சிங்கள ஜனாதிபதிகளால் எமக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றதன் அடிப்படையில்தான் தமிழ்ப்பொதுவேட்பாளர் தோற்றம் பெற்றிருந்தது. எனினும் தமிழ்ப்பொதுக் கட்டமைப்பிலுள்ள அரசியல் கட்சிகள் ரணில் உள்ளிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனரே ?
எங்களை நாங்கள் கட்டமைத்தல் என்ற அடிப்படையில் தான் நாங்கள் இந்த பொதுக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இது வெறுமனே ஜனாதிபதித் தேர்தலோடு கடந்துபோகின்ற ஒரு கட்டமைப்பாக இருக்காது. ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல் ஊடக தமிழ் மக்களிடையே ஒரு திரட்சியை உருவாக்கி மக்களை அணிதிரள வைப்பதுதான் எமது நோக்கம். அதேவேளையில் பொதுக்கட்டமைப்பிற்கு ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல்கள் அலுவலகத்தில் இருந்தோ அல்லது சஜித் பிரேமதாசவின் தேர்தல்கள் அலுவலகத்தில் இருந்தோ அழைப்பு வரவில்லை. ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ அலுவலகத்தில் இருந்து தான் அழைப்பு வந்தது. எனினும் நாங்கள் சிவில் சமூகங்களாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துகின்ற நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் எந்த கலந்துரையாடலிலும் பங்கேற்காதிருக்கவும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் தரப்பினரையும் சந்திக்காதிருக்கவும் தீர்மானித்திருந்தோம். ஆனால் அதேவேளையில் ஜனாதிபதி அழைக்கின்றார் என்பதற்காக பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நாங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் எதனையும் விதிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு அரசியல் தொடர்பில் - ஒழுங்கில் இருக்கிறார்கள். அவர்கள் கட்சியாக தீர்மானித்து சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாங்கள் அனுமதித்தோம். நாங்கள் அவர்களை எந்த சந்தேகத்துடனும் பார்க்கவில்லை. எங்களுக்குள் தவறான புரிதலும் இல்லை.
தமிழ்ப்பொதுக் கட்டமைப்பிலுள்ள அரசியல் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதன் உண்மைத்தன்மை குறித்து கூற முடியுமா ?
அவ்வாறான எந்த உடன்படிக்கைக்கு வாய்ப்பு இல்லை. நாங்கள் இரு நாட்டு உடன்படிக்கையைக் கூட கண்டவர்கள். உடன்படிக்கைகளால் எந்தப் பயனும் இல்லை என்பது எமக்குத் தெரியும். நாங்கள் இவ்வாறான தேர்தல் உடன்படிக்கைகள் பலவற்றால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். எனவே நாங்கள் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக உள்ளோம். உடன்படிக்கையை நம்பி எமது கட்சிகள் செல்லும் என கூறும் அளவிற்கு நம்பிக்கையும் இல்லை. சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தத்தையே தீர்வாகத் தருவேன் என்கிறார். நாங்கள் 13 ஆவது திருத்தத்தை தீர்வாகக் கேட்கவில்லை. அது ஒரு இடை வழித் தங்கல் மட்டும்தான். எனவே சஜித்துடனோ அல்லது வேறு வேட்பாளர்களுடனே உடன்படிக்கைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை.
இலங்கைத் தீவில் தமிழ்த்தேசிய இனத்தை சிங்கள இனத்திற்கு சமாந்தரமாக ஏற்றுக்கொள்ளல்தான் முதலாவது விடயம். இரண்டாவது அதிகாரங்களை பகிரவேண்டும். அதிகாரங்களைப் பகிர்தல் என்பது நிர்வாகத்தைப் பகிர்தல் அல்ல. தமிழ் மக்களின் ஆளுகைக்கான உரிமையை ஏற்றுக்கொண்டு அதிகாரங்களைப் பகிர்தல். ஆகவே தமிழ்க் கட்சிகள் அவசர உடன்படிக்கை ஒன்றுக்கு செல்வார்கள் என நான் நினைக்கவில்லை.
