சற்று முன்
Home / Uncategorized / நேஷனல் ஹெரால்டு வழக்கு: சிறை செல்வார்களா சோனியாவும், ராகுலும் ?

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சிறை செல்வார்களா சோனியாவும், ராகுலும் ?

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்வார்களா அல்லது சிறை செல்வது என்ற முடிவை எடுப்பார்களா? என்ற குழப்பம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் நிலவுகிறது.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு ரூ.90 கோடி கடன் இருந்தது. இந்த தொகையை காங்கிரஸ் கட்சியின் பணத்தில் இருந்து வட்டியின்றி கொடுத்து, விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அடைத்தனர். அதற்கு பதிலாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

மேலும், ஹெரால்டு நிறுவனத்தின் ஒரு பகுதியை பாஸ்போர்ட் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதன்மூலம் குத்தகை நிபந்தனைகளை அவர்கள் மீறியதுடன், நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அபகரிக்க திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது” என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு தடை கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை அண்மையில் நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றம்,  டிசம்பர் 19-ம் தேதியன்று ( நாளை )  டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டடிருந்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் ஜாமீன் கோருவதில்லை என்றும், சிறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டால் அதனை ஏற்று தாங்கள் இவ்வழக்கில் அப்பாவிகள் என்பதை சிறைக்கு சென்று நிரூபிப்பது என்றும்,  மோடி அரசு அரசியல் பழிவாங்கும் நோக்குடன் செயல்படுவதாக மக்களிடம் இப்பிரச்னையை கொண்டு செல்வது என்றும் சோனியா மற்றும் ராகுல் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி சோனியாவும், ராகுலும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக இன்னும் ஒரு நாள் கூட முழுதாக இல்லாத நிலையில், இவ்வழக்கில் அவர்கள் ஜாமீன் கோருவார்களா அல்லது சிறைக்கு செல்வார்களா என்ற கேள்வி டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இது தொடர்பாக எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனைகள் காங்கிரஸ் தலைமையகத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஒருதரப்பினர் சோனியாவும், ராகுலும் ஜாமீன் கோராமல், இவ்வழக்கில் அவர்கள் அப்பாவிகள் என நிரூபிக்க சிறைக்கு செல்ல வேண்டும் என்றும், அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்ட அனைத்து காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் பிற மூத்த தலைவர்களை அழைத்து சோனியாவுடன் நீதிமன்றத்திற்கு பேரணியாக செல்வது என்ற யோசனையை முன்வைத்துள்ளனர். 

ஆனால் அவ்வாறு செய்வது நீதிமன்றத்திற்கு சவால் விடுப்பது போன்றாகும் என்பதோடு, நீதித்துறைக்கும் ஒரு தவறான தகவலை அனுப்பியது போன்றாகிவிடும் என்றும் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் கூறியதால் அந்த யோசனை கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “டிசம்பர் 19 ல் சோனியாவும், ராகுலும் சிறைக்கு செல்வது உறுதி. எனவே பிரதமர் மோடி டெல்லியில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸ் போட்டு கிலி கிளப்பி உள்ளார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com