விரும்புகின்றோம். காலம் அதற்குக் கை கொடுத்தால் எடுத்து முடிப்போம்.

மேதகு திரைப்படத்தின் முதலாம் இரண்டாம் பாகங்களுக்கு வெவ்வேறு இயக்குநர்களை தெரிவுசெய்ய காரணம் என்ன ?

மேதகு திரைப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் என்பது அந்தஸ்துள்ள ஒரு தொழில்தான். அதாவது அக்ஷன் – கட் தான் அவருடைய தொழில். ஆனாலும் அவருடைய அனுபவம் என்பதும் இயக்குநருக்கான இயல்பும் அந்தத் திரைப்படத்தில் வெளிவரும். மேதகுவைப் பொறுத்தவரை நூறு வீதம் எங்களுடைய ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புபட்டது. அதில் நிறைய ஆயுதங்களின் கையாளுகை பற்றி வரும், போர்க்களங்கள் பற்றிய காட்சிகள் வரும். பயிற்சி முகாம்கள் வரும், சந்திப்புக்கள், இராஜதந்திரங்கள் என பல்வேறு விடயங்கள் வரும் இவற்றை சினிமா இயக்குநர்களால் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது.

உதாரணமாக நீங்கள் ஆயுதங்களை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், மேதகு இரண்டில் வஸ்தியாம்பிள்ளை எனும் பொலிஸ்காரருக்கு அடித்து அவரிடம் இருந்து எஸ்.எம்.ஜி துவக்கினைப் பறிக்கிறோம். அங்கு எஸ்.எம்.ஜி துவக்கு என்றால் என்ன என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஜீ-3 என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. ஆயுதங்கள் பற்றிய அறிவு இல்லை. ஒரு பயிற்சி முகாமை அமைக்கின்றோம் என்றால் பயிற்சி முகாம் எப்படி இருக்கும் என அங்கு உள்ள ஒருவருக்கு தெரியாது. எனவே நூறுவீதம் நாங்களே நின்று அந்தக் கதையை எழுதி நாங்களே நாங்களே ஒவ்வொரு காட்சியாக இது இப்படி இப்படித்தான் வரவேண்டும் என தெரிவுசெய்துகொடுத்தால் மட்டும்தான் அவர்கள் தங்கள் கமராக் கண்களுக்கூடாக ஒரு திரைப்படமாக கொண்டுவர முடியும் என்பதால் தான் இந்த மாற்றம்.
இதனையும் தாண்டி மேதகு திரைப்படம் என்பது இயக்குநர்களின் தெரிவில் எல்லாம் இல்லை. பாகம் ஒன்றில் கிட்டு இயக்கியிருந்தார். அதில் அவருக்கு கிடைத்த பெயர் புகழ் காரணமாக அதிகளவான பணம் வெளியிலிருந்து கிடைத்தது. அதக் காரணமாக கோடிக்கணக்கான சம்பளம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் மக்களின் பணத்தில் படம் எடுப்பவர்கள். எம்மால் கோடிக்கணக்கான ரூபா சம்பளம் கொடுக்க முடியாது. எனினும் நாங்கள் பல தடைவைகள் அவரை அணுகியிருந்தோம். ஆனால் அவர் தனக்கு கோடிக்கணக்கான சம்பளம் வருகிறது நான் பெயரைச் சம்பாதித்துவிட்டேன். இனி பணம்தான் தேவை எனும் விதத்தில் நடந்துகொண்டார். இதற்காக அவர் தன்னை வெளிப்படுத்திய விதமும் அதற்காக அவர் சொன்ன பதில்களும் அலட்சியப்போக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தது. முக்கியமாக மேதகு ஒன்றில் இருந்த ஒரிச்ஜினல் ஓடியோ ரக் மற்றும் வீடியோ ரக் எல்லாம் இருந்த பொதுமக்கள் சொத்துக்களை அவர் திருடிச்சென்றுவிட்டார்.
எங்களுக்கு இயக்குநர் தெரிவு என்பது முக்கியமானது இல்லை. எங்களுக்கு கதை, சம்பவங்கள் சரியாக வரலாறு பிழைக்காமல் கூறவேண்டும். மேதகு திரைக்களம் முதலாவது கதையைக் கொடுத்தது. காட்சிகளைக் கொடுத்தது. அதனை கிட்டு எனும் இயக்குநர் இயக்கினார். இப்போது அவர் சென்றுவிட்டார். இப்போது பாகம் இரண்டிற்கு வேறு ஒருவர் வந்திருக்கிறார். அவர் நாங்கள் பாகம் இரண்டிற்காக எழுதிக்கொடுத்த கதையை இயக்குகிறார். இங்கு யாரும் தனிப்பட்ட மனிதன் வீரன் அல்ல. மேதகு திரைக்களத்தில் அனைவரும் சமமானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் எந்த ஒரு தனிப்பட்ட தளபதியையும் நம்பி இருந்ததில்லை. ஒருவர் போனால் அடுத்தவர் வருவார் என்றே காணப்பட்டிருந்தது. இதுதான்வரலாறு. மேதகுவும் அப்படித்தான். அது ஒரு வரலாறு. இந்த வரலாற்றினை ஒரு ஆவணப் படமாக எடுத்தால் எல்லோரையும் சென்றடைய முடியுமோ என்ற தயக்கம் இருந்தது எனவே அதனை ஒரு kind of Biofic. அதாவது ஒரு டொக்குமன்றியை பியூச்சர் மூவி பாணியில் எடுத்துச்சொல்கின்றோம். மேதகு மூன்றில் கூட இவர் இருக்கலாம் அல்லது வேறு ஒருவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும் அவ்வளவுதான்.

