தையிட்டி சட்டவிரோத விகாரை...! மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைக்கப்தற்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணி உரிமையாளர்களில் ஒருவரான பத்மநாதன் சாருஜன்  வழங்கிய நேர்காணல்



உங்களுடைய காணிகள் எவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டன என்பது குறித்து கூறுங்கள் ?

நாங்கள் 1990 ஆம் ஆண்டு தையிட்டியிலிருந்து இடம்பெயர்ந்திருந்தோம். 35 வருடங்களின் பின் மீள் குடியேற்றம் எனும் பெயரில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன. படிப்படியாக சுற்றிவர பல பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதும் ஒரு பகுதி காணிகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. நாங்கள் அப்பகுதிகளும் விடுவிக்கப்படும் என்றுதான் நம்பியிருந்தோம். அனால் அவை விடுவிக்கப்படவில்லை. அங்கு இராணுவம் நிலைகொண்டிருந்தது. அவ்வாறான நிலையில்தான் தமிழர்களிடமிருந்து ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு பிக்குகளுக்கு உரித்தாக்கப்பட்ட காணியில் விகாரை ஒன்றுக்கான அடிக்கல் 2018 ஆம் ஆண்டு ஆகஷ்ட் மாதம் 18 ஆம் திகதி நாட்டப்பட்டது. அவர்கள் தாங்கள் வைத்திருந்த காணியில் தானே விகாரை கட்டப்போகிறார்கள். எங்கள் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறும்போது எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றே நாங்கள் நம்பியிருந்தோம். 2021 ஆம் ஆண்டு கொரோணா காலப்பகுதியில் நாங்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்த சந்தர்ப்பத்தில்தான் முன்னர் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தை விட்டுவிட்டு இரகசிய இரகசியமாக எங்கள் காணிகளுக்குள் விகாரைக்கான கட்டுமானம் எழுப்பப்பட்டது. அப்போது கூட நாங்கள் அது விகாரைக்கான கட்டுமானம் என எண்ணியிருக்கவில்லை. ஏதோ இராணுவத்தேவைக்காக கட்டடம் கட்டுகிறார்கள் விடுவிக்கும்போது உடைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் என்றுதான் நம்பியிருந்தோம். எனினும் எங்கள் காணிக்குள் புதிய கட்டுமானம் எழுப்பப்படுவது தொடர்பில் பிரதேச சபை உள்ளிட்ட இடங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு இவ் விடயம் கொண்டுசெல்லப்பட்டபோது அப்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்த அங்கஜன் இராமநாதனும் தெல்லிப்பளை பிரதேச செயலரும் அது இராணுவ கட்டுமானம் என்றும் இராணுவம் வெளியேறும்போது அந்த கட்டுமானங்களும் உடைக்கப்பட்டுவிடும் என்றும் வாக்குறுதி தந்தனர். 2023 ஆம் ஆண்டு அது விகாரையாக கட்டப்பட்டு முடி வைக்கும் அளவிற்கு வந்தபோதுதான் இது விகாரைக் கட்டுமானம் என எமக்கு தெரியவந்தது. அதன்போது நாங்கள் ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோதுதான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் எங்களோடு இணைந்துகொண்டது. போராட்டத்திற்கு மறுநாள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றிருந்த போது அது சட்டவிரோத விகாரைக் கட்டுமானம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். 


உங்கள் போராட்ட தினத்தை போயா தினமான தெரிவுசெய்து தொடர்ச்சியாக போயா தினங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதன் காரணம் என்ன ?

