சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் வழங்கிய நேர்காணல்
கொழும்பில் நீதிமன்றுக்குள் வைத்து கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் ?
யுத்தத்திற்கு பின்னராக காலகட்டம் என்பது தெற்கிலே கொலைக் கலாச்சாரமானது மிக ஆழமாக வேரூன்றியிருப்பதை நாம் காணக்கூடியதாக இருப்பதன் அடையாளமாகவே இந்தப் படுகொலையையும் நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. தெற்கின் இந்தக் கொலைக் கலாச்சாம் என்பது தற்போது நீதிமன்றங்களையும் ஆக்கிரமித்திருக்கின்றது. இது பாதாள உலகம் எவ்வளவு ஆளமாக வேரூன்றியிருக்கின்றது என்பதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. நீதிமன்றத்துக்கள் நடைபெற்ற கொலை என்பது ஒரு தனி நபர் கொலைச் சம்பவம் அல்ல. இது ஒரு கூட்டு நடவடிக்கை. இது நீதித்துறைக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் என்பதைவிட இனிவரும் காலங்களில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் போன்றவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியிலும் சுதந்திரமான நடமாட முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. நீதிமன்றத்திற்குள் நடைபெற்ற இந்தச் சம்பவம் என்பது பாதுகாப்புத் துறையின் பலவீனத்தை நன்றாக அறிந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு படுகொலையாகவே நான் பார்க்கின்றேன். அந்தவகையில் இந்த நீதிமன்றத்திற்குள் நடைபெற்ற படுகொலை என்பது நீதித்துறையை மட்டுமல்ல முழு நாட்டையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கின்றது. இது எங்களைப்போன்ற கருத்துக்கள் தெரிவிப்பவர்களுக்குக் கூட இனிவரும் காலங்களில் அச்சுறுத்தல் நிறைந்த காலமாக மாற்றமடையலாம். நிதிமன்றத்திற்குள் மட்டுமல்ல நீதிமன்றத்திற்கு வெளியிலும் பாதாள உலகக் குழுக்களின் படுகொலைகள் தொடர்ச்சியாக அதிகரித்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்தத் துப்பாக்கிகள் அரசினைக் கேள்விகேக்கின்ற மற்றும் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கின்றவர்களை நோக்கியும் திரும்பக்கூடும் என்கின்ற சந்தேகம் எங்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
கொழும்பில் நீமதிமன்றுக்குள் கைதி ஒருவரை சுட்டுக்கொன்ற நபர் இராணுவத் தரப்பைச் சேர்ந்தவர் என கூறப்படுவதோடு இச் சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சிகரானது என கூறப்படுகிறதே ?
நிச்சியமாக இந்த கொலைச் சம்பவத்தோடு இராணுவம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியக்கூடியதாக உள்ளது. தமிழருக்கு எதிராக யுத்தம் நடைபெற்றபோது சிங்கள மக்கள் மத்தியில் இராணுவத்தினரை ஹீரோக்கள் றேஞ்சிற்கு உயர்த்திவைத்திருந்தார்கள். அந்தக் காலம் தற்போது தென்னிலங்கையில் தலைகீழாக மாறிவிட்டது. ஆனால் வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் இந்த இராணுவத்தினர் சட்டபூர்வமாக உருவாக்கப்பட்ட கொலையாளிகள் என்பதை கடந்த கால வரலாறுகள் மூலம் நன்கு உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களை அரச பயங்கரவாதிகள் என்று நாங்கள் கூறுகின்றோம். அரச பயங்கரவாத்தின் இயக்குநர்கள் இந்த இராணுவத்தினர்தான். இந்த இராணுவம் இவ்வாறான கொலையில் ஈடுபட்டது இது முதற்தடவையல்ல. வடக்கு கிழக்கில் இவர்கள் மேற்கொண்ட கொலைகள் - படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள் எண்ணில் அடங்காதவை. ஆனால் அவர்களைத் தண்டிக்காது இலங்கை அரசே பாதுகாப்புக் கொடுத்தது. இவ்வாறன படுகொலைகள் புரிந்த இராணுவத்தை நீதிமன்றங்கள் தண்டிக்க முற்பட்ட சந்தர்ப்பங்களில் கூட அவர்களுக்கு ஆட்சியாளர்கள் பொது மன்னிப்புக் கொடுத்து காப்பாற்றினார்கள். அந்த இராணுவத்தினர் தற்போது பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து கொலைகளில் ஈடுபடுகின்றார்கள். தங்களைப் பாதுகாத்த அரசியல் தரப்பினருக்காக கொலைகளை செய்கிறார்கள். எனவே இவற்றுக்கெல்லாம் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் ஆட்சியாளர்களே.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தி அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் பொலிசாரினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டுவருகிறார்களே அது தொடர்பில் கூறுங்கள் ?
