சற்று முன்
Home / செய்திகள் / வாள்வெட்டுக் குழுக்களின் தோற்றம் யாழ்ப்பாணத்தை சீர்குலைக்கும் அரசின் திட்டமிட்ட சதியே

வாள்வெட்டுக் குழுக்களின் தோற்றம் யாழ்ப்பாணத்தை சீர்குலைக்கும் அரசின் திட்டமிட்ட சதியே

உலகிலேயே பலம் வாய்ந்த அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக மார்தட்டுகின்ற இலங்கை அரசினால் வாள்வெட்டுக் கும்பலை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கேள்வியெழுப்பியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் உறப்பினருமான விந்தன் கனகரத்தினம் தமிழ் மக்களின் அடி நாதமாக விளங்கும் யாழ்ப்பாணத்தை சீர்குலைக்கும் வகையிலையே குற்றச் செயல்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (25) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே விந்தன் கனகரட்னம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

யாழ் மாவட்டத்தில் கொள்ளைகள், வாள்வெட்டுச் சம்பவங்கள் போன்ற குற்றந் செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவை தொடர்பில் கடந்த வாரங்களில் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் யாழிற்கு வந்து ஆராய்ந்திருந்தனர். அத்தோடு இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஆனாலும் அத்தகைய குற்றச் செயல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
முன்னொரு காலத்தில் நாட்டையும் மக்களையும் மண்ணையும் கலை கலாச்சாரத்தையும் பாதுப்பதற்காக மன்னர்கள் வாள் ஏந்தினார்கள். ஆனால் தற்போது எங்கள் மக்களை தாக்குவதற்காக வாள் ஏந்துகின்ற துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டில் 25 மாவட்டங்கள் இருக்கின்ற போது யாழ் மாவட்டத்தில் மட்டும் இவ்வாறன குற்றச் செயல்கள் நடைபெறுவது ஏன்? இவை தொடர்ச்சியாக அரங்கேறுவதன் பிண்ணணி என்ன? இத்தகைய நிலைமைகள் எமக்குப் பலத்த சந்தேகத்தை தற்போது ஏற்படுத்துகின்றன.

இங்குள்ள இளைஞர்கள் மது போதைகள் மற்றும் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி அவர்களின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாக எமது இளைஞர்களை திசை திருப்பி, மக்களை அச்சத்தில் வைத்திருந்து கல்வி கலாச்சாரத்தை அழித்து இருப்பை இல்லாமல் செய்வதற்கான சதி முயற்சிகளாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
தமிழர் வாழ்வின் அடிநாதமாக விளங்கும் யாழ்ப்பாண மண்ணிலே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக தாம் நினைக்கின்ற பலவற்றைச் சாதிக்கலாமென பெரும்பான்மையினத்தவர்கள் கருதலாம். இதற்குப் பின்னர் இருப்பவர்கள் யார் என்பதை நோக்குவோமாக இருந்தால் இதன் ஏவலாலிகள் பொறுப்பாளிகள் அரசாங்கமாகவே இருக்கும். யாழில் சட்டம் ஒழுங்கு சிரான முறையில் இருப்பதாக தொடர்ந்தும் அரசு கூறினாலும் வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆகவே இவை குறித்து அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு முழுக்க முழுக்க அரசாங்கமே பொறுப் பேற்க வேண்டும். உலகிலேயே வலிமை மிக்கதான இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததாக மார்தட்டுகின்ற இலங்கை அரசினால் ஏன் இந்த வாள்வெட்டுக் கும்பலைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கின்றதென்ற கேள்வி எழுகின்றது.
இவற்றையெல்லாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போமாக இருந்தால் இதன் பின்னணி பலத்த சந்தேகங்களையே ஏற்படுத்தும். இவ்வாறான நிலைமைகள் தொடர்வது எமது மக்களுக்கு பலத்த பாதிப்புக்களையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும். ஆகவே நாம் எமது கலை கலாச்சார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களோ இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கமைய நாம் அனைவரும் இதனை விளங்கிக் கொண்டு ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com