தொடரும் வழக்குகளால் திணறும் வைத்தியர் அர்ச்சுனா தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு தப்பி ஓடுவாரா ?


கடந்த 03.07.2024 அன்று சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் பிரச்சனைகளை எழுப்பி முகநூல் நேரலையை மேற்கொண்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மறுநாள் 04.07.2024 அன்று யாழ் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் தொடர்பில் தனது முகநூல் ஊடக அபாண்டமான ஆதரமற்ற அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நேரலை செய்தமைக்கு எதிராக கடந்த 09.11.2024 வெள்ளிக்கிழமை பருத்தித்துறை மாவட்ட  நீதிமன்றில் ஐந்து கோடி ரூபா மானநஷ்டம் கோரி (வழக்கு இலக்கம் -  மானநஷ்டம்  20037/24 ) தீங்கியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது முகநூல் நேரலையில் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் மருந்தகங்கள் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மருந்துகளை விநியோகம் செய்வதாக ஆதரமற்ற அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு அவர் பாராளுமன்றப் பொதுத்  தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பதாகவே 09.09.2024 அன்று வைத்திய கலாநிதி கேதீஸ்வரனின் சட்டத்தரணி ஊடாக கேள்விக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் வைத்தியர் அர்ச்சுனா அக் கேள்விக் கடிதத்திற்கு பதிலளிக்கத்தவறிய நிலையில் இரு மாதங்களின் பின் கடந்த வெள்ளிக்கிழமை 09.11.2024 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அருச்சுனாவிற்கு எதிராக 19 குற்றவியல் வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது முதலாவது குடியியல் வழக்காகும். இவ் வழக்கினை வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் சார்பில் தாக்கல் செய்த சட்டத்தரணிகளான த.டினேஸ் மற்றும் கு.குருபரன் ஆகியோர் வைத்தியர் கேதீஸ்வரனின் நோக்கம் பணம் பெறுவது அல்ல என்றும் பிழையான அவதூறு ஒன்றைச் செய்யும் நபர்கள் அவதூறு செய்தபின் சாதாரணமாக  தப்பிக்க முடியாது எனும் நோக்கின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின்  இவ் அபாண்டமான ஆதரமற்ற அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் 09.07.2024 அன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பாராளுமன்றில் உரையாற்றியிருந்ததோடு இக் குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணை நடாத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிறர் மீது இவ்வாறு அபாண்டமான ஆதரமற்ற அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About vakeesam

வாகீசம் - தூயவை துணிவோம் - உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் தமிழ் செய்தித் தளம்

0 Post a Comment:

Post a Comment