சற்று முன்
Home / செய்திகள் / 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் 01 முதல் நியமனம் – ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்கிறது அரசாங்கம்

53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் 01 முதல் நியமனம் – ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்கிறது அரசாங்கம்

“பட்டதாரிகள் மற்றும் அதற்கு சமமான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. தேவையான நிதி ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்குரிய நியமனங்கள் வழங்கும் பணி மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும். அத்துடன் அரச திணைக்களங்களில் 180 நாள்களுக்கு மேல் அமைய ஊழியர்களாக உள்ளவர்களும் தகுதியின் அடிப்படையில் நிரந்தரமாக்கப்படுவார்கள்”

இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களை கஷ்டத்திற்குள்ளாக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து விலகி முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசு கோரிக்கை முன்வைப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பட்டதாரிகள் மற்றும் அதற்கு சமமான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. தேவையான நிதி ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரச, பகுதியளவு அரச மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கேற்ப பட்டத்திற்கு பொருத்தமான தொழில் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அரசி நோக்கமாகும். உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு சுமார் 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கை மார்ச் மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகும்.

பல்வேறு அரச நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள 180 நாள்களை நிறைவு செய்துள்ளவர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலில் நிரந்தரமாக்குதல் பற்றியும் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி தகைமைகளை நிறைவுசெய்துள்ள அனைவரையும் நிரந்தர சேவையில் உள்வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றில் கல்விகற்று வரும் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுப்பது அரசின் நோக்கமாகும். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி அலுவலக சூழலில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. இது எந்தவொரு அரசும் இதற்கு முன்னர் மேற்கொள்ளாத ஒரு தீர்மானமாகும்.

பிரச்சினைகளை த் தீர்த்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை தவிர்ப்பதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் நிகழ்ச்சித்திட்டமாகும். ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் ஆரப்பாட்டக்காரர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

இன்றைய தினம் 06 குழுக்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் நடைபவனியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அனைத்து தரப்பினர்களுடனும் கலந்துரையாடுவதற்காக அதிகாரிகள் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருந்தது.

இதன்மூலம் குறித்த தரப்பினர்களுக்கு அரசு நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகளுக்காக ஒதுக்கி உள்ள காலம் நாளுக்கு நாள் தாமதமடைகின்றது. மேலும் இதன்மூலம் ஏற்படும் வீதி போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் அதிக கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களினதும் நேரம், உழைப்பு. பணம் வீணாகின்றது.

இந்த நிலமைகளை விளங்கி முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து நம்பிக்கை வைத்து அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து ஆர்ப்பாட்ட குழுக்களிடத்திலும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது – என்றுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com