தமிழ்ப் பொதுக்கட்டமைப்பின் பிரதான கேட்பாடு அல்லது கொள்கை என்ன ?
நான் முன்னர் குறிப்பிட்டதுபோல ஜனாதிபதித் தேர்தலோடு இது முடிந்துவிடப்போகின்ற கட்டமைப்பு அல்ல. எமது பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு வாக்களிப்பதோடு இந்தப் பணி நிறைவு பெறாது. இது ஆரம்பம்மட்டும்தான். மக்கள் மத்தியில் நாங்கள் இந்தத் தேர்தல் ஊடாக ஒரு பரந்துபட்ட கலந்துரையாடலை உருவாக்கியிருக்கின்றோம். மக்கள் சமூக ஊடகங்கள் ஊடாகவும் அகத்திலும் புலத்திலும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இரண்டாவது மக்களுக்கு நாங்கள் கூறக்கூடிய விடயம் நாங்கள் தேசமாய்த் திரள்வோம் என்கின்ற செய்திதான். மக்களை நாங்கள் காப்பாற்றவேண்டும். மக்களை நாங்கள் நெறிப்படுத்தவேண்டும். சுரண்டல்கள், பிறழ்வுகளுக்குள் மக்கள் சிக்காமல் அவர்களை நாங்கள் வளப்படுத்தவேண்டும். எனவே எங்களுடைய மண்ணையும் அந்த மண்ணின் வளப் பயன்பாட்டையும் நாங்கள் பேணி எமது மண்ணை எமது ஆளுகைக்குள் எப்படி வைத்திருப்பது என தீர்மானிப்பது. மூன்றாவது விடயம் பொருண்மியம் வாழ்வில் உள்ளிட்ட விடயங்கள். நாங்கள் அரசாங்கத்தையும் புலம்பெயர் சமூகத்தையும் நம்பியிராது நாங்கள் எமது பொருண்மியத்தையும் வாழ்வியலையும் கட்டமைப்பது. நான்காவது விடயம் இவற்றை செய்வதற்கு நாங்கள் ஒரு மாநிலமாக உருவாகவேண்டியிருக்கின்றது. எனவே நாங்கள் தனி நாடு கோரவில்லை. எமக்கு ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவைப்படுகிறது அதை நோக்கி எமது கட்டமைப்பை நகர்த்த வேண்டியிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரால் வடக்கு கிழக்கில் குறைந்தபட்சம் 60 சத விகித வாக்குகளைப் பெற முடியுமா ? தென்னிலங்கை வேட்பாளரை விட குறைந்த விகித வாக்குகளைப் பெறுவது ஆபத்தான செய்தியை வெளிக்காட்டாதா ?
ஒரு ஆபத்தும் இங்கு இல்லை. நாங்கள் மக்களைத் திரட்டுவதற்காக இந்த விடயத்தைப் பேசுபொருளாக்கி மக்கள் மத்தியில் சிந்தனைத் தூண்டலை ஏற்படுத்துவதற்கே இந்த முயற்சியை எடுத்திருக்கின்றோம். ஆகவே எத்தனை சத விகித வாக்குகள் பெறுவார் என்ற அளவுகோல் தேவையற்றது. ஆனால் எல்லா மக்களையும் இந்த கலந்துரையாடலுக்கும் கலந்துரையாடலூடான தெளிவிற்கும் நாங்கள் மக்களைத் தூண்டவேண்டியிருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல தென்னிலங்கையில் வாழுகின்ற மக்களுக்கும் ஒரு கடப்பாடு இருக்கின்றது. அனைத்து தமிழ் மக்களையும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி வாக்குச் சாவடிக்குச் செல்லவைப்பதற்கும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கும். இதில் எந்த வித அளவீடும் வையில்லை. ஏற்கனவே நாங்கள் உருவாக்கிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் போன்றவற்றை சவாலிற்கு உட்படுத்தப்போவதில்லை. அவை மீள கேள்விக்கு உட்படுத்தவோ அல்லது மதிப்பீட்டிற்கு உட்படுத்தவே முடியாதவை. எனவே எங்கள் வேட்பாளர் வந்து அவற்றைப் பலவீனப்படுத்திவிடுவார் என்கிற வாதமும் விவாதமும் தேவையற்ற விடயங்கள். நாங்கள் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்பவற்றில் உறுதியாக இருக்கின்றோம். வாக்கு சதவிகிதம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்றால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்காத நிலையில் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணையின்றி ஜனாதிபதியாகியது எப்படி. விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களும் இலங்கையில் இருக்கிறார்கள். எனவே இங்கு வாக்கு சத விகிதம் எந்த ஆபத்தான செய்தியையும் தராது.