போயா தினத்தில் தான் தென்னிலங்கையிலிருந்து பேருந்துகளில் மக்களை இந்த சட்விரோத விகாரைக்கு அழைத்துவருகின்றார்கள். அவர்கள் எங்களை ஏமாற்றி எங்கள் நிலங்களில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துவிட்டு இங்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டுவந்து வழிபாடுகள்  மேற்கொள்கின்றார்கள். அவர்களின் பொய்களை உடைக்கவேண்டும். அவர்கள் பொய்யர்கள் என்பதை அவர்கள் வழிபாட்டுக்கு அழைத்துவருகின்ற ஒவ்வொரு மக்களுக்கும் தெளிவுபடுத்தவேண்டும். புத்த பெருமானின் போதனைகள் மற்றும் சிந்தனைகளுக்கு எதிரான வகையில் சட்டவிரோதமான முறையில் பிறரது நிலங்களை ஆக்கிரமித்து அடாத்தாக இந்த விகாரை கட்டப்பட்டது என்பதை அந்த மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் எனவேதான் தென்னிலங்கையிலிருந்து மக்கள் அழைத்தவரப்படுகின்ற புத்தபிரானது வழிபாட்டிற்கு சிறந்த தினமான போயா தினங்களை நாங்கள் எங்கள் பேராட்டங்களுக்கு தெரிவுசெய்கின்றோம். 


தங்களோடு ஒரு சிலர் மட்டுமே போராடிவந்த நிலையில் இந்த போராட்டம் தற்போது மக்கள் மயப்படுத்தப்பட்டுவருவது குறித்து என்ன கருதுகிறீர்கள் ?

போராட்டம் இப்போது மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகிச்சியான விடயம்தான். ஏனெனில் போராட்டங்கள் மக்கள்மயப்படுத்தப்படும்போதுதான் அந்தப் போராட்டங்கள்சார்பில் அரசிற்கான அழுத்தம் அதிகரிக்கும். தையிட்டிப்போராட்டம் காணி உரிமையாளர்களுக்கும் அங்கு சட்டவிரோத விகாரை அமைத்த பிக்குவிற்கும் இடையிலான போராட்டமாக இருந்தபோது எம்மோடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இணைந்துகொண்டது. இன்று அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி எம்மோடு இணைந்திருக்கின்றன. பல பொது அமைப்புக்கள் எம்மோடு இணைந்திருக்கின்றன. இது எமக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான பாதையினை நோக்கி நகர்த்தும் என நினைக்கிறேன். தற்போது ஆட்சியில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் கூட பாராளுமன்றத் தேர்தலிற்கு முன்னர் எங்களை வந்து சந்தித்திருந்தனர். தங்கள் ஆட்சியமைத்தால் எங்கள் காணிகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தருவோம் என்றில் முடியாவிட்டால் தாங்களும் எங்களோடு இணைந்து போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியிருந்தனர். இன்று அவர்கள் ஆட்சியமைத்திருக்கிறார்கள். எமது மக்கள் என்றுமில்லாத வகையில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களுக்கு தெரிவுசெய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எந்தளவிற்கு எமது மக்களுக்கான குரல்கொடுப்பார்கள் என்று பார்ப்போம்.  


தங்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்க வடக்கு மாகாண ஆளுநர் தரப்பு சில முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆளுநரை நீங்கள் சந்தித்தீர்களா ? உண்மையில் என்ன நடந்தது ?

