சமூக பொருளாதார ஆய்வாளரும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணல்- பகுதி 02

இலங்கையின் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவுக்கு என்ன காரணம் ?
உலக சந்தையில் ஏற்பட்ட அன்னியச் செலாவணிகளின் தளம்பல்களும் உலக சந்தையில் நாணய மாற்றுவீத்தில் ஏற்பட்ட தளம்பல்களும் ஒரு காரணம். இரண்டாவது ரஷ்ய – உக்ரேன் யுத்தத்தின் காரணமாக பல்வேறு இறக்குமதிகள் ஏற்றுமதிகள் தடைப்பட்டமை, மற்றையது கொரோனப் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்றுமதி இறக்குமதிகள் தடைப்பட்டமை, கொரோனப் பெருந்தொற்றுக் காரணமாக சுற்றுலாத்துறை வருமானம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்தமை உள்ளிட்ட காரணங்களைக் கூறலாம். இவை சாதாரணமாக வெளியரங்கத்திற்காக கதைக்கின்ற விடயங்கள். ஆனால் இவற்றுக்கு அப்பால் பாரியளவான இலங்கையின அன்னியச் செலாவணி வேறு எங்கே அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றது அல்லது விரயம் செய்யப்பட்டிருக்கின்றமை. அதில் ஒன்று உடனடியாக விளைவுகள் தர முடியாத மூலதனத் திட்டங்களில் கடன்வாங்கி முதலீடு மேற்கொண்டமை. அவற்றிற்கு உதாரணமாக மத்தளை விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இரண்டாவது விடயம் பாரியளவு நிதி காணாமல் போயுள்ளது. பாரியளவு நிதி காணாமல் போனது எனும்போது இங்குதான் ஊழல் என்கின்ற ஒரு விடயம் வெளிவருகின்றது. பல்வேறு தரகுக் கூலிகள், கமிசன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஊழல் காரணமாக பல பில்லியன் டொலர்கள் காணாமல் போயுள்ளன. அவை அரசியல் வாதிகளின் பைகளுக்குள்ளும் வேறு நாடுகளின் வங்கிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.
இவை அனைத்தின் காரணமாகவும் இலங்கை பொருளாதார நெருக்கடி எனும் பொறிக்குள் விழுந்துவிட்டது. கடனையும் கட்டி கடனுக்கான வட்டியையும் செலுத்தவேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்ட நிலையில் இலங்கை தற்போது கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைக்குப் பின்னர்தான் இலங்கை சர்வதே நாணய நிதியத்தினை நாடியிருக்கிறது.
இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான பின்னணி வெறுமனே ராஜபக்ச குடும்பத்தினரால் ஏற்பட்டதல்ல. அல்லது கடந்த 10 வருடம் பதினைந்து வருடத்தில் ஏற்பட்ட நெருக்கடி அல்ல. 1945 இல் பிரித்தானியரின் கையில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து எங்களுடைய அரசியவாதிகள் இலங்கைக்கான தெளிவானதொரு பொருளாதாரக் கொள்கையினை உருவாக்காமைதான் பிரதான காரணம்.
பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் மௌனித்திருப்பதை எப்படி கருதுகிறீர்கள் ?