தமிழ்ப் பொது வேட்பாளர் ஒரு பலவீனமான வேட்பாளர் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு தங்கள் கூறப்போகும் செய்தி என்னவாக இருக்கும் ?
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளராகப் போட்டியிடும் அரியநேந்திரன் ஒரு பலவீனமான வேட்பாளர் என்பது அவர்கள் எதன் அடிப்படையில் பேச முனைகிறார்கள் எனில் மக்கள் மத்தியில் ஒரு பிரபலமானவராக இல்லை என கூறவருகின்றார்கள். இங்கு நாங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் மிக்கவர்களைக் கெண்டுவரவேண்டும் என்றால் நடிகர் நடிகைகைளைத்தான் நாங்கள் வேட்பாளராகக் கொண்டுவந்திருக்கவேண்டும். இல்லை எனில் பெரிய அடாவடித்தனங்கள் செய்து சண்டியன்களாக பிரபலம் பெற்றிருப்பவர்களைத்தான் கொண்டுவரவேண்டும். எனவே பொது வேட்பாளரின் நோக்கம் ஒரு பிரபலமானவரை வேட்பாளராக்குவதல்ல. ஆனால் அவர் சோரம்போகாதவராக இருக்கவேண்டும். அதில் அரியநேந்திரன் மிக மிகப் பொருத்தமானவராக எங்களுக்கு இருக்கின்றார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் நீண்டகாலம் தமிழ்த்தேசியத்தின் பாதையில் பயணிப்பவர். வடக்கு கிழக்கு இணைப்பிற்கான பாலமாக இருக்கக்கூடியவர். எனவே அரியநேந்திரனின் தெரிவு பொருத்தமாதே. ஆனால் வடக்கு கிழக்கை இணைக்கவேண்டும் என கூறுகின்ற பலர் அரியநேந்திரனின் தெரிவை விமர்சிப்பது முரண்நகையானது. கிழக்கில் இருந்து ஒரு பிரதிநிதியை களமிறக்குவதற்கு இவர்கள் சங்கடப்படுகின்றார்கள் என்பதுதான் உண்மை. இதனை அரியநேந்திரன் பலவீனமான வேட்பாளர் என மடைமாற்றுகிறார்கள். தமிழ்ப்பெது வேட்பாளர் என்பது ஒரு கூறியீடுதான். அரியநேந்திரன் அந்தக் குறியீடாக இருக்கிறார். அதன் ஊடாக நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி நகர்வோம். அரியநேந்திரன் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டும் பயணத்தில் ஒரு கருவியாக இருப்பார். அவர் 15 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இந்தத் தேர்தலில் பின் தேர்தல் அரசியலில் ஈடுபட ஆர்வமில்லாத ஒருவர் இதனை விட எமக்கு என்ன தகுதி வேண்டும். நாங்கள் வாக்குகளைக் கவருகின்ற கவர்ச்சிகரமான வேட்பாளரை நிறுத்த விரும்பவில்லை. அது எமது கொள்கை சார்ந்த பயணமாக ஒரு போதும் இருக்காது. நாங்கள் விபச்சார அரசியல் செய்ய முனையவில்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாக அவர்களின் உரிமைக்கான அணிதிரட்டுவதற்கான இன விடுதலை அரசியலையே மேற்கொள்ள விரும்புகின்றோம்.
0 Post a Comment:
Post a Comment