வடக்கு மாகாண ஆளுநராக இருக்கும் வேதநாயகன் அவர்கள் முன்னர் யாழ் மாவட்டச் செயலராக இருந்தபோது வலி வடக்கில் பல காணிகள் விடுவிப்பதில் பணியாற்றியவர் என்ற அடிப்படையிலும் அவர் வலிவடக்கைச் சேர்ந்தவர் என்பதன் அடிப்படையிலும் தையிட்டி சட்டவிரோத விகாரை பிரச்சனை தொடர்பில் அவருக்கு ஆழமான புரிதல் இருக்கும் என கருதியதன் அடிப்படையில் அவர் ஆளுநராக பதவியேற்ற ஒரு சில தினங்களில் நாங்கள் அவரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடினோம். அந்தச் சந்திப்பின் பின்னர் நாங்கள் மூன்று தடவைகள் அவரைச் சந்திக்கக்கூடியதாக இருந்தது. அதன்போது அவர் எமது கோரிக்கள் நியாயமானது என்றும் அவர்கள் தங்களது என கூறும் காணியில் அத்திவாரமிட்டுவிட்டு பின்னர் மக்கள் காணிக்குள் விகாரை அமைத்தது சட்டவிரோதமானது என்றும் எங்களுக்கு நல்லதொரு தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்திருந்தார். அப்போது நாங்கள் தற்போது விகாரை கட்டப்பட்டுள்ள காணியைத் தவிர்த்து ஏனைய காணிகளை மீட்டுத்தருமாறும் விகாரை கட்டப்பட்டுள்ள காணிக்கு உரியவருக்கு முன்னர் விகாரை கட்டுவதற்காக அத்திவாரமிட்ட காணியை மாற்றுக் காணியாக வழங்குமாறும் கோரினோம். ஆளுநரும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் முழுவதையும் மாற்றிக்கூறிவிட்டார். அதன் பின்னர் பௌத்த மகா சங்கத்தினால் தங்களுக்கு 14 ஏக்கர் காணி வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாங்களும் எங்களது நிலைப்பாட்டை மாற்றிவிட்டோம். நீங்கள் எங்கள் காணிகளை ஆக்கிரமித்து அங்கு குடியேற்றங்களை நிறுவ முற்பட்டிருப்பதால் நாங்கள் மாற்றுக் காணிகள் எதையும் ஏற்பதற்கு தயாராக இல்லை எங்கள் காணிகளே எமக்கு வேண்டும் எனும் கோரிக்கையை வலுப்படுத்தியிருக்கிறோம். அந்த நிலைப்பாட்டிலேயே தற்போது உறுதியாக இருக்கிறோம்.


விகாரைக்குரியது எனக்கூறப்படும் காணி அவர்களது பூர்வீகக் காணியா ? அது எவ்வாறு கைமாற்றியது என்ற தகவல் ஏதும் தங்களிடம் உள்ளதா ?

எவ்வாறு உறுதி மாற்றப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் தையிட்டி விகாரைக்கு என 1.4 ஏக்கர் காணி இருந்தது. அங்குதான் விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் தான் எங்கள் காணிகளிலிருந்து 8 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டது. அது போதாதென்று இன்னமும் 14 ஏக்கர் காணி பௌத்த மகாசங்கத்திற்கு வேண்டுமாம். உண்மையில் அந்த 1.4 ஏக்கர் காணி கூட தையிட்டி விகாரைக்கு உரியது அல்ல. எங்களது பரம்பரைக் காணிகள் எவ்வாறு சிங்களவர்களுக்கு கைமாறியது என்கின்ற கேள்வி இருக்கிறது. எங்களிடம் ஆங்கிலேயர்களால் தேச வளமைச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திற்கு முற்பட்ட கால உறுதிகள் கூட இருக்கிறது. அப்படியிருக்க விகாரைக்கு உரியது எனக் கூறும் காணி கூட கையகப்படுத்தப்பட்ட காணிதான். அது தொடர்பான உண்மைகளும் வெளிக்கொணரப்படும்போதுதான் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும். நான் அறிந்தவரை அவர்கள் வெளிப்படுத்தல் உறுதி முடித்து வைத்திருப்பதாகவே அறிய முடிகிறது. 


சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிவரும் தாங்கள் உள்ளிட்ட காணி உரிமையாளர்களுக்கு ஏதும் அச்சுறுத்தல்கள் தோற்றுவிக்கப்படுகிறதா ?

இந்த அரசு ஆட்சிக்குவந்தபின் அவ்வாறு அச்சுறுத்தல் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. இதற்கு முன்னய அரசுகளின் ஆட்சியில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தன. போராட்டம் ஒன்றின்போது ஏற்பட்ட சிறு வாய்த்தர்க்கம் காரணமாக பொலிசாரால் தனிப்பட்ட ரீதியில் இருவருக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது தவிர வேறு சம்பவங்கள் தற்போதைய ஆட்சியில் நிகழ்வில்லை. ஆனால் அண்மையில் ஊடகவியலாளர்கள் இருவர் அழைக்கப்பட்டு பல மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர். அது அண்மையில் விகாரையை உடைக்க வாருங்கள் என வெளியிடப்பட்டிருந்த போலி துண்டுப்பிரசுரம் தொடர்பில் விசாரிக்கவே அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததாக அறியமுடிந்தது. 









Post a Comment

أحدث أقدم