தென்னிலங்கையிலுள்ள மக்கள்தான் பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றில்லை. வடக்கு கிழக்கு மக்களும் அதே பொருளாராத நெருக்கடிகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த நெருக்கடிகளை ஏற்கனவே பார்த்துப் பழகியவர்கள். தென்னிலங்கை மக்களுக்குத்தான் இவை புதியன. வடக்கு கிழக்கு மக்கள் கடந்த மூப்பது வருடங்களுக்கு மேலாக இதனைவிட மோசமான பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்து அவற்றிலிருந்து மீண்டுவந்தவர்கள். இப்பாதைய பொருளதராத நெருக்கடியை எவ்வாறு தாங்கலாம் என்றும் எவ்வாறு இவற்றைச் சமாளித்து நகரலாம் என்றும் இந்தப் பொருளாதார நெருக்கடியின் உச்சபட்ச நிலை எதுவரை செல்லும் என்றும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அனுபவ ரீதியாக நன்கு தெரியும். எனவே அவர்கள் கொஞ்சம் நிதானமாக தங்கள் வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றார்கள். தென்னிலங்கைக்க இவை புதிய அனுவங்கள். நாங்கள் முன்பு பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்தபோது தென்னிலங்கை மக்கள் வேடிக்கைதானே பார்த்தார்கள் நாங்கள் தற்போது வேடிக்கை பார்ப்போம் என தமிழர்கள் இருக்கவேண்டியதில்லை. இலங்கை என்பது ஒரு கப்பல் போன்றது. தென்னிலங்கை மூழ்கினால் பின்பு வட இலங்கையும் மூழ்கிவிடும். எனவே நாங்கள் எங்களுக்கு எனவும் இந்த நாட்டுக்கு எனவும் சில பொதுவான விடங்களில் ஈடுபடத்தான் வேண்டும். இதற்காக நாங்கள் எல்லோரும் காலி முகத்திடலில் போய் நிற்கத் தேவையில்லை.
நாங்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இந்த ஆட்சிமாற்றப் போராட்டங்களில் எந்தளவிற்கு பங்குபற்றலாம் என்றதொரு கேள்வியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல்களிலும் நாங்கள் கூடிய விருப்பமில்லாதவரைத் தோற்கடிப்பதற்காக குறைந்த விருப்பமில்லாதவருக்கு ஆதரவளிப்பது வழக்கம். இதில் எதிரியின் எதிரிக்கு ஆதரவளிக்கின்ற விளையாட்டு. அப்படித்தான் நாங்கள் கடந்த காலங்களில் நாங்கள் செயற்பட்டிருக்கின்றோம். அதனைவிட எங்களுடைய பேரம்பேசல் சக்தி என்பது சிங்களக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் எழுந்து ஆட்சியில் தடுமாற்றம் நிகழும்போது அந்தத் தடுமாற்றச் சமநிலை நிரப்புபவர்களாக நாங்கள் சில தந்திரோபாய நகர்வுகளைச் செயற்பட்டிருக்கிறோம். ஆனால் அவை எமது பலத்தின் அடிப்படையில் ஏற்பட்ட நகர்வுகள் அல்ல. சிங்கள ஆட்சியாளர்கள் தங்களுக்குள் குழப்புவதால் ஏற்பட்ட ஒரு இடைவெளி. தற்போது புதிய பிரதமர் புதிய அமைச்சரவை என பேச்சுக்கள் அடிபடுகின்றன. அவ்வாறு நிகழும்போது நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க முடியும் என நினைக்கிறோம். அது உண்மையல்ல. அது நாங்கள் எங்களை நாங்களே ஏமாற்றுகின்ற செயல். இந்த இடத்தில் நாங்கள் எங்கள் சொந்தப் பலத்தை இதுவரை கட்டியெழுப்பவில்லை. அதேபோல நாங்கள் எங்கள் மக்களை வழிநடத்துகின்ற செயற்பாடுகளையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. அரசியல் சித்துவிளையாட்டுக்காக நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோமே ஒழிய விடுதலைப் புலிகளின் காலம் தவிர்ந்து எங்கள் அரசியல்வாதிகள் எங்களுக்கு ஒரு சிறந்த தலைமைத்துவத்தை கடந்த ஐம்பதுவருடங்களாக கொடுத்தது இல்லை. விடுதலைப் புலிகள் தங்கள் காலத்தில் சிறந்த தலமைத்துவத்தை வழங்கினார்கள். இப்போது அதுவும் இல்லை இதுவும் இல்லை என்ற நிலையாகிவிட்டது.