சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பு – வடக்கு மாகாணசபையில் தீர்மானம்

வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பு – வடக்கு மாகாணசபையில் தீர்மானம்

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோருதலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையின் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் 131வது அமர்வு ​நேற்று (11) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது, கடந்த அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கோர வேண்டுமென்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்றும் கடந்த 130வது அமர்வின் போது, பிரேரணையை முன்மொழிந்திருந்தார்.

அந்தப் பிரேரணையில் மொழி நடைகள் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பதனால், மொழி நடை மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரேரணையில் மொழி நடை மாற்றம் செய்யப்பட்டு இன்றைய அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மொழி நடைமாற்றம் செய்யப்பட்ட பிரேரணையை சபையில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் சம்ர்ப்பித்திருந்தார். அந்த பிரேரணையில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 5 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

1 – இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் 30/1யும் 34/1 யும் முழுமையாக அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பாமையால், இலங்கை மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை 2019 மார்ச் மாதத்திற்கு முன்னர் முழுமையாக அமுல்படுத்த தவறுமாயின், இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் நியாயசபைக்கோ கொண்டு செல்வதன் பொருட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கும் கொண்டு செல்லுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளை இச்சபையானது கோருகின்றது.

2 – யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தொடரும் கட்டுப்பாடில்லாத தடுத்துவைப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை மற்றும் இத்தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்திலுள்ள தனியார் காணிகளில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தரித்திருக்கின்றமை ஆகியவற்றைக் கண்காணிப்பதன் பொருட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது.

3 – கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது.

4 – யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினருக்கு நுழைவிசைவை நிராகரிக்குமாறும், ஐ.நா உயர் ஸ்தானிகரால் மனித உரிமைகளுக்கான 2018 பெப்ரவரி 26 – மார்ச் 23 ஆம் திகதியிடப்பட்ட அவருடைய அறிக்கையில் முன்மொழியப்பட்டவாறான,

சர்வதேச நியாயாதிக்கத்தின் பிரயோகம் அடங்கலாக ஏனைய வழிமுறைகளை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் சகல அங்கத்துவ நாடுகளையும் இச்சபையானது கோருகின்றது.

5 – இலங்கை, தமிழ் பேசும் மக்களுக்குரிய சமத்துவமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு விரும்பாமையாலும், தவறியுள்ளமையாலும், கடந்தகால வன்முறையின் மீளெழுகையைத் தவிர்ப்பதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியையும் முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளமையாலும், ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையைத் தீர்மானிப்பதன் பொருட்டு இத்தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை இச்சபையானது கோருகின்றது. என அந்த பிரேரணையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com