தையிட்டி சட்டவிதோர விகாரைக்கு எதிரான போராட்டம் என்பது கடந்த மாதம்வரையில் தனித்த ஒரு கட்சியினுடைய போராட்டமாகவும் - அந்த காணி உரிமையாளர்களது போராட்டமாகவுமே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்தப் போராட்டம் தமிழ் மக்களினுடைய அரசியல் போராட்டத்தோடு தொடர்புபட்டது என்பதை மக்கள் மத்தியில் ஊடகங்கள் கொண்டு சேர்த்திருக்கின்றன. எனவே இந்தப் போராட்டம் என்பது மேலும் பலமடையக்கூடிய சாத்தியங்களே இருக்கின்றன. எதிர்வரும் போயா தினத்திற்கு போராட்டம் புதிதாக வேறு ஒரு வடிவத்தைப் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது கத்தோலிக்க திருச்சபை தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக தனது கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது. இது தமிழர்களினுடைய அரசியல் சார்ந்த போராட்டம் என்பதை திருச்சபை விளங்கியிருக்கின்றது. எனவே ஏனைய மதத் தலைவர்களும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இவ்வாறான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பவர்களாக ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள். எனவேதான் ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடப்பட்டுவருகின்றது. ஊடகங்களை முடக்குதல் என்பது அரசியலை முடக்குதலுக்கு வழிவகுக்கும். அதேபோல போராட்டத்தில் முன்னிலையில் இருப்பவர்களை தனித்தனியாக விசாரணைக்கு அழைப்பதும் அவர்களை அச்றுத்துகின்ற செயற்பாடாகவே காணப்படுகின்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என கூறிவந்த அனுர தரப்பு இப்போது அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறுவது குறித்து என்ன கருதுகிறீர்கள் ?
அரசியல் கைதிகள் இந்த நாட்டில் இல்லை என்று பேரினவாத தலமைத்துவங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் கூறிவந்திருந்தன. இந்நிலையில்தான் கடந்தவருடம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்று கூறியதை நாங்கள் நம்பவில்லை. ஏனெனில் இலங்கையின் பிரதமராக இருந்த டீ.ம்.ஜயரட்ண ஒரு முறை கூறினார் நாங்கள் தேர்தல் மேடைகளில் தேர்தல் வெற்றிக்காக கூறும் வாக்குறுதிகளை நீங்கள் அப்படியே நம்பிவிடாதீர்கள் என்று. இன்றும் அதுதான் நடந்திருக்கிறது. தேர்தல் மேடைகளில் அனுரகுமார திசாநாயக்க அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்று கூறினார். ஆனால் தற்போது அவரது நீதி அமைச்சு கூறுகின்றது இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று. இதுதான் இலங்கை ஆட்சியாளர்களின் நிலை. பேரினவாத சிந்தனையில் மூழ்கிப்போன இலங்கையின் எந்த ஆட்சியாளரும் தமிழர்களினுடைய அரசியல் பிரச்சனைகளை சரிவர அணுகி தீர்த்துவைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சில வருடங்களுக்கு முன் அவரைச் சந்தித்து பாராளுமன்றில் அரசியல் கைதிகளுக்காக குரல்கொடுக்கவேண்டும் என அரசியல் கைதிகளின் பிரச்சனைகள் குறித்து கூறினோம். அப்போதும் அவர் எங்கள் கருத்துக்களைச் செவிமடுத்தரே தவிர அதுதொடர்பாக பாராளுமன்றில் கதைத்திருக்கவில்லை.
إرسال تعليق