சற்று முன்
Home / செய்திகள் / அதிகாரம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள் – அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை

அதிகாரம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள் – அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை

ஜனநாயக ரீதியிலான சுதந்திர நாடொன்றில் மக்களால் தலைமைத்துவத்திற்கும் கட்சிக்கும் வழங்கப்படும் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இதில் தனக்குள்ள அந்தஸ்த்து யாது என்பது பற்றி சகல அரசியல்வாதிகளும் அவதானமாக செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மக்கள் வழங்கும் அதிகாரத்தை தனது குடும்பத்தை பலப்படுத்துவதற்கு அல்லது அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கு பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி வலியுறுத்தினார். நேற்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற காலஞ்சென்ற  சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 100 ஆவது ஜனன தின வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க ஒரு போதும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தவில்லை என்பதுடன், ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகளை முழுமையாக ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அவரிடம் காணப்பட்ட பொறுமை, அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் சவால்களின் முன் அஞ்சாது முன்னோக்கிச் செல்லும் விசேட பண்புகள் தற்போது அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும் முன்மாதிரியாக காணப்படுவதுடன், இது தற்போது அத்தியாவசியமான ஒரு விடயமாக காணப்படுவதாக குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க அம்மையார் நாட்டுக்காக மேற்கொண்ட வரலாற்றுப் பெறுமதி மிக்க கடமைப் பொறுப்பானது அப்போது இருந்த தேவைகளுக்கமையவும் சர்வதேச ரீதியிலும் மிக முக்கியமானதாக காணப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளின் போது நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் அன்னார் கண்ணீர் சிந்திய சந்தர்ப்பங்களை தனது அரசியல் அனுபவங்களில் காண முடிவதாக தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் செயற்படும் போது நாட்டுக்கும் மக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க குடும்பம் நாட்டை ஆட்சி செய்த யுகங்களில் குடும்பம் என்ற ரீதியில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான போதும் நாட்டுக்கு பாரிய சேவையாற்றிய முன்மாதிரியான அரசியல்வாதிகளாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதன் பின்னர் நினைவுதின வைபவம் ஆரம்பிக்கப்பட்டது.

”சிறிமாவோ” நூலின் சிங்கள, தமிழ் பிரதிகள் சுனேத்திரா பண்டாரநாயக்க அவர்களினால் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், சிறிமாவோ பண்டாரநாயக்க இணையத்தளம் ஜனாதிபதியின் கரங்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் நூற்றாண்டு ஜனன தின வைபவத்திற்காக வெளியிடப்பட்ட நினைவு முத்திரையினை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் நூற்றாண்டு ஜனன தின வைபவத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு ஜனாதிபதி, பரிசில்களை வழங்கி வைத்தார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க, பண்டாரநாயக்க குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com