சற்று முன்
Home / செய்திகள் / சி.வி.கே இற்குச் சிக்கல் ! சிம்மாசனம் பறிபோகுமா ?

சி.வி.கே இற்குச் சிக்கல் ! சிம்மாசனம் பறிபோகுமா ?

வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடர்ந்தும் அவைத்தலைவர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகின்றது. சி.வி.கே.சிவஞானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் கடந்த 14 ஆம் திகதி இரவு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து சென்று வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றினை ஆளுநரிடம் கையளித்திருக்கிறார்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்குமிடையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீளப் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் தொடர்ந்தும் அவைத்தலைவர் பதவியில் நீடிக்க முடியுமா என்ற வாதப்பிரதிவாதங்கள் தோற்றம்பெற்றுள்ளன.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் முதல் கைஒப்பமிட்ட அவர் தனது கரங்களினாலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கையளித்துள்ளார். முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறும் நிலையில் தனக்கு முதலமைச்சர் பதவி வழக்கப்படும் என்ற உறுதிமொழிகளின் அடிப்படையிலேயே அவர் தான் அவைத்தலைவர் என்ற தனது பதவிநிலைபற்றி கருத்திற்கொள்ளாது செயற்பட்டதாக கூறப்படுகின்றது.

சி.வி.கே. சிவஞானம் தனது அதிகார வரண்முறைகளில் இருந்து மீறி, தனது நடுநிலைத் தன்மையிலிருந்து மீறி இவ்வாறு செயற்பட்டதன் மூலம் தொடர்ந்தும் அவைத்தலைவராக நீடிக்கமுடியாத நிலை தோன்றியிருப்பதாக கருத்துவெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்த முதலமைச்சரிடம் அவைத்தலைவரின் நிலைப்பாடு குறித்துக் கேட்டபோது,

அவைத்தலைவருடைய பங்கு இன்னமும் எங்களிற்குச் சரியாக தெரியாதிருக்கின்றது. உண்மையிலலே அவையிலே ஒரு அமைச்சருக்கு எதிராகவோ ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதாக இருந்தால் அதனை அவைத்தலைவருக்குத்தான் கையளிக்கவேண்டும். இங்கு அவைத்தலைவரே தானாக முன்னின்று சிலரைத் தன்பக்கம் இழுத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுசென்று ஆளுநரிடம் கையளித்துள்ளார். அவருடைய செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்றுதான் நாம் நம்புகின்றோம். அவ்வாறு பக்கச்சார்பாக நடந்துகொண்ட ஒரு அவைத்தலைவர் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. இதனை எமது அனைத்து உறுப்பினர்களும் விவாதிக்கவிருக்கின்றார்கள். அதனடிப்படையில் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகின்றேன் என பதிலளித்திருக்கிறார்.

திகதியிடப்பட்டவாறு மாகாணசபை எதிர்வரும் 22 ஆம் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சி.வி.கே. சிவஞானம் அவைத்தலைவர் இருக்கையில் அமர்வாரா? அன்றில் பிரதி அவைத்தலைவரை அமர்த்தி அவைத்தலைவரது நிலைகுறித்து விவாதம் நடாத்தி முடிவு எட்டப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com