மேதகு பாகம் ஒன்றினை இயக்கிய கிட்டு தற்போது ஈழத்துக் கதைக்களத்தை மையமாக வைத்து சல்லியர்கள் எனும் படத்தினை இயக்கிவருகிறார் இவை குறித்து அறிந்திருக்கிறீர்களா ? அவை தொடர்பாக கூற முடியுமா ?

ஆம் அறிந்திருக்கிறேன். ஊரில் சல்லிப் பயல்கள் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. சங்க இலக்கியங்களிலும் சரி வேறு எங்கும்சரி மருத்துவர்களைச் சல்லியர்கள் என்று அழைத்ததாக இல்லை. பண்டைய காலத்தில் நடைபெற்ற போர்க்களங்களில் வாள், வேலின் துண்டுகள் உடலுக்குள் துளைத்துவிட்டால் அவற்றினை வெளியே பொறுக்கி எடுக்கின்ற பணியினை மேற்கொள்பவர்களையே சல்லியர்கள் என்று சங்க இலக்கியங்களில் கூறியிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மாகோன்னதமான மிகச்சிறந்த மருத்துவர் போராளிகளை சல்லியர்கள் என அழைத்து திரைப்படம் எடுப்பதன் நோக்கம் என்ன என எமக்குப் புரியவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயம். இது கூட மேதகு பாகம் ஒன்றில் நடைபெற்ற சம்பவம் ஒன்றிலிருந்தே தோற்றம் பெற்றிருக்கிறது.

மேதகு பாகம் ஒன்று படமாக்கப்படுவதற்கு முன்பு நாங்கள் இரத்தமும் சதையுமான ஈழ வரலாற்றினை இயக்குபவர் புரிந்துகொள்ளவேண்டும் எங்கள் வலியைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக தூயவன் எழுதிய சமரும் மருத்துவமும் என்ற நூலினை படிப்பதற்காக கிட்டுவிடம் மேதகுதிரைக்களத்தைச் சார்ந்தவர்கள் கொடுத்திருந்தார்கள். அதனைப் படித்த கிட்டு அதனால் மிகவும் ஈர்க்கப்பட்டவராக அது தொடர்பான விளக்கங்களைக் கேட்டு அறிந்துகொண்டார். உலகத்தில் எந்த ஒர மருத்துவரும் இவ்வாறு உடல்களை வெட்டித் தைத்திருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு எமது மருத்துவப் போராளிகள் மயக்க மருந்து இல்லாமல் மருத்துவம் பார்த்தார்கள். அப்படிப்பட்ட போர்க்களத்தில் நின்று ஒவ்வொரு போராளியும் களத்தில் பட்ட உபாதைகளைப் பார்த்து தூயவன் எவ்வளவோ கடினத்துக்கு மத்தியில் எழுதிய புத்தகம்தான் இந்த சமரும் மருத்துவம் புத்தகம். அதனை வாசித்த கிட்டு என்கின்ற சல்லிப் பயலுக்கு தமிழ்நாட்டு திரையரங்குகளில் படத்தினை ஓட்டி அதன் மூலம் பெரியளவு வருமானம் பெறவேண்டும் என்கின்ற ஆசை வருகின்றது. அவருக்கு வேறு எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. சமரும் மருத்துவமும் நூலின் நிகழ்களமான ஈழத்தை தமிழ்நாட்டில் நடைபெறும் சம்பவமாகவும் போராளிகளின் பெயர்களை வேறு பெயர்களாகவும் மாற்றி திரை வசூலுக்காக படம் எடுக்கிறார்.
பல ஆண்டுகளகாக களங்களில் நின்று எழுதப்பட்ட அந்தப் புத்தகம் பற்றிய எந்தக் குறிப்பும் காட்சிப்படுத்தாமல் எழுத்து இயக்கம் கிட்டு என போட்டு படத்தை வெளியிடவுள்ளார். அவர் திரைப்படத்தின் இயக்கம் தான் என போடுவதில் எந்த சிக்கலும் இல்லை ஆனால் எழுத்து இயக்கம் என போடுவது எந்த அறத்தின்பாற்பட்டது என தெரியவில்லை. இவ்வாறுதான் அறிவுத் திருட்டுக்கள் நடைபெறுகின்றன.


About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொலிஸ் அதிகாரம் இல்லை – 13 மைனஸ் வழங்க ரணில் தீர்மானம்

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com