சற்று முன்
Home / செய்திகள் / யாழ் நீதிமன்றில் ஆஜராகிறார் கோத்தா

யாழ் நீதிமன்றில் ஆஜராகிறார் கோத்தா

Gotabaya Rajapaksa

காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் விசாரணையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முன்னிலையாகிச் சாட்சியமளிப்பார்.

இந்தத் தகவலை அவரது சட்ட ஆலோசகர் அணி தெரிவித்தது என்று அரச ஆங்கில வார இதழான ‘த சண்டே’ ஒப்சேவர் வெளியிட்டுள்ளது.

எனினும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, மெதமுலானவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைப்பதற்கு 33.9 மில்லியன் ரூபா அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் வழக்கு நாளாந்த விசாரணைக்காக ஜூன் 19ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளது.

மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் நடைபெறும் அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, கட்டாயம் முன்னிலையாக வேண்டும்.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ச முற்படுவார் என்று அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஜூன் 21ஆம் திகதி முன்னிலையாகிச் சாட்சியமளிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணிகள், வழக்குக் கோவை முழுமையாகப் படித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ். நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் ஆரம்பத்தில் சாட்சியமளித்திருந்தனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனிசாமு பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 3ஆம் திகதி விளக்கத்துக்கு வந்தது.

இதன்போது சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி அமரசிங்க முற்பட்டார்.

சாட்சி நேரில் மன்றில் முன்னிலையாக முடியவில்லை. அவர் மன்றால் தீர்மானிக்கப்பட்ட அடுத்த தவணையில் முற்பட்டு சாட்சியமளிப்பார் என்று சட்டத்தரணி கூறினார்.

அதனால் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதிவரை ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com